மேலும்

எந்த விலையைக் கொடுக்கவும் தயாராக உள்ள சீனா

admiral-harris-maithri‘பசுபிக் பிராந்தியத்தை அமெரிக்கா மீள்சமப்படுத்தும். இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலுள்ள எமது நண்பர்கள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் எமது கூட்டுப் படையானது மிக நெருக்கமாகப் பணியாற்றும். கோரிக்கை விடுக்கப்பட்டால் பரந்த இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போரிடுவோம்.

இது ஆர்வத்தினால் எழுந்ததல்ல. இது எமது மரபணுவில் ஊறிப்போயுள்ளது’  இவ்வாறு கூறியிருந்தார் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரி பி.ஹரிஸ்.

‘அமெரிக்க பசுபிக் கட்டளைப் பீடமானது எமது உள்ளக முகவர் பங்காளிகள் மற்றும் கட்டளைநிலையில் வைக்கப்பட்டுள்ள போர் வீரர்கள் ஆகியோருடன் இணைந்து எமது தேசிய நோக்கங்களை பூகோள ரீதியாக நிறைவேற்றுவதற்காகப் பணியாற்றுவோம். பசுபிக் கட்டளைப்பீடத்தால் பூகோள ரீதியாக முகாமை செய்யவேண்டிய எனது பொறுப்புக்கள் தொடர்பாக நான் விழிப்புடன் உள்ளேன்’ எனவும் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி கூறினார்.

‘இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்திலுள்ள எமது நண்பர்கள் மற்றும் கூட்டணி நாடுகளுடன் எமது கூட்டுப் படையானது மிக நெருக்கமாகப் பணியாற்றும். கோரிக்கை விடுக்கப்பட்டால் பரந்த இந்திய-ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்காகப் போரிடுவோம்’ என்கின்ற கருத்தை நாங்கள் மீளவும் நோக்க வேண்டும்.

இவ்விரு தொடர்புபட்ட கருத்துக்களைக் கூறிய அமெரிக்கக் கட்டளைத் தளபதி கொழும்பில் இடம்பெற்ற காலி கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு தனது பாரிய கட்டளையின் சிறப்பான முகாமைத்துவம் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோதே இதனைத் தெரிவித்தார். இவர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நினைவுப் பரிசில் ஒன்றையும் பெற்றுக் கொண்டார்.

galle_dialogue_2016-2

கொழும்பில் இடம்பெற்ற கடல் பாதுகாப்பு சார் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிறிலங்கா கடற்படையின் அழைப்பின் பேரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டீ சில்வா, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

42 பிரதிநிதித்துவ நாடுகள் மற்றும் 12 அனைத்துலக நிறுவனங்களைச் சேர்ந்த வெளிநாட்டு கடல் மற்றும் கரையோர விவகார வல்லுனர்கள் சிறிலங்கா பிரதிநிதிகளுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மூலோபாய கடல்சார் கூட்டுப் பங்களிப்பை மேலும் அதிகரிப்பது தொடர்பான ஏழாவது கடல் பாதுகாப்பு மாநாடானது நவம்பர் 28-29 வரை இடம்பெற்றது. இதில் கடற்துறை சார் வல்லுனர்கள் தமது தொழில் நிபுணத்துவ நலன்கள் தொடர்பாகக் கலந்துரையாடினார்கள்.

ஆகவே இவ்வாண்டு நடைபெற்ற ஏழாவது மூலோபாய கடல்சார் கூட்டுப் பங்களிப்பு மாநாட்டின் முக்கிய விடயங்களாக சுதந்திரமான கடற் போக்குவரத்து, அனைத்து பொதுமக்கள் மற்றும் இராணுவ விமானங்களின் சுதந்திரமான போக்குவரத்து தொடர்பாக உரையாடப்பட்டது.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதியால் சுதந்திரமான கடற்போக்குவரத்து மற்றும் வான் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு வலைப்பின்னல் ‘கோட்பாடு’ வரையறுக்கப்பட்டது. சிறிய மற்றும் பெரிய என்கின்ற வித்தியாசமின்றி அனைத்து நாடுகளும் கடலில் செல்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளதாகவும் ஹரிஸ் குறிப்பிட்டார். இவரது இந்தக் கருத்தானது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

தற்போதைய சிறிலங்கா வெளியுறவுக் கோட்பாட்டின் கீழ் இவரது இந்தக் கருத்து வரவேற்கத்தக்கதும் இந்த வலைப்பின்னலுக்கு கணிசமானளவு பங்களிப்பை வழங்கக் கூடியதுமாகும். இந்திய மாக்கடலில் சுதந்திரமான போக்குவரத்து தொடர்பாக கலந்துரையாடுவதில் சிறிலங்காவும் முக்கிய நாடாக இருந்திருக்கும் என நான் நம்புகிறேன்.

2011 தொடக்கம் அமெரிக்காவின் கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவிற்குப் பயணம் செய்கின்றமை இங்கு முக்கியமான விடயமாகும். இது சிறிலங்கா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான இருதரப்பு இராணுவ உறவைப் பலப்படுத்துவதில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. மார்ச் மாதம், அமெரிக்காவின் ‘புளூ றிட்ஜ்’ என்கின்ற ஏழாவது கப்பல்படையின் கப்பலானது கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற போது அதிபர் சிறிசேன இதனைச் சென்று பார்வையிடுவதற்கான அழைப்பைப் பெற்றார்.

uss-somerset-1

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அமெரிக்காவின் மேலும் மூன்று கப்பல்கள் சிறிலங்கா துறைமுகத்தில் வெற்றிகரமாகத் தரித்து நின்றன.  அதாவது யுஎஸ்எஸ் நியூ ஒர்லியன்ஸ், யுஎஸ்எஸ் பிராங்க் கேபிள் மற்றும் யுஎஸ்எஸ் சோமசெற் ஆகியனவே அவையாகும். யுஎஸ்எஸ் சோமசெற் கப்பலானது சில நாட்களுக்கு முன் திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக, யுஎஸ்எஸ் சோமசெற் கப்பலும் அதன் வீரர்களும் சிறிலங்கா கடற்படை வீரர்களுக்கும் கப்பல் மாலுமிகளுக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பயிற்சிகளை பரிமாற்றிக் கொண்டனர். இக்கூட்டு நடவடிக்கையில் அடிப்படை இராணுவப் பயிற்சிகள் மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் இடர்நிவாரணங்களை வழங்கக் கூடிய படகுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

அமெரிக்காவின் இக்கூட்டுப்பயிற்சியானது சிறிலங்காவுடனான இராணுவசார் உறவைப் பலப்படுத்துவதாகவும் இதன்மூலம் சிறிலங்காவில் தற்போது முன்னெடுக்கப்படும் நல்லிணக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு நலன்பயக்கும் எனவும் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி தெரிவித்தார்.

காலி பாதுகாப்புக் கருத்தரங்கில் சீனாவின் மக்கள் இராணுவத்தின் கடற்படைப் பொறுப்பதிகாரி றியர் அட்மிரல் வாங்க் டசோங்க் உட்பட பல்வேறு நாட்டின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில், மகிந்த ராஜபக்சவின் சீனா மையப்படுத்தப்பட்ட வெளியுறவுக் கோட்பாட்டின் விளைவு தொடர்பாக ஹரிஸ் சுட்டிக்காட்டினார்.

இதன்மூலம் சிறிலங்கா தனிமைப்படுத்தப்பட்டதாகவும் ஹரிஸ் குறிப்பிட்டார். ‘சிறிலங்காவானது மூன்று பத்தாண்டுகால யுத்தத்திலிருந்து மீளெழுந்தமை மற்றும் தனிமை போன்றவற்றிலிருந்து வெளியேறுவதற்காக தற்போது நல்லிணக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ், ஜனநாயக ஆட்சி மீண்டும் மலர்ந்துள்ளதை சிறிலங்கா வாழ் மக்கள் பார்க்கின்றனர்.

நீதி மற்றும் சட்ட ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான தங்களின் தொடர்ச்சியான ஈடுபாடானது அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும். இதில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியமானது. சிறிலங்கா, அமெரிக்கா மற்றும் இந்தியா, அவுஸ்திரேலியா ஆகியன இந்திய மாக்கடலின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்துகின்றன. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் எழுந்துள்ள முக்கிய சவால்கள் மற்றும் நிலைத்தன்மை மற்றும் செழுமைக்கான அச்சுறுத்தல் ஆகியவற்றை முறியடிப்பதற்காகவே கடற்பாதுகாப்பில் உரிமையுடன் ஈடுபட்டுள்ளன’ என அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி ஹரிஸ் தெரிவித்தார்.

இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் அடையாளங் காண முடியாத பெரும் எண்ணிக்கையான கப்பல்களால் நேரடி அச்சுறுத்தல் எழுந்துள்ளதாகவும் தளபதி ஹரிஸ் குறிப்பிட்டார். ‘இவ்வாறான பொதுவான கூட்டு நடவடிக்கையின் மூலம் இந்தக் கப்பல்கள் என்ன நோக்கத்தில் கடலில் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன என்பதையும் இவை போதைப் பொருட் கடத்தல், சட்டரீதியற்ற மீன்பிடி அல்லது ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றனவா என்பதையும் நாங்கள் அறிகின்றோம். இவ்வாறான சூழலை அறிந்து கொண்டு இவற்றுக்கு எவ்வாறு சிறந்த பதிலை வழங்குவது என்பது தொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு இவை நாட்டுத் தலைவர்களுக்கு உதவுகின்றன’ என ஹரிஸ் தனது உரையில் தெரிவித்தார்.

70 கப்பல்கள், 300 விமானங்கள் 40,000 கடற்படை மற்றும் நீர்மூழ்கி வீரர்களைக் கொண்டுள்ள அமெரிக்காவின்  பசுபிக் கட்டளைப்பீடத்தின் ஏழாவது கப்பற்படையின் ஒரு கப்பலான,  யுஎஸ்எஸ் பூளு றிட்ஜ்ஜே அண்மையில் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளை மையமானது ஒன்றிணைக்கப்பட்ட கட்டளை நிலை வீரர்கள், கட்டளைத் தளபதி, மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி ஆகியோரைக் கொண்டுள்ளது.

இக்கட்டளை மையமானது அமெரிக்காவின் மேற்குக் கடலிற்கு 100 கடல் மைல் தொலைவு தொடக்கம் இந்தியாவின் மேற்குக் கரை வரைக்கும், ஆட்டிக் தொடக்கம் அந்தாட்டிக்கா வரைக்குமான கடல் சார் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக உள்ளது.

அமெரிக்க பசுபிக் கட்டளைத் தளபதி (அட்மிரல் ஹரிஸ்) நேரடியாக அமெரிக்க அதிபருக்கு அறிக்கையிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். ‘இந்திய மாக்கடலில் எழுந்துள்ள இராணுவ நகர்வைச் சமப்படுத்துவதில் அமெரிக்கா பங்கு வகிக்கும் எனவும் புதிய பிராந்திய பூகோள அரசியல் நிலைப்பாட்டில் சிறிலங்காவுடனான அமெரிக்காவின் இராணுவ உறவுகள் புதிய அளவுகோலாக இருக்கும் எனவும் ராஜபக்ச காலத்தில் சீனா செய்தது போன்று தொடர்ந்தும் சிறிலங்காவில் சீனா செல்வாக்குச் செலுத்த முடியாத நிலை  உருவாகும் என்பதையும் அமெரிக்காவின் நிலையானது சிறிலங்காவிற்கு உத்தரவாதத்தை வழங்குகிறது’ என தளபதி ஹரிஸ் குறிப்பிட்டார்.

ராஜபக்ச ஆட்சியிலிருந்த போது விரிசலடைந்திருந்த அமெரிக்க – சிறிலங்கா இராணுவ பங்களிப்பானது தற்போது மீண்டும் நெருக்கமடைந்து வருகிறது. ஆனால் தற்போது சீனாவால் ராஜபக்சவின் புதிய அரசியற் கட்சிக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. புதிய அமெரிக்க-சிறிலங்கா உறவானது நிதிப் பரப்புரையாக மாற்றமுறலாம். இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்படலாம்.

இவ்வாறானதொரு நிலை உருவாவதற்கு சீனா எத்தகைய விலையையும் மகிழ்ச்சியாகக் கொடுக்கும்.

ஆங்கிலத்தில்  – DE VALLIERE
வழிமூலம்     – Ceylon today
மொழியாக்கம்  – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *