மேலும்

மத்தல விமான நிலையம் அருகே சிறிலங்கா படையினரின் சிறப்பு நடவடிக்கை

special-operation (1)மத்தல அனைத்துலக விமான நிலையப் பகுதிகளில் நடமாடும் மான்களையும், காட்டெருமைகளையும் விரட்டியடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்தினரை ஈடுபடுத்தியுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் மத்தல அனைத்துலக விமான நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த விமான நிலையத்துக்கு தற்போது நாளொன்றுக்கு ஒரே ஒரு விமான சேவை மட்டுமே நடத்தப்படுகிறது.

வனவிலங்குகள் அதிகளவில் நடமாடும் காட்டுப் பகுதியில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் விமான நிலையத்துக்குள் காட்டு யானைகள் உள்நுழைவதை தடுக்க, மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.

special-operation (1)

special-operation (2)

அதேவேளை மத்தல விமான நிலையத்தைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் உள்ள பெரும் எண்ணிக்கையான மான்களும், காட்டெருமைகளும் வசிக்கின்றன.

இந்த மான்களும், காட்டெருமைகளும், விமான நிலைய மின்சார வேலிகளில் சிக்கி வந்த நிலையில், அந்தப் பகுதியில் இருந்து அவற்றை விரட்டும் சிறப்பு நடவடிக்கை ஒன்று கடந்த புதன்கிழமை முழுநாளும் மேற்கொள்ளப்பட்டது.

350 சிறிலங்கா இராணுவத்தினரும்,காவல்துறையினரும். தொண்டர்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வெளிப்படையாக நடமாடித் திரிந்த சுமார் 150 மான்களையும், 50 காட்டெருமைகளையும் இவர்கள் விரட்டி காட்டுக்கு அனுப்பினர். இதற்காக, பட்டாசுகளையும் இவர்கள் பயன்படுத்தினர்.

இரண்டு வனவிலங்கு சரணாலயங்களுக்கு நடுவிலும்,  பறவைகள் இடம்பெயரும் பாதையிலும் இந்த விமான நிலையம் அமைந்திருப்பதாக மத்தல விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விலங்குகளை இந்தப் பகுதியில் இருந்து விரட்ட பட்டாசுமூகளை நாம் பயன்படுத்தினோம். ஆனால் இது மிகவும் வெற்றிகரமான நடவடிக்கையாக அமையவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மிக விரைவில் பாரிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்தல விமான நிலையத்தில் மான்கள் மற்றும் மாடுகளால் எந்த விபத்தும் ஏற்படவில்லை, எனினும், முதலாவது விமானம் தரையிறங்கும் போது பறவை ஒன்று மோதியிருந்தது.

அதன் பின்னர், இன்னொரு விமானத்தின் இயந்திரத்துக்குள் மயில் ஒன்று நுழைந்து சேதமடைந்ததால், அது அவசரமாக தரையிறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *