மேலும்

இராணுவத்தளம் அமைக்க சீனாவுக்கு இடமளியோம் – சிறிலங்கா அரசாங்கம்

Chinese_flagஎந்தவொரு சூழ்நிலையிலும், சீனாவின் இராணுவத் தளங்களை அமைப்பதற்கு சிறிலங்காவில் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிறிலங்காவில், சீனா இராணுவத் தளம் ஒன்றை அமைப்பதற்கு எதிர்பார்த்திருப்பது தொடர்பாக, இந்தியா கவலை கொண்டுள்ள நிலையிலேயே, சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் இந்த உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏசியா ரைம்ஸ் ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா,“ நிச்சயமான அவ்வாறு எதுவும் இல்லை. சிறிலங்காவில் அதுபோன்ற தளங்கள் எதையும் அமைக்க நாம் அனுமதிக்கமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் நிதியில் கொழும்புத் துறைமுக நகரக் கட்டுமானத் திட்டத்தை மீள ஆரம்பிக்க சிறிலங்கா அனுமதி அளித்துள்ள நிலையிலேயே, அவரது இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

அதேவேளை, சிறிலங்காவில் இராணுவத் தளத்தை அமைப்பது தொடர்பான எந்த முன்மொழிவையும் தமது அரசாங்கத்திடம் சீனா சமர்ப்பிக்கவில்லை என்று, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், சிறிலங்கா அரசாங்கத்தின் பேச்சாளராக இருந்த கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகளுடன் போர் செய்து கொண்டிருந்த நெருக்கடியான அந்த நேரத்தில் அவர்கள் எமக்கு உதவிகளை வழங்கினார்கள்.

சிறிலங்காவில் சீனா இராணுவத் தளத்தை அமைக்கவுள்ளதான வதந்தியை இந்தியா பரப்பியிருக்கும் சாத்தியங்கள் உள்ளன. ஏனென்றால், சீனாவுடன் நெருக்கமான உறவை சிறிலங்கா வைத்திருப்பதை இந்தியா விரும்பவில்லை.

சீனா நாளுக்கு நாள் பலமடைந்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கு, இந்தியாவுக்கு அமெரிக்கா  மறைமுகமாக ஆதரவளித்து வருகிறது” என்றும் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *