மேலும்

சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது – சீனா

Chinese_flagசிறிலங்காவுடனான இராணுவ உறவு பிராந்திய அமைதி மற்றும் உறுதிப்பாட்டுக்கு நல்லது என்று சீனா தெரிவித்துள்ளது. கொழும்பில் சீன நீர்மூழ்கியைத் தரிப்பதற்கு சிறிலங்கா அனுமதி மறுத்த பின்னர் சீன பாதுகாப்பு அமைச்சு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.

சீன நீர்மூழ்கிக்கு சிறிலங்கா அனுமதி மறுத்ததாக செய்தி வெளியிட்டிருந்த ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு சீன பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அதில், நீர்மூழ்கியின் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக நேரடியாக எதுவும் குறிப்பிடப்படாத போதிலும், கடற்கொள்ளை எதிர்ப்பு  அணியில் ஈடுபட்டுள்ள நீர்மூழ்கிகளுக்கு அவற்றின் பயணப்பாதையில் மீள் வழங்கலை மேற்கொள்வதற்கான ஒரு இடம் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஏடன் வளைகுடாவிலும், சோமாலிய கடல்பரப்பிலும்,  அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளின் கீழ் பாதுகாப்பில் பணியில் ஈடுபட்டுள்ள  எமது இராணுவ நீர்மூழ்கிகளுக்கு விநியோகங்களை மேற்கொள்வதற்கான தரிப்பிடம் தேவை.” என்று அந்த அறிக்கையில் சீனா கூறியுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் சீன- சிறிலங்கா இராணுவங்கள் பரஸ்பர பயணங்கள், பயிற்சி போன்ற துறைகளில் பயனுள்ள, காத்திரமான ஒத்துழைப்பை கொண்டுள்ளன.

சீன- சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பானது, பிராந்தியத்தின் அமைதி மற்றும் உறுதிப்பாட்டுக்கு நன்மையளிக்கிறது.

இது மூன்றாவது தரப்பு ஒன்றை இலக்காக கொண்டதல்ல. மூன்றாவது தரப்பு ஒன்று இதில் தலையீடு செய்யவும் கூடாது.” என்றும் சீன பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *