மேலும்

அரசியலமைப்பு மாற்றம் குறித்து கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் 3 மணிநேரம் ஆலோசனை

tna-meeting-3தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்று மாலை 4.50 மணிக்கு ஆரம்பமாகிய இந்தக் கூட்டம் சுமார் 3 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், இரா.துரைரத்தினம், சர்வேஸ்வரன், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முக்கியமாக அரசியலமைப்பு மாற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு- கிழக்கு இணைப்பை உறுதி செய்வது, ஒற்றையாட்சியை நிராகரித்து, சமஷ்டி அரசியலமைப்பை உறுதிப்படுத்துவது, பௌத்தத்துக்கான முன்னுரிமையை இல்லாமல் செய்வது போன்ற விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்க வேண்டும் என்று பங்காளிக் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

tna-meeting-1tna-meeting-2tna-meeting-3இந்த விடயங்களில் விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும், தமிழ் மக்களின் ஆணைக்கும் அபிலாசைகளுக்கும் எதிரான ஒரு அரசியலமைப்பு முன்வைக்கப்பட்டால் அதற்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாது என்றும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திடீரென எழுந்து வெளியே சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதற்கான காரணம் தெரியவரவில்லை.

இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணும் வரை, ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம் என்று தெரிவித்துள்ளார்.

“இந்தக் கூட்டம் மிகவும் திருப்திகரமாக நடைபெற்றது.  அனைவரும் பகிரங்கமாக தமது கருத்துக்களை தெரிவித்தனர். அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கி அவற்றின் அடிப்படையில் செயற்படுவோம்.

சிறிலங்கா அதிபர் தேர்தல், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தான், 2016ஆம் ஆண்டுக்குள் அரசியல் தீர்வு ஒன்றை நாம் பெற முடியும் என்ற கருத்தை முன்வைத்தேன். அது ஒரு கணிப்பு.

2016ஆம் ஆண்டுக்குள் அது நடைபெறவில்லை. எனினும், எனது கணிப்பின் அடிப்படையில் 2016இல் பல கருமங்கள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக நாடாளுமன்றம், அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை முன்வைப்பதற்கு அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்களை உள்ளடக்கிய வழிகாட்டல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் அரசியல் தீர்வுக்கான விடயங்கள் 2016ஆம் ஆண்டிலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *