மேலும்

சிறிலங்காவுக்கு சாதகமான மற்றொரு ஜெனிவா தீர்மானம்?

UNHRCஎதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தனக்குச் சாதகமான மற்றொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் இயற்றப்பட்டால் அதன் மூலம் நல்லிணக்கச் செயற்பாட்டை மேற்கொள்வதற்குத் தேவைப்படும் பொறிமுறைகளை அமுல்படுத்துவதற்கான காலஅவகாசம் மேலும் வழங்கப்பட வேண்டியிருக்கும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடரானது பெப்ரவரி 27 தொடக்கம் மார்ச் 24 வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதில் சிறிலங்கா தொடர்பான கலந்துரையாடலானது மார்ச் 22ஆம் நாள் இடம்பெறும்.

இக்கலந்துரையாடலானது, மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையாளர் செய்ட் அல் ராட் அல் ஹுசெய்னால் இவ்வாண்டு வழங்கப்பட்ட சிறிலங்கா தொடர்பான அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இடம்பெறும்.

நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் திருப்தி அளிப்பதாக செய்ட் தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நிர்மூலமாக்குவதில் சிறிலங்கா தோல்வியடைந்துள்ளதாகவும் செய்ட் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்பு தேவையானது எனவும் செய்ட் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக பல்வேறு தரப்புக்களிடமிருந்தும் எழும் வெறுப்புக்கள், பொறுமையின்மை, ஒதுக்கங்கள் போன்றவற்றைக் களைந்து அனைத்து தரப்பினரையும் நல்லிணக்க முயற்சிகளில் ஒன்றிணைப்பதற்கான பலமான நகர்வுகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என உயர் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்காவில் நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுப்பதில் மனித உரிமைகள் பேரவையின் ஊக்குவிப்பும் ஆதரவும் மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் இது அனைத்துப் பங்குதாரர்களுக்கும் குறிப்பாக பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளதாக செய்ட் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இவ்வாண்டு இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் செய்ட் ராட் அல் ஹுசெய்ன் உரையாற்றிய போது, சிறிலங்காவின் நிலைப்பாடு தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார். அனைத்து இலங்கையர்களும் நல்லிணக்கச் செயற்பாட்டில் வினைத்திறனுடனும் பயனுள்ள வகையிலும் பங்களிப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கடந்த ஆண்டு ஐ.நா  மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது செய்ட் தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் 30/1 தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு நீதி முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய முழுமையான மூலோபாயம் ஒன்று வரையப்பட வேண்டும் எனவும் இதன்மூலம் பல்வேறு தரப்பினரையும் பொருத்தமான வகையில் ஒன்றிணைக்க முடியும் எனவும் செய்ட் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு சிறிலங்கா தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து சிறிலங்கா அரசாங்கமானது மெதுவாகவே செயற்பட்டு வருகின்றது எனினும் வினைத்திறன் மிக்க பொறுப்புக்கூறல் பொறிமுறையை அமுல்படுத்துவதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.

எனினும்,  யுத்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கும் செயற்பாடானது இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டு சிறிலங்காவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவிற்குச் சாதகமானதொரு தீர்மானம் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுவதற்குத் தேவையான ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் திரட்டும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னரும் கூட காவற்துறையினரின் சித்திரவதைகள் இடம்பெறுவதாக இவ்வாண்டு சிறிலங்கா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்படும் வெள்ளை வான் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் தொடர்பாக ஐ.நாவின் சித்திரவதைக்கு எதிரான ஆணைக்குழுவானது சிறிலங்காவிற்கு நேரிற் சென்று பார்வையிட்டு சுயாதீன விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் கடந்த மாதம் கோரிக்கை விடுத்திருந்தது.

‘ஜனவரி 2015ல் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் இடம்பெற்ற போதிலும் சட்ட ரீதியற்ற வகையில் இரகசியத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை இலக்கு வைத்து சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக பயங்கரமான சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்’ என அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிறைவேற்று இயக்குனர் ஜஸ்மின் சூகா தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவின் தற்போதைய சிறிசேன அரசாங்கத்தின் கீழ் இந்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்  கடத்தல், சட்ட ரீதியற்ற தடுப்பு, சித்திரவதை, பாலியல் வன்புணர்வுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு தற்போது ஐரோப்பிய நாடுகளில் வாழும் 36 தமிழ் மக்களிடமிருந்து அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தால் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சாட்சியம் வழங்கியவர்களில் 10 பேரின் வழக்குகள் ஆராயப்பட்டு அவர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இவர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டதன் மூலம் வெளிநாட்டு அரசாங்கங்கள் சிறிலங்காவில் மீறல்கள் இடம்பெறுகின்றன என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கமானது உண்மையில் தனது பாதுகாப்புத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள காவற்துறையினரால் இழைக்கப்படும் மீறல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மாதம் மனித உரிமைகள் பேரவையால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் சிறிலங்கா மீதான தீர்மானமானது எவ்வித வாக்கெடுப்புமின்றி நிறைவேற்றப்பட்டது. ‘நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றை சிறிலங்காவில் மேம்படுத்துதல்’ என்கின்ற தலைப்பின் கீழ் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்காலப்பகுதியில் ஜெனீவாவில் அங்கம் வகித்த அமெரிக்கக் குழுவால் பேரவையில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப்பின் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவே மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அங்கம் வகிக்கும்.

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில்  ட்ரம்ப் அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கான தனது கதவுகளை சிறிலங்கா ஏற்கனவே திறந்துவிட்டுள்ளது. அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் பென்ஸ் தொலைபேசி மூலமாக அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்பு கொண்டு அமெரிக்கா-சிறிலங்காவின் எதிர்கால உறவு தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார்.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சியின் கீழ் அமெரிக்கா-சிறிலங்கா உறவுகளை மேலும் எவ்வாறு பலப்படுத்துவது தொடர்பாகவே பென்சும் அதிபர் சிறிசேனவும் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்ப் மற்றும் சிறிசேனவிற்கு இடையில் விரைவில் சந்திப்பொன்றை ஒழுங்குபடுத்துவதற்கு முயற்சிப்பதாக அமெரிக்கத் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பென்ஸ், அதிபர் சிறிசேனவிடம் தெரிவித்திருந்தார்.

வழிமூலம்       – The Sunday leader
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *