சிறிலங்கா படையினரின் ஆளணியை குறைக்கவில்லை- ருவான் விஜேவர்த்தன
சிறிலங்கா இராணுவத்தினரின் ஆளணியைக் குறைக்க எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் உள்ள கெமுனுவோச் படைப்பிரிவின் முகாமில், நேற்று நடந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்கான விருசர சிறப்புரிமை அட்டை வழங்கும் நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
”இராணுவத்தினரை சிறையில் அடைத்து விட்டு புலிகளை விடுவிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். நாம் அவ்வாறு செய்யவில்லை. அதற்கான தேவையுமில்லை.
கடந்த ஆட்சிகாலத்தில் தான் இராணுவத்தினர் கூலிப்படைகளாகவும் அரசியல்வாதிகளின் தேர்தல் பரப்புரைக்கான சேவையாளர்களாகவும் வீட்டு வேலைக்காரர்களாகவும் கடமை புரிந்தனர்.
அதனை இன்றைய அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்து முப்படைகளையும் மரியாதையுடன் நடத்துவதுடன் அவர்களின் நலனில் கூடுதல் அக்கறை கொண்டுள்ளது.
சிறிலங்காவின் சட்டம் அனைவருக்கும் சமமாகும். தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவார்கள். அதன்படி தவறு செய்த இராணுவத்தினர் நீதிமன்ற சட்டத்திற்குட்பட்டுள்ளனர்.
நீதிமன்ற, காவல்துறை நடவடிக்கைகளில் நாம் தலையிடுவதில்லை.
அனைத்துலக ரீதியில் சிறிலங்கா படையினருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவத்தினரை பாதுகாக்கவே கூட்டு அரசாங்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதனை தெரியாதவர்கள் தான் எம்மை குறை கூறுகின்றனர்.
வெளிநாட்டு நீதிபதிகள் எமது சட்டத்தில் தலையிட முடியாது. அவர்கள் மேற்பார்வையாளர்களாக கடமைபுரிய அனுமதிக்கலாம். அது கூட இதுவரை இறுதி தீர்மானத்திற்கு உட்படவில்லை.
இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு நாம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தேசிய பாதுகாப்பிற்கும் எவ்விதமான இடையூறும் ஏற்படாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
