மேலும்

வடக்கு முதல்வரை தனியாகச் சந்திப்பார் சிறிலங்கா அதிபர்

MS_CMவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனியாகப் பேச்சு நடத்தவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்தி வரும் போராட்டங்கள், காணிகளை விடுவிப்புக்காக நடத்தப்படும் போராட்டங்கள் உள்ளிட்ட வடக்கின் முக்கியமான பிரச்சினைகளை அவசரமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வட மாகாண முதலமைச்சர் அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். வரும் மே 17ஆம் நாள் கொழும்பில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

தமக்கு இந்தக் கடிதம் கிடைத்துள்ளது என்பதை வட மாகாண முதலமைச்சர் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே, வடமாகாண முதலமைச்சரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உதவியாளர்களின் துணையின்றி தனியாகவே சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தச் சந்திப்பின் போது வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபரிடம் எடுத்துக் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் பல்வேறு தரப்புகளுடனும் கலந்துரையாடி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *