மேலும்

ரஷ்யாவிடம் போர்க்கப்பலை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம்

ரஸ்யாவிடம் இருந்து ஜிபாட் வகை போர்க்கப்பல்களை வாங்குவதில் சிறிலங்கா ஆர்வம் காட்டுவதாக ரஸ்ய ஊடகமான ஸ்புட்னிக்  செய்தி வெளியிட்டுள்ளது.

ஜிபாட் போர்க்கப்பல்களை வாங்குவதில், சிறிலங்காவும், பங்களாதேசும் ஆர்வம் காட்டுவதாக, ரஷ்யாவின் அரசுத்துறை  தொழில்நுட்ப நிறுவனத்தின், அனைத்துலக ஒத்துழைப்புத் திணைக்களத்தின் தலைவராக விக்டர் கிளாடோவ் தெரிவித்துள்ளார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், 15ஆவது ஆசிய பாதுகாப்புச் சேவைகள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, கடந்த 18ஆம் நாள் ஆரம்பமாகி இன்று வரை நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியில், ரஷ்ய இராணுவத் தொழில்துறை வளாகத்தின் சார்பில் 300இற்கும் மேற்பட்ட தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றில் ஜிபாட் வகை போர்க்கப்பல்களை வாங்குவதில் பங்களாதேஸ் மட்டுமன்றி சிறிலங்காவும் ஆர்வம் காட்டியது. சிறிலங்காவில் இருந்து வந்த, பாதுகாப்பு அமைச்சின் குழு, எமது காட்சிக் கூடத்துக்கு வந்து, பார்வையிட்டு, இவற்றை வாங்குவதில் ஆர்வத்தை வெளிப்படுத்தினர் என்று விக்டர் கிளாடோவ் தெரிவித்தார்.

சிறிலங்கா அல்லது பங்களாதேசில் இருந்து இதுபற்றி கேள்விகள் வந்தால், உடனடியாகப் பதிலளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜிபாட் வகை போர்க்கப்பல்கள்,  கப்பல்களை எதிர்கொள்ளும் வகையிலும், நீர்மூழ்கிகள் மற்றும் வான் இலக்குகளுக்கு எதிராக சண்டையிடும் வகையிலும், தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கஸ்பியன் கடலில் நிறுத்தப்பட்டிருந்த இந்த வகை போர்க்கப்பல்களில் இருந்தே, சிரியா மீது ரஷ்ய கடற்படையினர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *