மேலும்

நிலைமாறும் உலகில் இந்திய – சிறிலங்கா உறவு – லோகன் பரமசாமி

india-sri-lankaசில மாதங்களு க்கு முன்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை தலைவர் சயிட் அல்-ஹுசைன் அவர்கள் தனது அறிக்கையில் மாவீரர் தினம் இலங்கையில் எல்லோரும் இணைந்து அனுட்டிக்கும்படியாக இல்லை என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.

அவர் குறிப்பிட்டது தமிழர்கள் எல்லோரும் என்று எடுத்து கொள்ள முடியாது. ஏனெனில் கடந்த கால மனித உரிமை சபை அறிக்கைகளில் தமிழ் மக்கள் என்ற சொல் பிரயோகிக்கப்படுவது இல்லை. சயிட் ஹுசைன் மட்டுமல்ல மேலை நாட்டு  இராசதந்திரிகள் பலரும்,  தமிழர் அவைகளிலும், ஒன்று கூடல்களிலும் பேசும்போது தேசிய அரசு என்ற எண்ணப்பாட்டை உருவாக்கும் வகையில் பேச்சுகளில் பயன்படுத்துவது கவனிக்கதக்கது.

ஒரு மனித குழு உணர்வு நிலையில் ஒரு சமூகமாக, ஒரே கலாச்சாரத்தை கொண்டதாகவும் துல்லியமாக வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடையதாகவும்,  மொழியால்இணைந்ததாகவும், பொதுவான கடந்த கால அனுபவங்கள், எதிர்காலம் குறித்த ஒரே சிந்தனைகள் ஆகியவற்றுடன் தம்மை தாமே ஆளும் எண்ணம் கொண்டு செயற்படுவதாகவும் இருக்குமிடத்து அந்த மனிதக்குழு சுயநிர்ணய உரிமைக்கு தகுதியானதாக மேலைதேய  அரசியல் மரபின் ஊடாக பார்க்கப்படுகிறது.

ஆனால் தேசிய அரசு என்பது பல இனக்குழுக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு அரசியல் எல்லைக்குள் செயற்கையாக அல்லது ஒப்பந்த சரத்துக்கள், சட்டயாப்புகள் மூலம் உருவாக்கப்பட்டஒரு அரசை (பொதுவாக இந்த அரசில் ஆட்சி செய்பவர்கள் அதிக சனத்தொகை கொண்ட இனக்குழுவாகவே இருக்க முடியும்) கொண்டது ஆகும். சிறிலங்காவில் தேசிய அரசு தான் இருக்க முடியும் என்பதில் மேலை நாடுகள் உறுதி கொண்டிருப்பதையும் ஆதிக்கம் செலுத்துவதையும் ஏற்கனவே கண்டோம்.

இதில் ஒரு பகுதியாகவே சயிட்அல் – ஹு சைன் அவர்கள் தமிழர்கள் மட்டும் அனுட்டிக்கும் மாவீரர் நாள் தமிழ் மக்களுக்கான தனித்துவத்தை மட்டும் எடுத்து காட்டுவதாக அமைவதற்கு பதிலாக அகில இலங்கையும் அனுட்டிக்கக் கூடிய நாள் ஒன்றை தேர்ந்தெடுப்பதன் ஊடாக யுத்தத்தின் வேதனையை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் அமையும் அதேவேளை தேசிய அரசையும் எல்லோரும் ஏற்று கொள்ளத்தக்கதாக வைக்க முடியும், இதன் மூலம் சமூகங்கள் ஒருவரை ஒருவர் மன்னித்து போகவும் வாய்ப்பிருப்பதாக காண்கிறார்.zeid-colombo

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே மே மாத நடுப்பகுதியில் தமிழர்கள் யுத்தத்தின் வேதனையால்துவண்டனர். அதே மாதத்தில் சிங்கள மக்கள் வெற்றி களியாட்டங்கள் போட்டனர். இன்று வரை  மே மாதத்தைசிங்கள மக்களும் அரசும், தேசிய அரசுக்குள் இருக்கும் ஒரு இனத்திற்கு எதிராக வெற்றி பெற்ற மாதமாகவே பார்க்கின்றனர்.

சிறிலங்கா தரப்பில் இதுவரையில் தாம் தமிழினத்திற்கு எதிராக போராடி வெற்றி பெற்று விட்டோம் என்பது தான் அனைத்து களியாட்டத்தினதும், வெற்றி அணிவகுப்புகளுக்கும் இராணுவ மாநாடுகளுக்கும் புத்தக வெளியீடுகளுக்கும்கருப்பொருளாக இருந்து வருகிறது.

ஆனால் இன்றுமேலாதிக்க நோக்குடன் தமது தேசிய அரசின் ஒருபகுதியாக உரிமை பாராட்டும் தமிழர் பிரதேசம் ஏன் அவ்வளவு பிரயத்தனத்தை கொடுத்து வெற்றிபெற காரணமாய் இருந்தது என்ற சிந்தனைக்கோ அல்லது எத்தனை ஆயிரம் சிங்கள இளைஞர்கள் யுவதிகள் இந்த வெற்றிக்கு தமது உயிர்களை பறி கொடுத்தார்கள் என்பது பற்றியோ எந்த ஒரு கணக்கெடுப்பும் இல்லை, கணிப்பும்இல்லை.

இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மே மாதம் சிறிலங்கா பயணமாவதற்கு ஏற்பாடாகி உள்ளது.  வெசாக் கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கவுள்ளார். நாடு முழுவதும் கொண்டாட ஏற்பாடாகி இருக்கும் வெசாக் கொண்டாட்டங்கள் பௌத்தசிங்களத்தின் விழாவாக இருந்த போதிலும், இந்து தேசியவாத கொள்கையை முன்வைத்து ஆட்சி ஏறிய பிரதமர் மோடி அவர்கள் பௌத்த சிந்தனைகளில் தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர் என்பது செய்தியாக உள்ளது.

உண்மையில் இந்திய-சிறிலங்கா உறவின் ஒருபகுதியாக பௌத்தத்தின் மீதான இந்திய பிரதமரின் ஆர்வம் சீன விரிவாக்கத்திற்கு எதிரான மூலோபாயமாக மாறி இருப்பது மிகவும் சாதூரியமானதாக பேசப்படுகிறது.

மறுபுறத்தில்இந்தியா தெற்காசிய பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடு என்ற வகையில்பௌத்தம் கிழக்காசிய நாடுகள் பலவற்றையும் தனது செல்வாக்கின் கீழ் கொண்டிருப்பதற்கான தந்திரமாக பயன்படுத்துவதுடன்சீனாவுடன் நல்ல உறவை வைத்து கொள்ளும் நோக்குடனும் இது அமையலாம் என்பதுவும் ஒரு பார்வையாக  உள்ளது.

திருகோணமலை குறித்த உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவே பிரதமர் மோடி வருகிறார் என்ற சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்திருந்தது. முன்னைநாள் அதிபர் ராஜபக்ச அவர்கள் தற்போதைய அரசு நாட்டை வெளிநாடுகளுக்கு விற்று விட்டது என்று அறிக்கை விட்டமையானது இந்த ஐயப்பாட்டை மேலும் வலுவடைய செய்திருந்தது.

பொதுவாக சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இந்திய எதிர்ப்பு போக்கு சிந்தனையை கிளறிவிடும் பாங்கில்ராஜபக்ச இந்த அறிக்கையை விட்டிருந்தார். அதேவேளை சிங்கள பௌத்த அடிப்படைவாத சிந்தனையை கணிப்பிட்டு அறிந்து கொண்டுள்ள இந்தியாவும்பௌத்த மத சார்பான போக்கை முன் வைப்பதன் மூலம் சிங்கள மக்களை வருடி அணுகும் தந்திரத்தை கையாள்கிறது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளின் பின்பு சர்வதேச நாடுகள் மத்தியில் தமது இருப்பை வலியுறுத்தும் போக்கில் சிறிலங்காவும் சர்வதேச நடப்பாட்சி முறைமை ஒன்றின் பின்னால் சேர்ந்து  கொள்வதிலும்,பௌத்தசிந்தனைகளின் மூலம் உலகின் மனத்தோற்றத்தில்நல்லிடம்படித்து விடுவதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறது.

ஆனால் அடிப்படையில் இந்திய சிறிலங்கா உறவில் மாற்றம் இருக்கிறதா? சிறிலங்கா இந்தியாவுக்கான பிராந்திய வல்லரசுக்குரிய மதிப்பைப் கொடுத்துள்ளதா? சிறிலங்காவின் மென்பலம் இந்திய விடயத்தில் எந்த அளவில் இருக்கிறது என்பன இங்கே முக்கியமான விடயங்களாகும்.

திருகோணமலை துறைமுகம் குறித்த செய்திகள் பல ஏப்ரல் 26ஆம் நாள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடக்கம் மிகவும் பரபரப்பாக வர ஆரம்பித்தது. தனது பயணத்திற்கு முன்பாக பிரதமர் விக்கிரமசிங்க, இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையும் இறுதி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

trinco

அத்துடன் இந்தியப் பிரதமர் சிறிலங்கா வரும் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்பது செய்தியாக இருந்தது.  ஆனால் இறுதியாக இந்தியாவுக்கும்சிறிலங்காவுக்கம் இடையில் திருகோணமலை அபிவிருத்தி தொடர்பாக கூட்டு செயலனி ஒன்று ஆரம்பிக்கப்படும் என்று முடிவாகி உள்ளது. இந்தியப்பிரதமர் மே நடுப்பகுதியில் மேற்கொள்ளும் சிறிலங்கா பயணத்தின் போது திருகோணமலை குறித்து எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படமாட்டாது என்றும் அறிக்கை வெளியாகியுள்ளது.

சிறிலங்கா தரப்பில் இலங்கை எரிபொருள் கூட்டு தாபனத்தின் தொழிலாளர் போராட்டங்களையும் திருகோணமலை துறைமுக வேலையாட்கள் போராட்டத்தையும் இதற்கான காரணமாக காட்டப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை திருத்தி அமைத்து இயங்க வைக்கும் நடைமுறைகளில்இருதரப்பின் இடையேயும் வெற்றி காண முடியவில்லை என்பது காரணமாக காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் சீன நிறுவனங்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளது, அத்துடன் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கப்பல்களின்வசதிக்கு ஏற்றவகையில் மிக நவீன வசதிகளை கொண்டுள்ளது. இது சீனா தனது நீண்ட கால தேவையை கொண்டு பில்லியன் டொலர் செலவில் தயாரித்த ஒரு தளம். மேலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டுவதற்கு எடுத்த செலவை திருப்பி செலுத்த முடியாது போய்விட்ட நிலையில் அந்த துறைமுகத்தின் எண்பத்தி ஐந்து சதவீத நிலப்பரப்பு சிறிலங்காவினால் சீனாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக வசதிகளும் சீன கம்பனிகளின் செல்வாக்கில் உள்ளது. நவீன வசதிகளையும் கொண்டுள்ளது, அதிக கப்பல்களை கொள்ளக் கூடிய வகையில்அமைக்கப்பட்டுள்ளது. ஆக திருகோணமலை துறைமுகத்திற்கு அதன் பழைமையும்செலவழிக்க வேண்டிய தொகையும் மிக அதிகமாக உள்ளது.

முதலாம் உலகப்போர் காலத்திலிருந்து இரண்டம் உலகப்போர் காலம் வரை பிரித்தானிய படைகளால் உபயோகிக்கப்பட்ட பின் இன்று வரை உபயோகத்தில் இல்லாது இருக்கும் மேல் நிலை தாங்கிகளை இந்திய எண்ணெய் நிறுவனம் பில்லியன் டொலர்செலவழித்து திருத்தம் செய்வது வியாபார இலாபம் தரும் நடவடிக்கையாக கூட தெரியவில்லை. என்பது ஒரு பார்வையாக உள்ளது.

பதிலாக இந்திய கிழக்கு கரையில் சென்னை, விசாகபட்டினம் போன்ற நகரங்களில் இருக்கும் துறைமுகங்களை முன்னேற்றுவதன் முலம் இந்திய வேலைவாய்ப்பு, வியாபரம் போன்றவற்றையாவது உள்நாட்டில் அதிகரிக்கக் கூடியதாக இருக்கும் என்பது இந்திய ஆய்வாளர்கள் பார்வையாக உள்ளது.

காலாகாலமாக சிறிலங்கா அரசுகள் தமது துறைமுகங்களை விமான தளங்களையும் தமது நலனுக்கு ஏற்ப சர்வதேச வல்லரசுகளுக்கு குத்தகைக்கு வழங்குவதை தனது பொதுவான பண்பாக கொண்டுள்ளன. பனிப்போர் காலத்தில் இந்திய- சோவியத் நட்புக்கு எதிராக, அமெரிக்காவுடனும் தற்பொழுது அமெரிக்க -இந்திய நட்புக்கு எதிராக, சீனாவுடனும் கூட்டு சேரும் தன்மையை சிறிலங்கா காட்டிவருவது இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

சிறிலங்கா தனது முலோபாய நகர்வாக இந்தியாவுடன் திருகோணமலை உடன்படிக்கை குறித்து பேசுவதற்கு முன்பாக, சீனாவுடன் தனது 99வருட உடன்படிக்கையை முடித்து கொண்டது. இதன் பின்னரே இந்திய -இலங்கை உடன்பாட்டைமுன்னிறுத்தி திருகோணமலை குறித்த இருதரப்பு உடன்படிக்கைக்கான அனுமதியை பாராளுமன்றத்தில் பெற்றுக் கொண்டு  இந்தியாவுடன் பேசுவதற்கு இறங்கியது.

ranil-modi (1)

சீனா இலங்கைத்தீவில் பலம்வாய்ந்த நிலையை எடுத்து கொண்டு விட்டது, தனது பிராந்திய விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு நகர்ந்து வருகிறது. தெற்காசிய நாடுகளில் வல்லரசாகிய இந்தியா, அருகில் இருக்கும் இலங்கைத் தீவில் தற்போது தனது செல்வாக்கு குறித்த சங்கடத்தில்இருக்கிறது. இப்பொழுது இந்தியா,  சிறிலங்காவை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.

திருகோணமலை துறைமுகமும் அது சார்ந்த பிரதேசமும் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் நிறுவனங்களால் கையாளப்படும் போது மட்டுமே அம்பாந்தோட்டையுடன் போட்டி போடக்கூடிய நிலையை எட்டும். சிறிலங்கா கப்பல் கூட்டுதாபனமோ அல்லது  இந்திய எண்ணெய் கூட்டுதாபனமோ இதன் மூலம் அதிக நன்மை பெற முடியாத நிலை உள்ளது. அம்பாந்தோட்டையில் தரையிறங்க  தயங்கி வரும் மேலைத்தேய கடற்கலங்கள் திருகோணமலையில் தமது மீள் எரிபொருள் நிரப்பும் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பை பெறுவதற்கு தமிழ் அதிகார சபைகள் மூலம் மட்டுமே முடியும், ஆனால் இதனை தமிழர் மாகாணங்களின் கையில் தர சிறிலங்கா அனுமதிக்குமா என்பது கேள்விக்குறிதான்.

கடந்த முறை இந்தியப் பிரதமர் சிறிலங்கா வந்திருந்த போதுமன்னாரில் இந்திய தொடரூந்து பாதை திட்டத்தை திறந்து வைத்து பேசும் போது  13ஆவது திருத்தச்சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இதே சிறிலங்கா அரசாங்கத்திடம் கேட்டு கொண்டிருந்தார். யாப்பு மாற்றம் என்ற பெயரில் இந்திய முன்முயற்சியான 13ஆம் திருத்த சட்டத்தை ஒருபுறம் தள்ளிவிடும் போக்கை சிறிலங்கா கொண்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களாகி விட்ட நிலையில், அரசியல் ரீதியாக நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்க்கும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு  இது வரையில் எந்தவித உறுதியான தீர்வுகளும் வழங்கப்படவில்லை.

இராணுவ ஆக்கிரமிப்பு, கைதிகள் விடுதலை, இந்திய- இலங்கை மீனவர் பிரச்சினை என பல வகைப்பட்டதீர்க்கப்படாத விடயங்கள் உள்ளன அனைத்தையும் பிற்போடும் வகையிலான செயல் முறைகளையே சிறிலங்கா இன்று வரை  கொண்டிருக்கிறது. இந்திய நலனுக்கு என்றும் ஆதரவான போக்கை சிறிலங்கா அரசுகள் கொண்டிருந்ததில்லை, இந்த நிலையில் புனிதமான அயலுறவு என்பது சிறிலங்கா அரசிடம் இருந்து பெற்று கொள்ள முடியாது.

பொருளாதார ஒத்துழைப்புகள் மூலமும்அபிவிருத்தி சார்ந்த உறவு நிலைமுலமும் சிறிலங்காவை ஒத்துழைத்து செல்ல வைப்பது என்ற ஒரு எதிர்பார்ப்புத் தான் சிறிலங்காவுடன் இசைந்து செல்ல வேண்டும் என்ற பார்வையில் இருக்கும் இந்திய ஆய்வாளர்களின் பார்வையாக உள்ளது.  சமூக அடித்தளத்தில் ஊறிப்போய்க் கிடக்கும் இந்திய எதிர்ப்புவாதம் பொருளாதார ஒத்துழைப்புவெற்றிகளை குவித்து விடும் என்ற எதிர்பார்ப்பை வீணடிக்கிறது. தமிழ் மக்கள் மீதான வெற்றியை கொண்டாடி அதிலிருந்து அரசியல் வாக்குகளை தக்கவைத்து கொண்டிருக்கும் தலைவர்கள் உள் ஒன்றும் புறம் ஒன்றுமாக பேசிவருவது, இந்திய எதிர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட காரணமாக உள்ளது.

இந்த நிலையில் இந்திய நலன்களை நகர்த்த கூடிய ஒரு தரப்பு தமிழ் பேசும் மக்களேயாவர். பனிப்போர் காலத்திலும் சரி, தற்போதைய மாறிவரும் உலக போக்கிலும் சரி, இந்திய வெளியுறவுக் கொள்கையோடு இணைந்த போக்கையே தமிழர் தரப்புகள்கொண்டிருந்தன.

போராட்ட காலத்திலும் சரி அதற்கு முந்திய காலத்திலும் அல்லது அதற்கு பிந்திய காலத்திலும் தெற்காசிய பிராந்திய பாதுகாப்பிற்கு எதிராக இன்னுமொரு வல்லரசுடன் உறவு வைத்து கொள்ள எண்ணியதும் இல்லை.

பௌத்த மதத்தை முன்வைத்து  சிறிலங்காவை அணுகுவது அரசியல்வாதிகளை  மேலும் விழிப்படைய செய்வதுடன்அரசியல்வாதிகளுக்கு இடையிலான முரண்பாடு இந்திய எதிர்ப்புவாதத்தை மேலும் சீண்டி விடுவதாகவே அமையும். இதனை இந்திய அரசு மிக இலகுவாக எடுத்து கொள்ள முடியாது.

ஏனெனில் மூத்த ஆய்வாளர் திருநாவுக்கரசு அவர்கள் ’இலங்கை அரசியல் யாப்பு’ என்ற நூலில் குறிப்பிடுவது போல சிங்கள-பௌத்த சமுதாயம் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தையும் இந்திய நலன்களையும் ஒரே நேர் கோட்டில் வைத்தே பார்க்கிறது’

ஆனால் இந்தியாவோ தமிழர் தரப்பை காலனித்துவ பின்காலவாத அடிப்படையில் நோக்குவதோ சரியானதாக தெரியவில்லை. காலனித்துவ பின்காலவாதத்தில்காலனித்தவ ஆட்சியாளர்கள் தாம் விட்டு சென்ற பின்னரும் அதே அரசியல் பிராந்திய கட்டமைப்புகளை மையமாக கொண்டு இன்றைய சமூகங்களையும் நோக்குவதாகும். இந்த கோட்பாட்டில் காலனித்துவம் செய்வோர் பகுத்தறிவாளர்களாகவும், நாகரீகமானவர்களாகவும், பண்பட்டவர்களாகவும் பார்க்கப்படும் அதேவேளை காலனித்தவத்திற்குஉள்ளாவோர் பகுத்தறிவற்றவர்களாகவும், நாகரீகம் அற்றவர்களாகவும், பண்பாட்டு வளர்ச்சி குன்றியவர்களாகவும் பார்ப்பது காலனித்துவ பின்காலவாத கோட்பாட்டில் ஒரு முறை.

தமிழ்பேசும் மக்களை சிறிலங்காவின் இறைமைக்குள் வைத்து பார்க்கும் நோக்கில், இராணுவ ஆக்கிரமிப்பையும் மனித உரிமை மீறல்களையும் பாரா நோக்கில் விடுவது. சிறிலங்காவை தற்காலிகமாக மிரட்டும் பாணியல் தமிழ் மக்களை பகடைக்காய்களாக உபயோகிப்பது என்பன இந்திய அரசின் செயற்பாடுகளாக இருப்பதாக கொழும்பு பத்திரிகைகளே கூறிஉள்ளன.

இதற்கும் மேலாக தற்பொழுது தமிழ் பேசும் மக்களின் தனித்தவத்தை இல்லாது செய்து, சிறிலங்காவின் இறைமைக்குள் மாவீரர் நாள் அனுட்டிக்க வைக்க முனையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை செயலாளர் சயிட்அல்-ஹுசைன் அவர்களின் அறிக்கையும், இலங்கைத்தீவின் தமிழர் பகுதி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இழந்த தமது உறவுகளை எண்ணி ஆழ்ந்த கவலையில் இருக்கும் தருணத்தில்,  தேசிய கொண்டாட்டம் என்று ஐக்கிய நாடுகள் சபையால்உருவாக்கப்பட்ட வெசாக் கொண்டாட்டங்களுக்கு இந்தியப் பிரதமர் மோடிஅவர்கள் சிறிலங்கா வருவதுவும் நல்ல ஏற்பாடுகளாக தெரியவில்லை.

தமிழ் மக்களை புண்படுத்தி நசுக்குவதில் மேலும் ஆர்வம் கொண்டு செயற்படுவதிலும் பார்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு இந்த பயணம் உபயோகப்படுமாக இருந்தால் அது சமாதானத்தைஉருவாக்குவதாக அமையும்.

– லண்டனில் இருந்து லோகன் பரமசாமி

* கட்டுரையாளருக்கு கருத்துக்களை நேரடியாக அனுப்புவதற்கான மின்னஞ்சல் முகவரி – loganparamasamy@yahoo.co.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *