மேலும்

சிறிலங்காவுக்கு ஏன் வந்தார் போர்க்குற்ற விவகார நிபுணர்?- அமெரிக்கத் தூதரகம் அறிக்கை

todd-tna (1)அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர், ரொட் புச்வால்ட் மற்றும், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் மன்பிரீத் ஆனந்த் ஆகியோர் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக, அமெரிக்கத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த இக்கட்டான தருணத்தில்,  அரசியலமைப்பு சீர்திருத்தம், மற்றும் அமைதியான, செழிப்பான, நல்லிணக்கமான எதிர்காலத்தை உருவாக்க, இலங்கை மக்களின் ஆதரவை அமெரிக்கா கோருவதாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா வந்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளான, ரொட் புச்வால்ட் மற்றும், மன்பிரீத் ஆனந்த் ஆகியோர், நல்லிணக்கம் தொடர்பாக சிறிலங்காவில் பல்வேறு தரப்பினரினதும் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

இது அடுத்து வரும் ஆண்டுகளில், சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் உதவிகள் மற்றும் கொள்கையை வடிவமைப்பதற்கு உதவியாக அமையும் என்றும் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.

todd-tna (1)todd-tna (2)

இவர்கள் சிறிலங்கா அரசாங்க மற்றும் அரசியல் தலைவர்களையும், நாடெங்கும் உள்ள சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

நல்லிணக்க விவகாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடிய ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண ஆளுனரையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனையும், சந்தித்து விபரங்களை கேட்டறிந்தார்.

அத்துடன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த இவர்கள், நல்லிணக்கத்துக்கான சவால்கள், வடக்கின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோவையும் சந்தித்த இவர்கள்,  யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி ஆகிய பகுதிகளுக்கும் சென்று பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடியிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில், இளைஞர்கள், மாணவர்கள், உள்ளூர் அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் புச்வால்ட் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இந்தப் பயணம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரொட் புச்வால்ட், “ சிறிலங்காவின் இன்றைய நிலைமைகள் தொடர்பாக பல்வேறு  தரப்புகளினதும் குரல்களை கேட்டறிந்து கொள்வதற்கான பயனுள்ள பயணமாக இது அமைந்தது,

சிறிலங்காவில் பல இடங்களுக்கும் சென்றதன் மூலம், முன்னேற்றங்களையும், இன்னமும் உள்ள சவால்களையும் அறிந்து கொள்ள முடிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *