மேலும்

கொத்தணிக் குண்டுகள் குறித்த பரணகமவின் கருத்துக்கு மங்கள சமரவீர கண்டனம்

Maxwell Parakrama Paranagamaஇறுதிக்கட்டப் போரில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்து அறிக்கை வெளியிட்டதன் மூலம், காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம, தனது அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்த முயற்சித்திருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டியுள்ளார்.

கொத்தணிக் குண்டு குற்றச்சாட்டுகள் நம்பகமற்றது என்றும், 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் அவற்றை சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தியிருந்தாலும் கூட, அது சட்டவிரோதமானதல்ல என்றும் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்திருந்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,

‘இறுதிக்கட்டப் போரில் கொத்தணிக் குண்டுகளை சிறிலங்கா படையினர் பாவித்திருக்க வாய்ப்பு இல்லை என்றே நானும் நம்புகிறேன்.

எனினும் அவற்றைப் பாவித்திருந்தால் அது பாரதூரமான குற்றமாகும். இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

இந்த விடயம் தொடர்பாக, மக்ஸ்வெல் பரணகம போன்ற ஒருவரிடம் இருந்து இத்தகைய கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அவரது கருத்து ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு ஏற்றதல்ல.

அவர் தனது அதிமேதாவித்தனத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். அவர் எல்லா விடயங்களுக்கும் கருத்தை வெளியிடக் கூடாது.

கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்று சிறிலங்கா அரசாங்கம் விசாரிக்கும்.  எந்த விசாரணைகளும் இல்லாமல் எந்தக் கருத்தையும் கூற முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *