மேலும்

சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்ளுங்கள் அவுஸ்ரேலிய பிரதமரே….

ranil - Malcolm Turnbullசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாகியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பாக மட்டுமல்லாது, விளையாட்டு மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.

நட்பார்ந்த துடுப்பாட்டப் போட்டிகளுக்கு அப்பால், சிறிலங்காவில் இடம்பெற்ற மிகக் கொடிய உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தமக்கு நீதி கிடைக்கும் எனக் காத்திருக்கின்ற நிலையில், போர்க் குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு பொறுப்புக்கூறும் என்பது தொடர்பாக அவுஸ்திரேலியப் பிரதமர் மல்கொம் ரேன்புல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடினமான கேள்விகளை வினவுவார் என நாம் தற்போதும் நம்புவோம்.

கடந்த  ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசாங்கமும் இணைஅனுசரணை வழங்கியது. போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் இதில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பும் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் இத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டமையானது சாதகமான ஒரு மாற்றமாகக் காணப்பட்டது. இந்நிலையில் இத்தீர்மானம் தொடர்பில் தான் எவ்வளவு தூரம் பணியாற்றியுள்ளேன் என்பதை அடுத்த மாதம் சிறிலங்கா அறிக்கையிட வேண்டும்.

சிறிலங்காவில் பல சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. குறிப்பாக சிறிலங்காவைச் சேர்ந்த பொது அமைப்புக்கள் தற்போது சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளிப்படுத்த முடிகிறது. மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த சில வல்லுனர்கள் கடந்த 18 மாதங்களில் சிறிலங்காவிற்குப் பயணம் செய்துள்ளனர்.

காணாமற் போனோருக்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்ட வரைபு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ளது. அத்துடன் பலவந்தமான காணாமற்போதலுக்கு எதிரான அனைத்துலக சாசனத்திலும் சிறிலங்கா கைச்சாத்திட்டுள்ளது.

பல பத்தாண்டுகளாக சிறிலங்காவில் நிலவும் பாரியதொரு பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன் இவ்விரு நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்கத்திற்கான அரசியற் சீர்திருத்தம் ஒன்றை  வரைவதற்கான பணியையும் சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ranil - Malcolm Turnbull

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்கும் சிறிலங்கா இராணுவத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் முன்னெடுக்கப்பட்ட பரந்தளவிலான மனித உரிமை மீறல்களிலிருந்தும் மீண்டு வருவதற்கான சட்ட வரைபும் வரையப்படுகிறது. நாட்டு மக்களின் ஆலோசனைகளைப் பிரதிபலிக்கும் முகமாகவே இந்த சட்ட வரைபுகள் மீளவும் ஆராயப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பல்வேறு முன்னேற்றங்கள் காணப்படுகின்ற போதிலும், பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய அம்சங்களை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுப்பதற்கான முயற்சிகளை இன்னமும் மேற்கொள்ளவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கும் மேலாக, இச்சட்டத்தினக் கீழ் கைதுசெய்யப்பட்ட பலர் பல்வேறு சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான எவ்வித திட்டங்களையும் சிறிலங்கா அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை.

தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் வடக்கு கிழக்கில் பெருந்தொகையான நிலங்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. காணாமற் போனோருக்கான அலுவலகத்தை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இவற்றுக்கும் அப்பால், அனைத்துலக சமூகத்தின் தலையீட்டுடன் நீதிமன்றங்களை உருவாக்கி போர்க்கால மீறல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கான எவ்வித நகர்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை. யுத்த கால மீறல்கள் தொடர்பான நீதிப் பொறிமுறையில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதை நாட்டில் வாழும் சில சமூகங்கள் விரும்புவதாக சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட செயலணிக் குழுவால் ஜனவரி மாதம் வழங்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போதிலும், நீதி விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகள் மற்றும் ஏனைய அனைத்துலகப் பங்களிப்பு உள்ளடக்கப்படுவதற்கு எதிராகவே அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

சிறிலங்கா மீதான மனித உரிமைகள் தொடர்பாக அவுஸ்திரேலிய இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அதாவது ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவிலிருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்வோரை இடைமறிக்கும் முகமாக அவுஸ்திரேலிய, ராஜபக்ச அரசாங்கத்துடன் எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.

இதனால் ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் சிறிலங்காவிற்கு ஆதரவாகவே அவுஸ்திரேலியா தனது வாக்குகளை வழங்கியது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா அமைதி காத்ததானது, படகுகளில் தப்பிச் செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ராஜபக்ச அரசாங்கத்திடமிருந்து ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக அவுஸ்திரேலியாவால் செலுத்தப்பட்ட விலை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், சிறிலங்காவில் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்ட பின்னர், அவுஸ்திரேலிய தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதுடன் 2015 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகளில் அங்கம் வகித்தது.

2018-2020 காலப்பகுதியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அவுஸ்திரேலியா போட்டியிடும் போது, ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் மனித உரிமைகள் செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா ஆதரவு வழங்குமா என்பது தொடர்பாக அறிவதில் அனைத்துலக சமூகம் ஆர்வம் காண்பிக்கும்.

சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களிற்கு சாட்சியங்களை வழங்கிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவுஸ்திரேலியப் பிரதமர் ரேன்புல், சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்த வேண்டும்.

யுத்த கால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் சுயாதீனமாகவும் பாரபட்சமற்ற வகையிலும் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் கணிசமான பங்களிப்பை வழங்க வேண்டும்.

இது தொடர்பில் சிறிலங்காவிற்கு அவுஸ்திரேலியா உதவுவதற்காக, அவுஸ்திரேலியா சிறிலங்காவுடனான தனது நீண்ட கால நட்பையும் தனது பொதுநலவாயப் பதவியையும் பயன்படுத்த வேண்டும். இதனை சிறிலங்காப் பிரதமர் விக்கிரமசிங்கவும் ஏற்றுக்கொள்ளலாம்.

வழிமூலம்      – hrw.org
ஆங்கிலத்தில் – Elaine Pearson (Australia Director, Human Rights Watch)
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>