இன்றைய நவீன ட்ரோன் போருக்கு முன்னோடியாக இருந்தவர்கள் வான்புலிகள்
பல வழிகளில், உலகம் இப்போது காணும் நவீன ட்ரோன் போரில் முன்னோடியாக இருந்தது வான்புலிகள் தான் என, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“சிறிலங்கா வான்வழிப் போரில், அதிகம் அறியப்படாத, ஆனால் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பரிணாம வளர்ச்சியைக் கண்டது.
வான் புலிகள், வான் பலம் இனி தேசிய அரசுகளின் தனித்துவமான களமாக இல்லை என்ற கருத்துக்கு ஒரு புதிய மற்றும் எதிர்பாராத பரிமாணத்தை அறிமுகப்படுத்தினர்.
குறைந்த உயரத்தில் செயற்படுவதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்ட இலகுரக விமானங்களைப் பயன்படுத்தி, அரசு சாரா அமைப்புகளால் கூட வான்வெளியில் ஊடுருவி, திடீர் தாக்குதல்களை நடத்தி, ஒரு மரபுசார் இராணுவத்தின் மீது உளவியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அவர்கள் நிரூபித்தனர்.
பெரும்பாலும் இரவில், தாழ்வாகப் பறந்து, ராடரின் வரம்புகளைச் சாதகமாகப் பயன்படுத்தி, விடுதலைப் புலிகள் குறைந்த அடையாள வான்வழிப் போரின் ஒரு ஆரம்ப வடிவத்தை அறிமுகப்படுத்தினர்.
இது அரசு சாரா அமைப்புகளால் கூட வான்வெளியைக் கைப்பற்ற முடியும் என்ற ஒரு சக்திவாய்ந்த பாடமாக அமைந்தது.
மிக முக்கியமாக, இது வான்வழிப் போரில் செலவுச் சமச்சீரின்மையின் தர்க்கத்தை அறிமுகப்படுத்தியது.
மலிவான தாக்குதல் கருவிகள், தாக்குபவர்கள் தங்கள் ஆரம்பத் திறனுக்காகச் செலவிடுவதை விட, தற்காப்பவர்களை எதிர் நடவடிக்கைகளுக்காக மிக அதிகமாகச் செலவிடச் செய்யும் நிலையை ஏற்படுத்தியது.
பல வழிகளில், இதுவே உலகம் இப்போது காணும் நவீன ட்ரோன் போரின் ஒரு முன்னோடியாக இருந்தது.“ என்றும் சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
