மேலும்

சிறிலங்காவில் சீனாவின் திட்டங்களை எதிர்மறை சக்திகளால் தடுக்க முடியாது – சீனத் தூதுவர்

yi-xiangliangசிறிலங்காவின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டாலும், அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நிறைவேற்றுவதில் சீனா உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் இன்று தெற்கு பொருளாதார அபிவிருத்தி வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

‘சிறிலங்காவுக்காக, சீனாவின் அபிவிருத்தி உதவிகளை எந்த எதிர்மறை சக்திகளாலும் தடுக்க முடியாது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை எவராலும் தடுத்து விடவும் முடியாது.

இது சிறிலங்காவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. தெற்கு அபிவிருத்தித் திட்டத்தில் முதலீடுகளைச் செய்வதற்கு 50க்கும் அதிகமான சீன முதலீட்டாளர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

எல்லாம் நன்றாக நடந்தால், அடுத்த 3 தொடக்கம் 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 5 பில்லியன் டொலர் முதலீடுகள் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதன் மூலம், ஒரு இலட்சம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

சீனாவுக்கு மிகவும் நட்பான நாடு சிறிலங்கா. அதனால் தான் சிறிலங்காவில் முதலீடுகளை மே்றகொள்வதற்கு சீனா உயர் முன்னுரிமை கொடுக்கிறது.

2014இல், சீன அதிபர் ஷி ஜின்பிங் சிறிலங்காவுக்கு வருகை தந்த போது, சிறிலங்காவில் எமது முதலீடுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்று முடிவு செய்தோம்.

2015இல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பது என்று உறுதிப்படுத்திக் கொண்டோம். முடிவு செய்தோம்.

இப்போது அடிப்படை கைத்தொழில் முறையை உருவாக்குவதற்கு உதவ, சிறிலங்காவுடன் சீனா இணையவுள்ளது.

தெற்கு அபிவிருத்தி வலயம், மிகவும் முக்கியமான பொருளாதார செயற்பாடாக, சிறிலங்காவுக்கு, அதன் அரசாங்கத்துக்கும், அம்பாந்தோட்டை மக்களுக்கும் இருக்கும்.

சிறிலங்கா ஒரு சிறிய நாடல்ல.  20 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெரிய நாடு. மிகப் பெரிய வாய்ப்புகளைக் கொண்ட மிகப் பெரிய நாடு. அதனால் தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

எனது உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிறிலங்காவின் அபிவிருத்திக்கு என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக உதவுவேன்.

சீனாவின் எல்லா திட்டங்களும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் சிறிலங்காவின் சட்டங்களுக்கு அமையவே முன்னெடுக்கப்படும். இது எனது வாக்குறுதி.  எல்லா சீன வர்த்தகர்களிடம் இருந்தும் அளிக்கப்படும் வாக்குறுதி.

சிறிலங்கா அரசாங்கத்தினமும், மக்களினதும்  முடிவுகளுக்கு மதிப்பளிப்போம். நாங்கள் உங்களுடன், அரசாங்க அமைச்சர்களுடன், இந்தப் பகுதி மக்களுடன், அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தப் பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு ஒத்துழைத்துச் செயற்படுவோம். ” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *