மேலும்

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் சிறிலங்கா

sri lanka-flood (1)சிறிலங்காவில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இலட்சக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளன.

2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான இந்த பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் 91 பேர் பலியானதாகவும், 100 பேரைக் காணவில்லை என்றும் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நேற்று மாலை அறிவித்திருந்தது.

இந்த இயற்கை அனர்த்தங்களால் 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், கொழும்பு, கம்பகா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, ஆகிய மாவட்டங்களிலேயே மோசமான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் 400 வீடுகள் முற்றாகவே அழிந்துள்ளன. இரத்தினபுரியில் அதிகபட்சமாக 46 பேரும், களுத்துறையில் 38 பேரும் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

களனி கங்கையின் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதால், வெள்ள நிலைமைகள் மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sri lanka-flood (1)

sri lanka-flood (3)

sri lanka-flood (4)

sri lanka-flood (5)

sri lanka-flood (7)

சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று வெளியிட்ட தகவலின்படி, 24 மணித்தியாலங்களில் குகுலேகங்கவில், 553 மி.மீ மழை வீழ்ச்சி பதிவாகியதாக கூறியிருந்தது. மேலும் பல இடங்களில் 300 மி.மீ இற்கும் அதிகமான மழை வீ்ழ்ச்சி பதிவாகியது,

எனினும் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள தகவலில், கடந்த 21 மணித்தியாலங்களில், மழை வீழ்ச்சி குறைந்திருப்பதாகவும், அதிகபட்சமாக இரத்தினபுரியில் 68 மி.மீ மழையே பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், 100 மீ.மீ வரையான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் முப்படையினரும் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத்தின் 2 பிரிகேட்கள், 13 பற்றாலியன்களைச் சேர்ந்த 300 குழுக்கள் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடற்படை 21 படகுகளுடன் 250 வரையான படையினரை மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தியுள்ளது.

விமானப்படையின் எம்ஐ-17, பெல் ரகங்களைச் சேர்ந்த ஆறு உலங்குவானூர்திகள் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் ஒரு பீச் கிராப்ட் விமானம் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், அவசிய உதவி, நிவாரணப் பணிகளில் முப்படையினரையும் ஈடுபடுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். உதவிப் பணிகளுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு சிறிலங்கா நிதியமைச்சருக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *