மேலும்

பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது?- கண்டுபிடிக்கச் சொல்கிறார் அமைச்சர் மகிந்த சமரசிங்க

Mahinda-Samarasingheவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய வேண்டும் என சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியான அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க,

“இத்தனை காலமாக வெளிவராத உண்மைகள் இன்று உரிய நபரின் மூலமாக வெளிவந்திருப்பது முக்கியமான திருப்புமுனையாக உள்ளது.

இறுதிப்போரை வழிநடத்திய அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா மூலமாக இவ்வாறு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றதையிட்டு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது ஆரோக்கியமானது. ஆனால் போரை எவ்வாறு முடித்தனர் என்பதில் தான் அனைத்துலக தரப்பில் இருந்து கேள்வி எழுந்துள்ளது.

போரின் இறுதித் தருணங்களில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, இதுவரை மகிந்த ராஜபக்ச தரப்பு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், போரை முன்னெடுத்து சென்ற தளபதியே இறுதி தருணத்தில் குற்றங்கள் இடம்பெற்றன எனவும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக அனைத்துலக விசாரணை வேண்டும் எனவும் கூறுவதை சாதாரணமாகக் கருதக்கூடாது.

அனைத்துலக தரப்பின் பரிந்துரைகள் தொடர்பாக நாம் கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

இறுதிப் போரில் மோசமான தவறுகள் நடைபெற்றிருந்தால் உண்மையான குற்றவாளிகள் யார் என இனங்காணப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சரத் பொன்சேகா  முன்வைத்துள்ள கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

இறுதிப் போரில் சிறிலங்கா இராணுவம் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தால் அவை தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

இறுதிக் கட்டத்தில் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரிலோ அல்லது புகழையும் பெயரையும் தக்கவைக்கும் வகையிலோ, ஒருசிலர் மோசமான வகையில் செயற்பட்டிருந்தால், சரத் பொன்சேகா கூறியதைபோல் மோசமான வகையில் இவர்கள் மக்களை கொன்று குவித்திருந்தால், அந்த குற்றங்கள் தொடர்பாக தனிப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஒருசிலர் செய்ததாக கூறப்படும் தவறுகளுக்காக ஒட்டுமொத்த இராணுவத்தையும் குற்றவாளிகளாக நிறுத்த முடியாது.

இராணுவத்தை தலைமை தாங்கும் எவரேனும் தமது தனிப்பட்ட அதிகாரத்தில் மக்களை அழித்திருந்தால் அதை கண்டறிந்து அவர்களை தண்டிக்க வேண்டியது எமது கடமையாகும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதி நேரத்தில் உயிருடன் இருந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற உண்மைகளில் கூட இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. இந்த உண்மைகள் அனைத்தையும் கண்டறிய அரசாங்கம் முன்வரும்.

சமாதானம், நாட்டின் அமைதியான சூழல் மீண்டும் பாதிக்கப்படக் கூடாது. இப்போது வெளிவரும் உண்மைகளினால் மீண்டும் குழப்பகரமான சூழல் ஒன்று உருவாகிவிடக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *