மேலும்

இந்திய-சிறிலங்கா ஒப்பந்தமும், இலங்கைத் தீவில் இந்தியாவின் 30 ஆண்டு இராஜதந்திரமும்

ruthrakumaranஇந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடையும் இந்நேரத்தில் ஈழத்தமிழ்த் தேசம் தனது விடுதலைப் போராட்டப் பாதையில் இந்நிகழ்வின் தாக்கத்தையும் அதனுடன் கூடவந்த இடர்களையும் அழிவுகளையும் அசைபோட்டுப் பார்க்க வேண்டிய நிலையிலுள்ளது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறி இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி அவர்களாலும் சிறிலங்கா அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவாலும் 29.7.1987 அன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட இவ் ஒப்பந்தம் இராஜதந்திரம் என்ற பெயரில் இந்திய தேசத்தின் புவிசார் நலன்கள் அடையப்படுவதை மனதில் கொண்டதாய் அமைந்திருந்தது.

இவ் ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டே சிறிலங்கா அரசியலமைப்பில் 13 வது திருத்தம் உட்புகுத்தப்பட்டு மாகாணசபைகள் அறிமுகம் செய்யப்பட்டன. தமிழர்  தாயகம்  என்ற கோட்பாட்டை நிலை நிறுத்த அவசியமான வடக்கும் கிழக்கும் இணைந்த நிலப்பரப்பும் ஏற்றுத்கொள்ளப் பட்டது.

இதே நேரத்தில் இலங்கைத் தீவில் தனது புவிசார் அரசியல் நலன்களை அடைந்து கொள்வதனை நோக்காகக் கொண்டு இந்திய சிறிலங்கா ஒப்பந்தத்துடன் இணைந்த வகையில் பின்னிணைப்புக்களை உள்ளடக்கும் ஏற்பாடுகளையும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

பனிப்போர்க்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இப் பின்னிணைப்புக் கடித ஏற்பாடு இலங்கைத் தீவில் இந்தியாவை மீறிய வகையில் வேறு அந்நிய நாடுகள் ஆதிக்கமோ அல்லது செல்வாக்கோ செலுத்தாமல் தடுக்கும் நோக்கத்தினையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

இந்திய -சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த  இன்றைய நாளில் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டமையின் நோக்கம் ஏதும் நிறைவேறியிருக்கிறதா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியவர்களாக உள்ளோம்.

ஒப்பந்தம் சொல்ல வந்த அத்தனை தனித்தனி அம்சங்களும் புறக்கணிக்கப் பட்டதோடு தமிழீழ மக்கள்மீது நடத்தப்பட்ட கொடிய யுத்தமும் இன்றுவரை தொடரும் இனப்படுகொலையும் அவர்கள் மேல் திணிக்கப் பட்டுள்ளன. மாகாணசபைகள் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பது தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட இலங்கைத் தீவில் கடந்த 30 ஆண்டு காலத்தின்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சீனாவின் ஆதிக்கமும் செல்வாக்கும் வலுவடைந்துள்ளன.

ராஜபக்ச ஆட்சியில் மட்டுமல்லாது சிறிசேன-ரணில் கூட்டாட்சியிலும் சிறிலங்காவுடனான சீன நட்புறவு மேலும் நெருக்கமடைந்துள்ளதோடு சீனாவினது ஒரு சாலை – ஒரு இணைப்பு என்ற பெயரில் ஆசிய கண்டத்தையே சுற்றி வளைக்கவுள்ள பெருந்தெருத் திட்டத்தை இந்தியா புறக்கணிக்கும் அதே வேளை, சிறிலங்கா ஆர்வத்துடன் ஏற்று இணைந்து கொண்டுள்ளதும் கவனத்துக்குரியது.

இலங்கைத் தீவில் தனது புவிசார் நலன்களை அடைந்து கொள்வதில் இந்தியா தோல்வியடைந்து வருகின்ற உண்மையும் ஈழத் தமிழ் மக்கள் மீதும் மண் மீதும் தொடர்ச்சியாக மேலெடுக்கப் படும் இனப்படுகொலைத் திட்டத்தினை இந்திய தேசம் கண்டும் காணாமல் நடந்து கொள்வதும் எமக்குப் பெரும் ஏமாற்றமாகவே உள்ளன.

இம் முப்பது ஆண்டுகால நிறைவினைக் குறிக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆய்வுக் கூட்டத் தொடர் ஒன்றினை முன்னெடுத்து அரசியல் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என்போரைக்கொண்டு அரசியல் ஆய்வினையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகளையும் பற்றிப் பேசவுள்ளது.

‘தோற்றது ஒப்பந்தமா அல்லது இந்திய பாதுகாப்பா?’ என்ற தலைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையத்தினால் சென்னையில் முன்னெடுக்கப் படும் கருத்தரங்கம் உட்பட இவ் ஆய்வுகளும் உரையாடல்களும் எமது இனத்தின் முழுமையான விடுதலைக்கான படிக்கற்களாக அமையட்டுமென வாழ்த்துகிறேன். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *