மேலும்

அம்பாந்தோட்டையில் வெடித்தது மோதல் – 21 பேர் காயம்

hambantota-clash-4அம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் இடம்பெற்ற மோதல்களில், 21 பேர் வரை காயமடைந்தனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையை குத்தகைக்கு வழக்கவும், 15 ஆயிரம் ஏக்கர் காணியில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கவும், சீனாவுடன் இணக்கம் கண்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் இது தொடர்பான நிகழ்வு ஒன்றை இன்று காலை அம்பாந்தோட்டையில் ஒழுங்கு செய்திருந்தது.

முன்னதாக இன்றைய நிகழ்வில் உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சில நெருக்கடிகளால் அந்த திட்டம் கைவிடப்பட்டு இன்று ஆரம்ப அடையாள நிகழ்வு மாத்திரம் நடக்கும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிகழ்வில் சிறிலங்கா பிரதமர், அமைச்சர்கள், மற்றும் சீன தூதுவர் யி ஷியான்லியாங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் காணிகளை சீனாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று சமல் ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிரணியினர் பேரணி ஒன்றுக்கு ஒழுங்கு செய்திருந்தனர்.

எனினும், நேற்று அம்பாந்தோட்டை நீதிமன்றம் 14 நாட்களுக்கு பேரணிகளை நடத்த தடைவித்திருந்தது.

hambantota-clash-1hambantota-clash-2hambantota-clash-3hambantota-clash-4hambantota-clash-5hambantota-clash-6

 

(படங்கள் – டெய்லி மிரர்)

இந்தத் தடையை மீறி இன்று பேரணி நடத்தப்பட்டது. இதில் உதய கம்மன்பில, காமினி லொக்குகே உள்ளிட்ட கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

பேரணியாகச் சென்றவர்கள், நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் மோதல்கள் ஏற்படும் நிலை உருவானது.

சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், நீர்ப்பீரங்கியால் தாக்கியும், தடியடி நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டினர்.

இந்தச் சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதல்களில் காவல்துறையினரும், பொதுமக்களும் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவங்களில் காயமடைந்த 21 பேர் அம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *