மேலும்

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முன்னாள் போராளி?

ssp-stanislosநல்லூரில் நேற்று மாலை நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் சூத்திரதாரி, சிறிலங்கா காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் புங்குடுதீவு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்றும், கொலை வழக்கு ஒன்று தொடர்பாக இவர் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை இன்றிரவுக்குள் கைது செய்து விடுவோம் என்று யாழ். பிராந்திய காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.

”இது நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. நீதிபதியின் மெய்க்காவலருடன் முரண்பட்டுக் கொண்டே, குறித்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

அவர் ஒரு முன்னாள் போராளி. இன்றிரவுக்குள் அவரைக் கைது செய்து விடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த- சார்ஜன்ட் ஹேமச்சந்திரவின் உடலை பார்வையிட வந்த குடும்பத்தினரின் முன்பாக, நீதிபதி இளஞ்செழியன் துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார். அத்துடன், அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கோரினார்.

judge cry

இதையடுத்து, உடன்வந்த மன்னார் மற்றும் மல்லாகம் நீதிவான்கள், அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர்.

காயமடைந்த காவலரைப் பார்வையிட்டும் நீதிபதி துக்கம் தாங்க முடியாமல் அழுதார். இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

அதேவேளை, நேற்று மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில், படுகாயமடைந்து மரணமான, சிறிலங்கா காவல்துறை சார்ஜன்ட் ஹேமச்சந்திரவின் உடல் இன்று உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

இதையடுத்து. யாழ். காவல்நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல், சொந்த இடமான சிலாபத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதிபதி இளஞ்செழியனுடன் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

scooter

அதேவேளை, துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் தப்பிச்சென்ற உந்துருளி அரியாலைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. வீதியால் சென்று கொண்டிருந்தவரிடம் பறித்துச் செல்லப்பட்ட உந்துருளியே இது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நாளை வடக்கில் தனியார் பேருந்துகள் ஓடாது என்று, வட மாகாண தனியார் போக்குவரத்துச் சங்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *