மேலும்

தினேஸ், வீரவன்சவை மாட்டி விட்ட பீரிஸ் – வெடிபொருள் மீட்பு குறித்து அவர்களிடமும் விசாரணை

gl-peirisசாவகச்சேரியில் தற்கொலை தாக்குதல் அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான, விமல் வீரவன்ச மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

சாவகச்சேரியில் கடந்த வாரம் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்  வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்தவையா என்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கேள்வி எழுப்பியிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம், கடந்த சனிக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர்.

குற்றப்புலனாய்வுப் பணியகத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடம் இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதன் போது அவர், இந்த விவகாரம் தொடர்பாக, கேள்வி எழுப்புமாறு தமக்கு தினேஸ் குணவர்த்தனவே அறிவுறுத்தியதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

தினேஸ் குணவர்த்தனவே அந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தவிருந்ததாகவும் கடைசி நேரத்தில், அவருக்குப் பதிலாக தாம் அதில் பங்கேற்றதாகவும் பீரிஸ் கூறியிருந்தார்.

இதுபற்றி தினேஸ் குணவர்த்தனவுக்கே தெரியும் என்றும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியிருந்ததுடன், இதே போன்று விமல் வீரவன்சவும் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பீரசின் வாக்குமூலத்தின் அடிப்படையில், விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன ஆகியோரிடம், குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *