மேலும்

சிறிலங்காவில் அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் நரேந்திர மோடி

maithri-modiசிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களுடன் முறைப்படியான அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார்.

ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் சென்றடைவார்.

அங்கிருந்து வாகனம் மூலம் கங்காராமய விகாரைக்குச் சென்று, சிறிலங்கா பிரதமருடன் இணைந்து அலங்கார விளக்குகளை திறந்து வைப்பார்.

அதன் பின்னர் தாஜ் சமுத்ரா விடுதிக்குச் சென்று ஓய்வெடுத்து விட்டு, இரவு 8.20 மணியளவில் சிறிலங்கா அதிபர் மாளிகைக்குச் செல்வார்.

அங்கு இந்தியப்பிரதமருக்கு சிறிலங்கா அதிபர் இராப்போசன விருந்து அளிப்பார். இரவு 10 மணிக்கு மேல் தாஜ் சமுத்ரா விடுதிக்குத் திரும்பும் இந்தியப் பிரதமர், நாளை காலை பணடாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடக்கும் வெசாக் நிகழ்வில் பங்கேற்போர்.

அதன் பின்னர், ஹற்றன் மற்றும் கண்டிக்கான பயணங்களை மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர், நாளை பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நாடு திரும்பவுள்ளார்.

இந்தியப் பிரதமரின் பயணம் தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தகவல் வெளியிட்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் சஞ்சய் பாண்டா,

“சிறிலங்காவில் முறைப்படியான பேச்சுக்களை இந்தியப் பிரதமர் நடத்தமாட்டார், ஆனால் சிறிலங்கா அரசதலைவர்களுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்துவார்.

உறவுகள் குறித்து மீளாய்வு செய்யப்படும். இந்தப் பயணத்தின் போது கலந்துரையாடப்படுவதற்கான முக்கியமான விவகாரம் எதுவும் அடையாளப்படுத்தப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *