கண்டியில் பழுதடைந்து நிற்கும் இந்தியப் பிரதமரின் சிறப்பு உலங்குவானூர்தி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உலங்குவானூர்திகளில் ஒன்று பழுதடைந்த நிலையில் கண்டியில் தரித்து நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் கொழும்பில் இருந்து கண்டி மற்றும் டிக்கோயாவுக்கு பயணம் செய்வதற்காகவும், அவரது பாதுகாப்பு அணியினரின் பயணங்களுக்காகவும், மாற்று ஒழுங்குகளுக்காகவும் நான்கு எம்.ஐ.-17 உலங்குவானூர்திகள் புதுடெல்லியில் இருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்தியப் பிரதமர் நேற்றுமுன்தினம் மாலையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு கண்டியில் இருந்து புறப்பட்டுச் செல்ல முற்பட்ட போது, அவரது அணியில் இருந்த உலங்குவானூர்தி ஒன்று தொழில்நுட்பக் கோளாறினால் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, ஏனைய உலங்குவானூர்திகள் மூலம் இந்தியப் பிரதமரும், அவரது பாதுகாப்பு அணியினரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு இன்னமும் சீர் செய்யப்படாத நிலையில் கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இந்திய விமானப்படையின் எம்.ஐ.17 உலங்குவானூர்தி இன்னமும் தரித்து நிற்கிறது.
உலங்குவானூர்தியில் ஏற்பட்ட கோளாறைக் கண்டுபிடிப்பதற்கு சிறிலங்கா விமானப்படை உதவியுள்ள போதிலும், உதிரிப்பாகங்களை இந்தியாவில் இருந்து எடுத்து வருவதற்காக அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.