மேலும்

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணம் செல்கிறார் – முதலமைச்சருடனும் சந்திப்பு

vivian balakrishnanஐந்து நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொண்டு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் ஐந்து நாட்கள் பயணமாக நேற்று சிறிலங்காவை வந்தடைந்தார்.

அவர் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, அவரது அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இதையடுத்து இருவரும் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் அமைச்சர்கள் பலரையும், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சந்திக்கவுள்ளார்.

அத்துடன், வடக்கிலும் பல்வேறு சந்திப்புகள், நிகழ்வுகளிலும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் வணிகர் கழகத்தைச் சேர்ந்த வர்த்தகர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

சிங்கப்பூர் தேசிய நூலக சபையினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நூல்களை யாழ். பொதுநூலகத்துக்கு கையளிக்கும் நிகழ்விலும் பங்கேற்கவுள்ள, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், யாழ். போதனா மருத்துவமனையின் எலும்பியல் விடுதிப் பகுதியில் மரக்கன்று ஒன்றையும் நாட்டுவார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில், லீ அறக்கட்டளையின் சிங் சுகாதார எலும்பியல் அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் விவியன் பாலகிருஸ்ணன் பங்கேற்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *