மேலும்

ஜி-7 மாநாட்டு பாதுகாப்பு- ஜப்பானின் தீவிரவாத முறியடிப்பு பிரிவு சிறிலங்காவுடன் ஆலோசனை

Akira Sugiyama -karunasenaஜப்பானின் தீவிரவாத முறியடிப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அகிரா சுகியாமா சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம், சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை இவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதுதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் பற்றி இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்புத்துறை உயர்மட்ட அதிகாரிகளுடனும், ஜப்பானின் தீவிரவாத முறியடிப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அகிரா சுகியாமா பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத முறியடிப்பு விவகாரத்தில் இருதரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்திக் கொள்வதற்கே இவர் சிறிலங்கா வந்துள்ளார்.

Akira Sugiyama -karunasena

கடந்த ஆண்டு நொவம்பர் 13ஆம் நாள், பாரிசில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, கடந்த டிசெம்பர் மாதம் ஜப்பான் இந்த தீவி்ரவாத முறியடிப்பு புலனாய்வுப் பிரிவை ஆரம்பித்திருந்தது.

ஜப்பானியப் பிரதமர் பணியகத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புலனாய்வுப் பிரிவு, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் வழிகாட்டுதலில் செயற்படுகிறது.

ஜப்பானின் இசே ஷிமா நகரில், வரும் மே மாதம் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் (ஜி-7)  தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

இதில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கான பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஜப்பான், அவசர அவசரமாக தீவிரவாத முறியடிப்பு புலனாய்வுப் பிரிவை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையிலேயே, தீவிரவாத முறியடிப்பு துறையில் சிறிலங்காவின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது.

ஜப்பானின் தீவிரவாத முறியடிப்பு புலனாய்வுப் பிரிவுக்கு பயிற்சி அளிக்க இந்தியா ஏற்கனவே முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *