மேலும்

தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி முறையில் நியாயமான தீர்வு – மோடியிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு

TNA-modi (3)தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான நியாயமான தீர்வு  ஒன்று வழங்கப்பட வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் முடிவுக் கட்டத்தில் நேற்று மாலை 5.55 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். மிகக் குறுகிய நேரமே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தியப் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்-

“அரசியலமைப்பு மாற்றம் சம்பந்தமான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே இடம்பெறுகின்றன. 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு வருமென்று எதிர்பார்த்திருந்தோம். இந்த வருடத்திற்குள்ளாவது ஒரு தீர்வு வரவேண்டும்.

வடக்கும் கிழக்கும் தமிழர்கள் பாரம்பரியமாக, பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்கள். இங்கு சமஷ்டி  முறையிலான ஒரு நியாயமான தீர்வு அமைய வேண்டும்.

அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமாக கூறப்போனால் ஒரு கையால் கொடுத்து விட்டு மறு கையால் எடுக்கும் நிலைமையையே காணமுடிகின்றது. ஆகவே, குறைந்தது இந்தியாவில் இருக்கக்கூடிய காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களாவது இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன் காணாமல் போனவர்கள் விவகாரம், இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை, இளைஞர்களுக்கான வேலையில்லாப் பிரச்சினை என்பன தொடர்பாகவும் இந்தியப் பிரதமருக்கு இரா.சம்பந்தன் எடுத்துக் கூறினார்.

வடக்கு, கிழக்கில் பெரியளவில் முதலீடுகளைச் செய்து வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்க இந்தியா உதவ வேண்டுமென்றும் அவர் இந்தியப் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கையில், “இவை சம்பந்தமாக நாம் ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்திடம் கூறியிருக்கின்றோம். சிறிலங்கா அரசாங்கம் மிகவும் மெதுவாகவே நகர்வதை நாங்கள் உணர்கின்றோம்.

சிறிலங்கா அரசாங்கம் விடயத்தில் தாமதித்துக் கொண்டிருந்தால் அனைத்துலகம் அழுத்தங்களைக் கொடுக்கும்.

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரியளவில் உதவ இருக்கின்றோம். இது சம்பந்தமாக அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விரிவாக பேச்சு நடத்தியுள்ளேன்.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசுமீது அழுத்தங்களைக் கொடுத்து அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பு விவகாரத்தில் இரா.சம்பந்தனின் பொறுப்புணர்வான அணுகுமுறையை இந்தியா வரவேற்பதாகவும், இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்தியப் பிரதமருடன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *