மேலும்

மைத்திரி வெளியேறிய போதே சுதந்திரக் கட்சி உடைந்து விட்டது – மகிந்த

mahinda-vajraசிறிலங்கா சுதந்திரக் கட்சி 2014ஆம் ஆண்டு நொவம்பர் 21ஆம் நாளே பிளவுபட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

கண்டியில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“பொதுச்செயலராக இருந்த அதிபர் மைத்திரிபால சிறிசேன, 2014 நொவம்பர் 21ஆம் நாள், கட்சியின் ஒரு குழுவினருடன், வெளியேறிச் சென்ற போதே சிறிலங்கா சுதந்திரக் கட்சி உடைந்து விட்டது.

நானா இந்தக் கட்சியை உடைத்தேன்? இந்தக் கட்சியை ஒரு யானையிடம் கொடுத்தது யார்?

பாசிக்குடா கடற்கரையில் ஒரு முன்னாள் அதிபரின் மகன் ஒரு சம்பவத்துடன் தொடர்புபட்ட போது, நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னாள் அதிபர் ஒருவரின் மகள், போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பண்டாரநாயக்கவின் கொள்கைகளை நான் கட்சியில் பாதுகாத்து வந்தேன்.

அதிபர் மைத்திரிபால சிறிசேன எனது அமைச்சரவையிலும், கட்சியின் பொதுச்செயலராகவும் 11 ஆண்டுகள் இருந்தார்.

எதற்காக சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையான கட்சியின் பொதுச்செயலர் பதவிக்கு ஒருவரை மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்க அனுமதிப்பதில்லை என்று எனக்கு இப்போது புரிந்துள்ளது.

எனது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்களுக்கு அமையவே, எனது மகன் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி சட்டத்தின் கீழேயே யோசிதவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் பணம், நாட்டில் முதலீடு செய்யப்படுவதை தடை செய்யும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் 7 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள், போதைப்பொருட்கள், 16 வயதுக்கு குறைந்தவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதித்த பணம் உள்ளிட்ட 7 முறைகளில் சம்பாதித்த பணம் தொடர்பில் அந்தச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

யோசித உள்ளிட்ட ஐவருக்கும் எதிராக இந்தச் சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்தவரது மகனையே அந்த சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இது தான், நல்லாட்சியோ?’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *