மேலும்

கி.பி.அரவிந்தன் எனும் ஆளுமையின் 1ஆவது ஆண்டு நினைவாக… – நேர்காணல்: பகுதி 2

ki.piஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி,கவிஞர், எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் அவர்களுடன் 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடல்.   –  நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா.

கி.பி அரவிந்தன்இறுதியாக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் இது என்ற அடிப்படையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. அவரது கவிதைகள் பிரேஞ் மொழியாக்கம் செய்யப்பட்டு நூலுருப் பெற்ற பின்னணியில் தொடங்கும் உரையாடல், ஆரம்பகாலப் போராட்டப் பங்களிப்பிலிருந்து, கலை இலக்கிய, சமூகச் செயற்பாடுகள், புலம்பெயர் வாழ்வியல், தாயக-தமிழக-புலம்பெயர் அரசியல், இளைய தலைமுறை எனப் பல்வேறு கருத்துகளை உள்ளடக்கி விரிந்து சென்றது என்ற வகையிலும் இதன் உள்ளடக்கம் பெறுமதியுடையதாகின்றது.

அவருடைய அனுபவங்களின் ஊடாக விடுதலைப் போராட்டத்தினது முக்கிய வரலாற்றுப் பக்கங்களையும், புலம்பெயர் வாழ்வியல் பற்றிய காத்திரமான பார்வையையும் பதிவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் இது. அவருடைய முதலாவது ஆண்டு நிறைவில், அவரது நினைவுகளுக்குச் சமர்ப்பணமாய் எழுத்து வடிவில் இந்நேர்காணலை வெளியிடுவது பொருத்தமும் பெறுமதியும் மிக்கதெனக் கருதுகின்றோம்.

*****

‘தமிழர்களுக்கான இலக்கியம்’,‘தமிழர் இலக்கியம்’,‘தமிழர்களுக்கான அரசியல்’,‘தமிழர் அரசியல்’ என்ற சொல்லாடல்கள் மூலம் அவற்றின் வேறுபாட்டையும் தேவைகளையும் விளக்கமாகக் கூறினீர்கள். உங்களுடைய வாசிப்பனுபவம், இளமைக்காலத்தில் இலக்கிய ஆர்வம் முகிழ்த்த, வளர்ந்து சூழல் எப்படி அமைந்தது என்று கூறுங்கள்?

அடிப்படையில் நான் ஒரு இலக்கியவாதி இல்லை என்பதை இங்கு முதலில் கூறவேண்டும். அடிப்படையில் நான் ஒரு சமூகத்தை நேசிக்கின்ற, சமூகப் பிரச்சினைகளைக் களைய விரும்புகின்ற, சமூகத்திற்கான நேசம் மிக்க சமூகப் போராளியாகத் தான் என்னை அடையாளப்படுத்த விரும்பினேன். அவ்வகையான செயற்பாடுகள் தான் எனது தொடக்கமாகவும் இருந்தன. சிறு வயதிலிருந்தே என்னுடன் வாசிப்புப் பழக்கமும்,இலக்கிய ரீதியான பரிச்சயமும் இருந்தது. இதற்குக் காரணம் எனது வீட்டுச் சூழலாக இருக்கலாம். எனது ஆரம்பகாலம் அதாவது அரிவரி,முதலாம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்புகளில் நான் என்னுடைய தாய்மாமன் வீட்டிலிருந்து தான் கல்வி கற்றேன். எனது அப்பா, அம்மாவுடன் இருந்ததைவிட அதிகமாக நெடுந்தீவிலிருந்த மாமா வீட்டிலிருந்து எனது தொடக்கக் கல்வியைக் கற்றேன்.

அந்தத் தீவிற்கு ஒரு நாளைக்கு ஒரு முறை தான் தோணி வரும். அதில் தான் தபால் மற்றும் மரக்கறி உட்பட்ட பொருட்கள் வரும். அதில் தான் பேப்பரும் வரும். என்னுடைய மாமா வீரகேசரி இதழின் தொடர் சந்தாதாரர். பிரதான வீதியை அடைய வீட்டியிலிருந்து சற்றுத்தூரம் நடந்து வரவேண்டும். பதினொரு மணியளவில் பிரதான வீதியில் மாமா வந்து நின்று விடுவார். தபாற்காரர் பேப்பரை எனது மாமாவின் கையில் கொடுத்து விட்டுப் போவார். அவர் அங்கிருந்து அந்தப் பேப்பரை வாசித்தபடியே வீட்டிற்கு வந்தடைவார். கடைசியில் அந்தப் பேப்பர் எஙகு அச்சிடப்பட்டது என்பதையும் மத்தியான சாப்பாட்டிற்கு முன்னர் வாசித்து முடித்து விடுவார். இது எனக்குள் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தியது. அத்தோடு எனது தாய்மாமன் மற்றும் எனது தாய், தந்தையர் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஊரில் கத்தோலிக்க சமூகத்தவர்கள் பத்திரிகைகள் வெளியிடுவார்கள். ‘சத்தியவேதப் பாதுகாவலன்’ என்ற வாரப் பத்திரிகை இருந்தது. அதேபோன்று‘இருதய தூதன்’ என்கின்ற மாதப் பத்திரிகை இருந்தது. இவற்றையும் மாமா சந்தா செலுத்தித் தான் பெற்றுக் கொள்வார்.இவை ஒருவகையான் வாசிப்புப் பழக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

பின்னாளில் அதாவது நான் ஐந்தாம், ஆறாம் வகுப்புப் படிக்கும் போது எனது சொந்த வீட்டில் ஐயா (அப்பாவை ஐயா என்றே அழைப்பேன்) மற்றும் அம்மா போன்றவர்கள் தமக்கென ‘சூட்கேசுகள்’ வைத்திருந்தார்கள். இந்த சூட்கேசுகளை நாங்கள் ஆராய வெளிக்கிட்ட போது ஐயாவினுடைய சூட்கேசுக்குள் திராவிட இயக்கப் புத்தகங்களை நான் முதன் முதலாகக் கண்டேன். சி.பி.சிற்றரசு, கே.ஏ.மதியழகன், அறிஞர் அண்ணாத்துரை, கலைஞர் மு.கருணாநிதி போன்றவர்களினதும் ‘திராவிடப் பண்ணை’ என்கின்ற ஒரு வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட புத்தகங்களையும் நான் கண்டேன். தந்தை பெரியாரின் நூல்கள் எனப் பல்வேறு நூல்களைப் பார்த்த பின்னர் இவை தொடர்பாக நான் ஐயாவுடன் கதைத்த போது, ‘நான் ஒரு நாத்திகவாதியாக இளவயதில் இருந்தேன்’ எனக் கூறினார். ஆனால் நாங்கள் பார்க்கும் போது அவர் ஒரு பக்திமானாக இருந்தார் என்பது வேறுகதை. இவ்வாறான விடயங்களுடன், நான் படித்த பாடசாலை, நாங்கள் நகரத்திற்கு குடிபெயர்ந்த பின்னர் யாழ்ப்பாண நூலகம் ஒரு 5-10 நிமிட நடை தூரத்தில்இருந்தமை போன்ற பல்வேறு விடயங்கள் சேர்ந்து வாசிப்புப் பழக்கத்தை எனக்குள் வளர்த்தன. ஆனால் இவைகள் எல்லாம் பெரிதளவில் என்னை எழுதுவதற்குத் தூண்டியது எனச் சொல்ல முடியாது.

சரி. அப்படியெனில் உங்களை எழுதத் தூண்டிய சூழல்களும் காரணிகளும் எத்தகையன?

kipiசென்னைக்கு நான் 1978ம் ஆண்டு சென்றபோது அங்கு நான் உரையாடுவதற்கு அரசியல் அல்லாத விடயங்கள் தேவைப்பட்டன. தொடர்ந்தும் அரசியலையே பேச முடியாது. போராட்டத்திற்கு அப்பால் என்ன விடயம் உள்ளது. அப்போது தான் எனக்கு இலக்கியம் பற்றியதான, இலக்கியம் மீதான ஆர்வம், திசைதிருப்பல் போன்றன நிகழ்ந்தது. ஈழத்து இலக்கியம் பற்றியதான ஆர்வம் ஏற்பட்டது. அதை நாங்கள் இங்கு அறிமுகம் செய்து அதற்கு ஊடாக உரையாட வேண்டும் என்கின்ற தேவை ஏற்பட்டது. அப்போதே நான் உண்மையாக இலக்கிய வாசிப்பிற்கும் இலக்கிய ரீதியான பயிற்சிக்கும் இலக்கிய ரீதியான அறிமுகத்திற்கும் வந்தேன். அதேவேளையில் நான் சார்ந்த இயக்கத்தின் சார்பாக நான் ஒரு வெளியீட்டுப் பிரிவுக்கும் பொறுப்பாளனாக இருந்ததால் பத்திரிகை, மாத இதழ், வார இதழ், துண்டுப்பிரசுரங்கள், சிறுநூல்கள் போன்றவற்றை வெளியிட வேண்டிய தேவை வரும்போது தவிர்க்க முடியாமல் இந்தத் துறையைச் சார்ந்த தமிழ்நாட்டு நண்பர்களோடு உறவாடவும் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர்களது உதவியைப் பெறுவதற்காகவும் தொடர்பைப் பேணிய போதே இலக்கிய ரீதியான விடைகள் வந்தன.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னால் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் எனச் சொல்லப்பட்ட பின்னர், நான் நேரடியாக இயக்கத்தை விட்டு விலகி வீடு சென்று சரணடைந்தேன். இங்கு சரணடைந்தேன் என்று தான் கூறவேண்டும். நான் வீட்டை விட்டு வீராவேசமாகப் புறப்பட்டு பின்னர் சரணடைந்தேன். 1988, 1989, 1990 பிறேமதாசாவின் கால கட்டம்.அந்த நேரம் இந்திய இராணுவம் வெளியேறுகிறது. மீண்டும் இலங்கை இராணுவத்தின் பிரச்சினை ஏற்படுகிறது. இவற்றை நான் நேரில் அனுபவித்த போது அவை குறித்து எனது தமிழ்நாட்டு நண்பர்களுக்கு நிலைமைகளைச் சொல்வதற்காக எழுதிய கவிதைகள் தான் முதலாவதாக ‘இனியொரு வைகறை’ என்கின்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது. அதிலிருந்து தான் நான் கூடுதலாக எழுத ஆரம்பித்தேன்.

உங்களுடைய இளமைக்கால வாசிப்பு ஈடுபாடு, இலக்கியப் பரிச்சயம் உண்டான பின்னணி, எழுத்துப் பணியை நோக்கி நீங்கள் உங்களை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள், அதற்கு தமிழக இலக்கியச் சூழல் எவ்வாறு துணைநின்றது என்பன தொடர்பாக நீங்கள் பகிர்ந்து கொண்டீர்கள்.உங்களது இலக்கியப் பணிகள் தொடர்பாகப் பேசிக்கொள்ளலாம் என்ற வகையில் நீங்கள் முன்னர் ‘அப்பால் தமிழ்’ என்ற இலக்கிய இணைய இதழ் உட்பட்ட பல சஞ்சிகைகளை நெறிப்படுத்தினீர்கள். தற்போது புதினப்பலகை செய்தி இணையத்தின் நெறியாளராகவும், காக்கைச் சிறகினிலே மாத இதழின் நெறியாளர்களில் ஒருவராகவும் இருக்கிறீர்கள். இந்தப் பணிகள் தொடர்பாக ஏதாவது பகிர்ந்து கொள்ள முடியுமா?

நான் புலம்பெயர்ந்து பிரான்ஸ் வந்தபோது இங்கிருந்தவாறு தாயகம் சார்ந்து சிந்திக்கும் போதும், இங்கு எதிர்கொண்ட சிக்கல்களின் போதும் எழுத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டேன், சஞ்சிகைகளின் பக்கம் ஈர்க்கப்பட்டேன். எனது கருத்துக்களை வெளிக்கொணர்வதற்கான சஞ்சிகைகளை கொண்டு வரவேண்டும் என நினைத்தேன். அதன் முதற்படியாக, நண்பர்கள்; சேர்ந்து ‘மௌனம்’ என்ற காலாண்டு இதழை நடத்தினோம். அதனுடைய தொடர்ச்சியாகத் தான் ‘அப்பால் தமிழ்’ என்பதை நிறுவினோம். ‘அப்பால் தமிழ்’ என்பது ஈழத்து இலக்கியத்திற்கான முதற்படி என நான் நினைக்கிறேன். இதனை நான் முழுமையாக உரிமை கோர விரும்பவில்லை. முழுமையான ஈழத்தமிழர்களுக்கான ஒரு இலக்கிய இணைய இதழாக ‘அப்பால் தமிழ்’ அப்போது இருந்தது என்பது எனது கருத்து. சிலவேளைகளில் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

அந்த நேரத்தில் வேறு இதழ்களும் இருந்தன. ஏராளமான தமிழ்நாட்டு இலக்கிய இணைய இதழ்கள் இருந்தபோது ‘அப்பால் தமிழ்’ என்பது அதற்கு மாறுபட்டதாக இருந்தது. அந்த இணைய வழியாக நாங்கள் ஈழத்து எழுத்தாளர்கள் பலருடைய நாவல்கள், குறிப்பாக அ.பாலமனோகரனின் நாவல்கள் போன்றவற்றை வாசகர்களுக்குத் தொடர் நாவலாக வெளியிட்டு அதனை அறிமுகப்படுத்தி வைத்தோம். பல்வேறு ஈழத்து எழுத்தாளர்கள் பற்றிய நூல் வெளியீடுகள்,ஈழத்து ஓவியங்கள் போன்ற பல விடயங்களை நாங்கள் அதனூடாக வெளியிட்டோம். ஆனால் பின்னர் இது தொடர்பில் பெரியளவில் ஒத்துழைப்புக்கள் கிடைக்காது போனது. தனித்து நானே செய்ய வேண்டிய ஒரு சூழல் வந்தபோது அது அப்படியே செயலிழந்து போனது. மீண்டும் இப்போது அது புதுப்பிக்கப்படவில்லை. ஆனால் அப்பால் தமிழ் பக்கத்திற்குள் நுழைவீர்களானால் பழைய இதழ்களைப் பார்க்கலாம். பார்க்கவே முடியாதபடி அது மூடப்பட்டிருந்தது. ஆனால் அதனை உயிர்ப்பித்து விடுமாறு பல நண்பர்கள் கூறினார்கள். இப்போது அதனை நாங்கள் திறந்திருக்கிறோம். எதிர்காலத்தில் அதனைச் செய்யலாம்.

இந்தவேளையில் தான் 2009ல் எமது முள்ளிவாய்க்கால் துன்பியல் நிகழ்வினால் எல்லோரும் பரிதவித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த நேரத்திலிருந்து வெளிச் சூழல்கள் அதாவது புலம்பெயர் வாழ் தமிழர்கள் மத்தியில் காணப்பட்ட அரசியல் அராஜகம் என்பதும் நாட்டாண்மை என்பதும் மேலோங்கி ஊடகங்களை மூடுவதும், அவற்றின் மீது நித்தம் சேறுவரி இறைத்ததும் இடம்பெற்றது. இந்தவேளையிலேயே நாங்கள் புதினப்பலகையை ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதில் செய்திகளை மாத்திரம் வழங்குதல், சரியான செய்திகளை வழங்குதல், எவ்விதமான சார்புநிலையும் இல்லாது, யாரையும் தூக்கிப்பிடிக்காது, யார் மீதும்; சேறுவாருதல் இல்லாமல், செய்திகளை மட்டும் வழங்குவதென்ற நோக்கம் இருந்தது. அதாவது இலங்கை சார்ந்தும் தென்னாசியா சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தியும் அதேவேளையில், எங்களைப் பற்றி உலக அரங்கில் ஏனைய பத்திரிகையாளர்கள் என்னத்தைச் சொல்கின்றனர் மற்றும் அவர்களுடைய கண்ணோட்டம் என்ன என்பதை எங்களுடைய தமிழர்களுக்குத் திருப்பிச் சொல்ல வேண்டும் என்பதை மையமாகக் கொண்டே புதினப்பலகை என்கின்ற இணையத்தை நாங்கள் தொடங்கினோம்.

பல ஆர்வமுள்ள நண்பர்கள் சேர்ந்து இதனை ஆரம்பித்தோம். தொடர்ந்தும் அது இன்று இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவாக இது ஒரு செய்தித்தளமாகப் பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் தளமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் எமது விருப்பத்திற்கு மாறான அரசியலை அதாவது எமது அரசியலைத் தங்களுடைய கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கின்ற சிலருடைய அடாவடித்தனம் தாங்கமுடியாத நிலை உணரப்பட்டது.அவர்கள் எங்களைத் தீர்மானிப்பவர்களாகவும் எமது விருப்பம் என்ன என்பதை அவர்களே சொல்கின்றவர்களாகவும் மாறிப்போன மிக மோசமான சூழலில் தான் தமிழ்நாட்டிலுள்ள நண்பர்கள் சிலருடன் இணைந்து காக்கைச் சிறகினிலே என்கின்ற இலக்கிய இதழை கொண்டுவர விரும்பினோம். நாங்கள் ஒரு பரிவர்த்தனையாக அதாவது புலம்பெயர் சமூகத்திற்கும் தமிழ்நாட்டு சமூகத்திற்கும் பரிவர்த்தனை இலக்கிய இதழாக இதனைச் செய்கிறோம். அதேவேளை அரசியல் ரீதியாக தேவையான நல்ல கருத்துக்கள்இருந்தால் அவற்றை ஆய்வுக்குரிய கருத்துக்களாக முன்வைப்பதற்கான தளம் எமக்கு எப்போதும் தேவை என்ற அடிப்படையிலேயே ‘காக்கைச் சிறகினிலே’ இதழைக் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்கள் கேட்டதற்கிணங்க அதன் நெறியாளராகவும் இருக்கிறேன்.

தொடர்ச்சியாக அரசியல், சமூகம், புலம்பெயர் வாழ்வியல் சார்ந்த பல்வேறு தளங்களில் உங்கள் அனுபவம் சார்ந்த நிகழ்வுகளையும் கருத்துக்களையும் தொடர்ச்சியாக அடுத்த பகுதியில் பதிவு செய்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். தியாகி பொன் சிவகுமாரனின் போராட்ட செயற்பாடுகள் பற்றிய உங்களது நினைவுக் குறிப்பிலிருந்து சில விடயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ki-pi-annaசிறிலங்கா மே 22, 1972ல் குடியரசாக அறிவிக்கப்பட்ட போது அதனை ஒரு கரிநாளாக அறிவித்து அன்றைய தமிழ்த் தலைமைகள் ஒரு அறவழிப் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். அந்த அறவழிப் போராட்டத்தில் மாணவனாக இருந்த நானும் கலந்து கொண்டேன். அதில் கலந்து கொண்ட வகையில் முதலில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களில் நானும் ஒருவன். அதாவது முத்துக்குமாரசாமி, மனோகரன், நான் ஆகிய மூன்று பேருமே முதலில் கைது செய்யப்பட்டோம். மாணவர்களைப் பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறும் நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வதாகக் கூறி காவற்துறையினர் எம்மைக் கைதுசெய்தனர்.

மே 18ம் திகதி எம்மை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற போது ஏற்கனவே அங்கே சிவகுமாரன் பிறிதொரு காரணத்திற்காக கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  ஆனால் அவருக்கான வழக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதால் ஒவ்வொரு தவணையும் அவர் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அனுராதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டார். இவர் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படுவதாக நாங்கள் ஒருநாள் அறிந்தோம். அப்போது நாங்கள் ஏறத்தாழ 70 பேர் மண்டபம் ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்தோம். அந்த மண்டபத்தைத் தாண்டித்தான் அவரை அழைத்துச் செல்ல வேண்டும். நாங்கள் அங்கு இருக்கிறோம் என்பதை சிவகுமாரும் அறிந்திருந்தார். அவர் கம்பிக்கு வெளியே நின்றவாறு எங்களுடன் பேசினார். அப்போது தான் நான் முதற்தடவையாக சிவகுமாரனுடன் கதைத்தேன். அதற்கு முன்னர் நான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அவர் ஒரு கதாநாயகன் எனப் பல தகவல்களை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். அவர் ஒரு வியப்பான மனிதனாக எனக்குள் நிறைந்திருந்தார். இவ்வாறான ஒருவரை நான் நேரடியாகச் சந்தித்த போது, அவர் மிகவும் மென்மையான, அமைதியான, முகத்திலே மலர்ச்சியும் சிரிப்பும் கொண்ட ஒரு இளைஞனாகத் தான் அவர் எனக்குத் தென்பட்டார்.

அன்றிலிருந்து தொடங்கிய நட்பு அவர் 1974 யூன் 05ம் திகதி மரணிக்கும் வரையில் மிகவும் நெருக்கமாகவும், தோழமையாகவும் அரசியல் நெருக்கமாகவும் இருந்தது. குறிப்பாக 1974ம் ஆண்டு தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது நாங்கள் தொண்டர்களாகச் செயற்பட்டோம். எமது தொண்டர்கள் பிரிவிற்கு சிவகுமாரன் தலைமை வகித்தார். நாங்கள் தொண்டர்களாக செயற்பட்ட போது 1974 ஜனவரி 10ம் திகதி கூட்டத்தின் இறுதிநாளன்று  துக்ககரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றது. அதாவது ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். காவற்துறையினரின் அடிதடிப் பிரயோகத்திலேயே இவர்கள் இறந்தனர். இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவரைப் பழிவாங்கி அவருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என நாங்கள் முடிவெடுத்தோம். அதன் பின்னால் அதில் முக்கிய சூத்திரதாரியாக விளங்கியவர் அன்றைய காவற்துறை ஆணையாளர் ஏ.எஸ்.பி சந்திரசேகரா. அவரைப் பழிவாங்குவதே எமது நோக்காக இருந்தது. இவரைப் பழிவாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த நிலையில் தான் சிவகுமாரன் மிக மிக உச்ச கட்டத் தேடுதல் நிலைமைக்கு உள்ளாகி, ஏறத்தாழ உரும்பிராய்க் கிராமம் முதற்தடவையாக 700 காவற்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடாத்தப்பட்டது. ஏற்கனவே நாம் இதனை அறிந்திருந்ததால் வேறொரு கிராமத்தில் தலைமறைவாக இருந்தோம்.

இவர் மீதான தேடுதல் வேட்டை மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டதால் சிவகுமாரனை நாட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்கின்ற முயற்சியில் நாம் இறங்கினோம். அந்த முயற்சிக்கு எமக்குப் பணம் தேவைப்பட்டது. அன்றைய நிலையில் நாங்கள் பலரையும் அதாவது தமிழ்த் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் போன்றோரை பண உதவி செய்யுமாறு கோரிய போதும் அவர்கள் எவரும் இதற்கு உதவ முன்வரவில்லை. இதனால் நாங்கள் நிதியைப் பறித்தெடுத்தல் என்கின்ற முயற்சியில் இறங்கினோம். அந்த முயற்சிகள் எமக்குத் தோல்வியைத் தந்தன. இதன்போது நாங்கள் காவற்துறையின் சுற்றிவளைப்பிற்கு உள்ளாகினோம். இதிலிருந்து எம்மால் தப்பிச் செல்ல முடியாததால் சிவகுமாரன் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரமரணத்தை அடைந்தார். நாங்கள் மூவர் இதிலிருந்து தப்பித்தோம். அவர்களுக்கு சிவகுமாரனை மட்டுமே தெரிந்திருந்ததால் அவர்கள் அவரைக் குறிவைத்தே தமது தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் காரணத்தாலேயே நாங்கள் சனத்தோடு சனமாக வெளியேற முடிந்தது. ஏற்கனவே சிவகுமார் தனக்குத் தேவையான சயனைட்டை சென்ற் குப்பி ஒன்றிற்குள் அடைத்து வைத்திருந்தார். அதேவேளையில் அவர் ஒரு கத்தியும் வைத்திருப்பார். அந்தக் கத்தியில் சயனைட் தடவப்பட்டு நன்கு காய்ந்திருந்தது. இந்தக் கத்தியால் ஒருவருக்கு கீறு விழுந்தாலே அவர் உடனே சாவைத் தழுவக்கூடிய நிலையிலேயே காணப்பட்டது. இந்தக் கத்தியை அவர் எப்போதும் தனது இடுப்பிலேயே வைத்திருப்பார்.

சிவகுமாரன் அவர்களுடைய மரணம் அன்றைய காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது?

சிவகுமாரனின் மரணம் அன்றைய காலகட்டத்தில் முதலாவது களப்பலி எனக் கூறலாம். 1970களுக்குப் பின்னர் எழுச்சி பெற்ற ஒரு இளம்தலைமுறையினர் மத்தியில் ஒரு இளைஞன் ஒருவன் களப்பலியாகி விட்டான் என்கின்ற செய்தியை வழங்கியது. இளைஞர்கள் மட்டுமல்ல, பொதுவாகத் தமிழ்த் தேசியம் பேசும் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சி அலையையும் அனுதாப மற்றும் உணர்வு அலையையும் ஏற்படுத்தியது. அவரது தொடர்ச்சியான துணிச்சல், சமூகத்தின் மீதான நேசமும் அவரது அர்ப்பணிக்கின்ற தியாக மனப்பான்மையையும் கொண்ட ஒரு முன்னுதாரணமாக, முதல் வித்தாக இந்த அரசியல் வரலாற்றில் கருதப்படுகிறார்.

(தொடரும் – 3வது பகுதியோடு நிறைவுறும்!)

ஒலிவடிவ நேர்காணலை எழுத்துருவாக்கித் தந்த மொழிபெயர்ப்பாளரும் புதினப்பலகையின் செய்தியாளருமான நித்யபாரதிக்கு மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *