மேலும்

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் பேச்சு – ரணில்

ranilதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் என்டிரிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சுற்றி 15 ஆயிரம் ஏக்கர் நிலம் முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு இந்தியா முதலீடுகளை மேற்கொள்வதற்கு அழைக்கிறோம்.

சீனாவுக்கு மட்டும் இங்குள்ள நிலங்களை நாம் வழங்கவில்லை. அங்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் உள்ளன. சீன வர்த்தகர்களுக்கு 1300 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துலக கொள்கலன் முனையம் ஒன்றை அவர்கள் அமைக்கவுள்ளனர்.

சிறிலங்காவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது. அதற்கு சீனர்கள் 2000 தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளனர்.

இதனைச் சாத்தியப்படுத்துவதற்கு, தொழிற்சாலைகள், கைத்தொழில் மையங்கள், வீதிகள், நீர்வழங்கல் திட்டம், களஞ்சியங்கள், மேலதிகமாக வரும் மக்களுக்கான குடியிருப்புகள் போன்றவற்றை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் தேவைப்படுகின்றன.

இங்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் அரசாங்கத்திடம் உள்ளன. இந்தப் பகுதியில், சீனா மாத்திரமன்றி யாரும் முதலீடு செய்யலாம். இந்தியாவும் கூட முதலிடலாம்.

இங்கு இந்தியாவும் வர வேண்டும் என்று விரும்புகிறோம். இது நடக்கும். ஆனால், இரண்டு மூன்று பிரச்சினைகள் உள்ளன. முதலாவது இந்தியாவுடடன் நாம் எட்கா உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும்.

சிங்கப்பூருடனும், ஐந்து தென்னிந்திய மாநிலங்களுடனும் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும்.

வங்காள விரிகுடாவின் பிரதான துறைமுகமான திருகோணமலையை அபிவிருத்தி செய்வது குறித்து இந்தியாவுடன் பேசுகிறோம்.

அதுவும் நடக்கும். அதற்காக நிலங்களை இழக்க வேண்டியதில்லை. நீரைக் கொண்டு வர வேண்டியதுமில்லை.

சிறிலங்காவில் ஏனைய பகுதியில் முதலீடு செய்வதற்கு இந்தியர்கள் விரும்புகின்றனர். அவர்களை வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ளச் செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தி வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *