மேலும்

உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு தமிழ் அரசியல் கைதிகளிடம் கூட்டமைப்பு கோரிக்கை

tnaமகசின் சிறைச்சாலையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக  தமது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

காணாமற்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கொண்டு வந்த  ஒத்திவைப்புவேளை பிரேரணை, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கப்படவுள்ளது.

அதன்பின்னர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் முடிவு ஒன்று எட்டப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள்,  உடனடியாக தனது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்றுக் காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில், தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதன்போது, முதற்கட்டமாக 85 தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வுப் பொறிமுறையூடாக விடுதலையளிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் புனர்ழ்வுக்கு கைதிகளை அனுப்புவதற்கு பலவந்தமாக கையொப்பங்கள் பெறப்பட்டதாக வெளியிடப்பட்ட கருத்தால்  அதனை  முழுமையாக முன்னெடுக்க முடியாது போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.

புனர்வாழ்வுப் பொறிமுறைக்கு கைதிகளின் இணக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும், கூட்டமைப்பின் இரண்டு பிரதிநிதிகள் இந்த விடயத்தை கைதிகளிடம் தெரியப்படுத்தி இணக்கத்தை கடிதம் மூலமாக பெற்றுக் கொள்வதென்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதேவேளை நாடாளுமன்றத்தில் நாளை காணாமற்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்திவைப்புவேளை பிரேரணை விவாதிக்கப்பட்டவுள்ளது.

அதன்பின்னர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் முடிவொன்று எட்டப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அவ்வாறான நிலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகள் அதனை அடிப்படையாகக் கொண்டு தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயவாக கேட்டுக் கொள்வதாக அறிவிப்பதென்று நேற்றைய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *