மேலும்

புதிய அரசியலமைப்பு குறித்த மக்களின் ஆணை நிறைவேற்றப்படும் – ராஜித சேனாரத்ன

rajitha senaratneபுதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ நாட்டுக்குத் தேவையில்லை என்று பௌத்த பீடங்களும் சங்க சபாக்களும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், அரசியலமைப்பு மாற்றத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை நிறைவேற்றப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“அனைவரும், ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே அரசியலமைப்பு  மாற்றம் கொண்டு வரப்படும்.

எத்தகைய எதிர்ப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், முறையான விதத்தில் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு 62 இலட்சம் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அரசாங்கம் அதற்கு ஏற்பவே செயற்படும்.

சிறிலங்காவில் மட்டுமன்றி உலக நாடுகளில் அரசியலமைப்புகள் காலத்திற்குக் காலம் மாற்றப்பட்டே வந்துள்ளன.

சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் அவரது அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதற்காகவே புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்தார். அதே போன்றே ஜே.ஆர். ஜெயவர்த்தனவும், மகிந்த ராஜபக்சவும் தமது அதிகாரத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே புதிய அரசியலமைப்புகளைக் கொண்டு வந்தனர்.

எனினும் தற்போதைய அரசாங்கத்திற்கு அவ்வாறான தேவை கிடையாது. மைத்திரிபால சிறிசேன தம்மிடமுள்ள அதிகாரங்களையும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கின்றார். இம்முறை புதிய அரசியலமைப்பு மக்களுக்காகவே கொண்டு வரப்படுகிறது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்புகின்ற போதும் அது தொடர்பான இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவுமில்லை. அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை.

ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டு அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. கூட்டு எதிரணியினர் இந்தக் குழுக்கள் சிலவற்றின் செயலாளர்களாகவும் தலைவர்களாகவும் இருந்து கொண்டு வெளியில் மக்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் அங்கு கலந்துரையாடியவற்றை திரிபுபடுத்தி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாத நிலையில் புதிய அரசியலமைப்பை விமர்சிப்பதும் அதன் மீது குற்றம் சாட்டுவதும் எவ்விதத்திலும் நியாயமானதல்ல.

புதிய அரசியலமைப்பின் தேவை இப்போது நாட்டிற்கு உள்ளது. நாம் இன்னுமொரு 2500 வருடங்களுக்கு பின்னோக்கிச் செல்ல முடியாது. எவரும் விமர்சிப்பது போல் புதிய அரசியலமைப்பு சடுதியாக கொண்டுவரப்பட மாட்டாது.  அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலேயே இது அமையும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் இந்த விடயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறார். சிங்கள மக்களின் ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கான பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இது வரவேற்கத்தக்க விடயம். என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *