மேலும்

வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமா?- சம்பந்தன் தலைமையில் ஆலோசனை

Sam-CVதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வரும் வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, வடக்கு மாகாணசபை அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

இதன்போது, வரும் சனிக்கிழமை யாழ் பொது நூலக அரங்கில் நடைபெறும் நிகழ்வில், இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வடக்கு மாகாணசபையால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனை, இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும், எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவும் இணைந்து இந்த தீர்வு யோசனையை சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதன் பின்னர், கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில், ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

இதன்போதே, வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கி, இரண்டரை ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், எஞ்சிய இரண்டரை ஆண்டுகளாவது வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் என்றும், அதற்காக நான்கு அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்றும் கோரும் மனு வொன்று நாளை நடக்கவுள்ள மாகாணசபையின் அமர்வில் முதலமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

வடமாகாணசபையின் பிரதி தவிசாளர் அன்ரணி ஜெகநாதன் தலைமையில், கூட்டமைப்பின் 16 மாகாணசபை உறுப்பினர்கள் இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மனுவில் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவில், மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஐவர் தவிர, மூன்றில் இரண்டு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மனுத் தொடர்பாக, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் வரும் சனிக்கிழமை நடக்கவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்ட போது, முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர்களின் நியமனத்தில் முடிவுகளை எடுத்திருந்தார்.

அப்போது இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு கருத்து “வடக்கு மாகாண அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமா?- சம்பந்தன் தலைமையில் ஆலோசனை”

  1. மனோ says:

    வினைத்திறன் இல்லை என்றால் ஒட்டு மொத்த அமைச்சர்களும் முதலமைச்சர் உட்பட பதவி விலகச் சொல்வதே சரியாக இருக்கும். கூட்டணிக் கட்சிகளின் இழுபறிகளும் முடிவுக்கு வந்து விடும்.

    முதலமைச்சரின் மக்கள் நல அரசியல் நிறுத்தப் பட்டு சர்வதேச நலன்களை செயற்படுத்தும் கூலி அரசியல்தான் நமக்கு தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *