மேலும்

வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கத் தயாராகிறதாம் சிறிலங்கா இராணுவம்

maj.gen.ratnayakeசிறையில் இருப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், கடந்த ஒரு ஆண்டாக புனர்வாழ்வு பெற்று வந்த 14 முன்னாள் போராளிகள் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ 2009 ஆம் ஆண்டிலிருந்து  2015 வரை  12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துள்ளோம். இந்த வேலைத்திட்டத்திற்கு தனியான நிறுவனங்களோ, திணைக்களங்களோ முன்வராததால் சிறிலங்கா இராணுவத்திடம் இந்தப்பணி கையளிக்கப்பட்டது.

சிறிலங்கா இராணுவம் இதனைச் சரியாக செய்துள்ளது. இப்போது 300 பேர் மாத்திரமே புனர்வாழ்வு பெற்று வருகின்றனர். அவர்களும் வெகு விரைவில் சமூகத்துடன் இணைக்கப்படுவார்கள்.

maj.gen.ratnayake

அத்துடன் சிறையிலிருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க தயாராகி வருகிறோம்.

தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் செயற்படவில்லை. பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகவே செயற்பட்டது.

அதேபோன்று ஜே.வி.பிக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் செயற்பட்டதே தவிர சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படவில்லை.

எனவே, சிறிலங்கா இராணுவம் மீது தமிழ்மக்கள் கோபமோ, வைராக்கியமோ கொள்ளக்கூடாது. எங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையை மாத்திரமே நாங்கள் நிறைவேற்றினோம்.

ஜே.வி.பியினருடன் போர் செய்து அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டார்கள் . ஆனால் அவர்களை  சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஜே.வி.பி. அமைப்பின் கிளர்ச்சி முடிந்த பின்னர் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டார்கள். இன்று எத்தனை பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர்? சமூகம் அவர்களை ஏற்றுக்கொண்டதா?

முப்பதாண்டு போர் எந்தவிதமான நன்மையையும் பெற்றுத்தரவில்லை .  பொருளாதாரத்திலும் கலாசாரத்திலும்  நாடு 30 ஆண்டுகள் பின்தங்கிவிட்டது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *