மேலும்

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு மாவை, சித்தார்த்தன் வரவில்லை

mavai-siththarthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றிருந்த நிலையில், இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் பங்கேற்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள விரிசல் நிலையைப் போக்கவும், அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடவும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரபூர்வ செயலகத்தில் நேற்றுக்காலை 10 மணி தொடக்கம், 12 மணிவரை இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின்  சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மட்டும் பங்கேற்றார்.

ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன்,  சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு கோவிந்தன் கருணாகரம் (ஜனா), கே.சிறிகாந்தா, புளொட் சார்பில் க.சிவநேசன்(பவன்), ஆர்.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்துக்கு தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் வரவில்லை.

நேற்றைய கூட்டத்தில் இவர்கள் பங்கேற்காததால், பல்வேறு விடயங்கள் குறித்து தீர்மானம் எடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில், முடிவு காணப்படாத விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்த, வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூட்டத்தைக் கூட்டுவதென் நேற்றைய கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றிணைந்து செயற்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *