மேலும்

‘விமானப்படையின் காணி’ , ‘நுழைந்தால் சூடு’ – கேப்பாப்பிலவு மக்களுக்கு எச்சரிக்கை

keppapilavu (1)தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 19ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தக் காணிகள் தமக்கே சொந்தம் என்றும், அதற்குள் நுழைந்தால் சுடப்படுவீர்கள் என்றும் சிறிலங்கா விமானப்படை எச்சரித்துள்ளது.

தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த மாதம் 31ஆம் நாளில் இருந்து கேப்பாப்பிலவு சிறிலங்கா விமானப்படை முகாம் வாயிலில், பிலக்குடியிருப்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியும், அச்சுறுத்தியும், அங்கிருந்து வெளியேறச் செய்வதில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை மக்கள் நிராகரித்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தான், சிறிலங்கா அதிபருடன் பேச்சு நடத்தியதாகவும், அவர் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுடன் தொடர்பு கொண்டு பேசிய போது, பொதுமக்களின் காணிகளை விடுவிக்க இணங்கியதாகவும், சில நாட்களுக்கு முன்னர், அமைச்சர் சுவாமிநாதன் கூறியிருந்தார்.

அவர், முல்லைத்தீவு மாவட்டச்செயலரை போராட்டம் நடக்கும் இடத்துக்கு அனுப்பி இதனை அறிவிக்கச் செய்தார். எனினும், தமது காணிகளை விடுவிக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்று பிலக்குடியிருப்பு மக்கள் கூறியிருந்தனர்.

keppapilavu (1)keppapilavu (2)keppapilavu (3)keppapilavu (4)

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் மக்களையும், அதற்கு ஆதரவாக வருவோரையும், விமானப்படையினர், தமது முகாமுக்குள் இருந்து கொண்டும், விமானம் மூலமும் படம்பிடித்து அச்சுறுத்தி வந்தனர்.

நேற்று திடீரென, விமானப்படை முகாம் எல்லையில் ஒரு, அறிவிப்புப்பலகை நாட்டப்பட்டுள்ளது.

அதில்,  இது விமானப்படையினரின் காணி என்றும், தேவையின்றி உட்செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தேவையின்றி உட்சென்றால், துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இணங்கியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த சில நாட்களிலேயே, இது விமானப்படையின் காணி என்று அறிவிப்புப்பலகை நாட்டப்பட்டுள்ளது, பிலக்குடியிருப்பு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கடந்த 4ஆம் நாள் தொடக்கம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக, நடத்தப்பட்டு வரும் போராட்டம், கடந்த நான்கு நாட்களாக, அடையாள உண்ணாவிரதமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *