மேலும்

பிராந்திய அரசியல் போட்டிக்குள் சீன- இந்திய போர் விமானங்கள்

Jf-17 Thunder Block 2பூகோள அரசியல் போட்டிகள் நிலவும் இக்கால கட்டத்தில் கடந்த வியாழனன்று ஆரம்பமாகியுள்ள 2016ம் ஆண்டிற்கான பஹ்ரெய்ன் விமானக் காட்சி நிகழ்வில் பங்குபற்றும் ஆசியப் போர் விமானங்களின் பல பில்லியன் டொலர் இராணுவ ஒப்பந்தங்கள்  அனைத்துலக செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கும்.

இந்தியத் தயாரிப்பான Tejas (தேஜஸ்) போர் விமானமானது வெளிநாடொன்றின் விமானக் கண்காட்சியில் ஈடுபடுவது இதுவே முதற்தடவையாகும். குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து தயாரிக்கும் JF-17 Thunder   என்கின்ற விமானத்திற்குப் பதிலாக, இந்தியா தயாரிக்கும் தேஜஸ் போர் விமானம் பஹ்ரெய்ன் விமானக் கண்காட்சி நிகழ்வில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவின் புதிய தயாரிப்பு விமானமான தேஜசின் வருகையானது இந்திய இராஜதந்திர மூலோபாய நகர்வாகவே தற்போது நோக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் இப்புதிய தயாரிப்பானது சீன-பாகிஸ்தானிய போர் விமானமான JF-17 ஐ சிறிலங்கா கொள்வனவு செய்வதைத் தடுப்பதற்கான இந்தியாவின் இராஜதந்திர அழுத்தமாக உற்றுநோக்கப்பட முடியும்.

JF-17அல்லது சீனாவின் தனித் தயாரிப்பான FC-1 Xiaolong விமானங்களை இதுவரை மியான்மார் மற்றும் நைஜீரியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே கொள்வனவு செய்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டின் பின்னர் ஜெட் விமானத்தைக் கொள்வனவு செய்வதற்கான ஆலோசனையில் மலேசியா ஈடுபட்டுள்ளதாக கடந்த மாதம் ஊடகங்களில் வெளியான செய்திகளை மலேசியா மறுத்ததன் பின்னர், சிறிலங்கா  பிரகாசமான நம்பிக்கையாக இருந்தது.

jf-17- tejas

தனது தயாரிப்பு விமானத்தை இந்தியா மற்றைய நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது.  தான் வாங்கிய ஏழு துருவ் உலங்குவானூர்திகளில் நான்கு விபத்துக்குள்ளானதாகவும் ஏனையவை  தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒக்ரோபரில், ஈக்குவேடர் அறிவித்தது. இதனால் இராணுவ உலங்குவானூர்திக் கொள்வனவை அந்த நாடு இரத்துச் செய்தது.

‘இந்தியா தனது தயாரிப்பு தேஜஸ் விமானத்தின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதில் ஆர்வங் கொண்டுள்ளது. ஜே.ப்-17 ரக விமானங்களுக்குப் பதிலாக இவை தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இதன் முழுமையான தயாரிப்புப் பணிகள் இன்னமும் நிறைவுறவில்லை. இந்நிலையில் பஹ்ரெய்ன் விமானக் கண்காட்சி தேஜஸ் விமானத்தின் பறப்பை உறுதிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை இந்தியாவிற்கு வழங்கும்’ என புதுடில்லியிலுள்ள கொள்கைக் கற்கைகளுக்கான சமூகத்தின் இயக்குனரும் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதியுமான சி.உதய் பாஸ்கர் தெரிவித்தார்.

தேஜஸ் மற்றும் ஜே.எப்-17 ஆகிய இரண்டு விமானங்களும் இலகுரக, குறைந்த பராமரிப்பைக் கொண்ட, ரஸ்யா மற்றும் மேற்குலக ஜெட்களுக்குப் பதிலாக கொள்வனவு செய்யக்கூடிய மலிவு விலையில் தயாரிக்கப்பட்டுள்ளன. தேஜஸ் தனது முதலாவது பரீட்சார்த்தப் பறப்பை ஜனவரி 2001ல் மேற்கொண்டது. இதேவேளையில் ஜே.ப்-17 தனது முதலாவது பரீட்சார்த்தப் பறப்பை 2003ல் மேற்கொண்டது.

ஆனால் இவற்றின் பறப்புப் பாதைகளில் பெரிதளவு வேறுபாடுகள் இல்லை. ஜே.ப் – 17 தற்போது சேவையில் ஈடுபடுவதற்கும் கொள்வனவு செய்யப்படக் கூடிய தயார்நிலையில் உள்ளது. ஆனால் தேஜசின் தயாரிப்புப் பணியில் இன்னமும் தாமதம் ஏற்படுகின்றது. தேஜஸ் கடந்த மூன்று பத்தாண்டுகளுக்கும் மேலாக தயாரிக்கப்படுகின்ற போதிலும் இன்னமும் பயன்பாட்டிற்கு விடப்படவில்லை.

தேஜசை அனைத்துலக சந்தையில் நிறுத்துவதற்கான முயற்சிகள் நரேந்திர மோடி அரசாங்கத்தால் மிக வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தியாவின் தற்போதைய அரசாங்கமானது தேஜசை உலக சந்தையில் நிலைநிறுத்துவதன் மூலம் ‘இந்தியத் தயாரிப்பு’ மட்டும் என்கின்ற தனது பொருளாதார கோட்பாட்டை மீண்டும் பலப்படுத்த முயல்கிறது. அத்துடன் இந்தியா தனது நாட்டின் பாதுகாப்புப் பொருட்களின் இறக்குமதிச் செலவைக் குறைக்க முயல்கிறது.

‘சிறிலங்காவின் அனுபவமானது இந்தியா தனது சொந்தத் தயாரிப்பு விமானத்தை மிக விரைவாகப் பாவனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தியுள்ளது’ என்கிறார் பாஸ்கர்.

பாகிஸ்தானியப் பிரதமர் நவாஸ் செரீப் இம்மாதம் சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்ட போது ஜே.எப் -17 ரக 12 விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை கொழும்பு மேற்கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இது தொடர்பான எவ்வித ஒப்பந்தங்களும் பாகிஸ்தானியப் பிரதமரின் சிறிலங்காவுக்கான பயணத்தின் போது மேற்கொள்ளப்படவில்லை.

செரீப் தனது நாட்டிற்குத் திரும்பிய பின்னர், ஜே.எப் -17 கொள்வனவு தொடர்பாக எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார். செரீப் சிறிலங்காவிற்குப் பயணமாவதற்கு முன்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையாளர், சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்து ஜே.எப் -17 ரக விமானங்களை பாகிஸ்தானிடமிருந்து கொள்வனவு செய்வது தொடர்பான இந்தியாவின் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் என புதுடெல்லியில் உள்ள அரசாங்க வட்டாரங்கள் சௌத் சைனா மோர்னிங் போஸ்டிடம் தெரிவித்தன.

‘சீனாவை விட நாங்கள் பாகிஸ்தான் தொடர்பாகவே அதிகம் கவலை கொண்டோம். பாகிஸ்தானிடமிருந்து சிறிலங்கா போர் விமானங்களைக் கொள்வனவு செய்தால் அதன் பின்னர் விமானிகளுக்கான பயிற்சி வழங்கல் மற்றும் விமானப் பராமரிப்பு போன்றவற்றிலும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு உதவுவதற்கு பாகிஸ்தானுக்கு வாய்ப்பு ஏற்படும் என்பதே எமது கவலைக்கான காரணமாகும்’ என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் சீனா தொடர்பான அச்சமும் காணப்படுகிறது. ‘போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி சிறிலங்காவிடம் இல்லை. பாகிஸ்தானிடமும் இதற்கான நிதி இல்லை. ஆகவே சிறிலங்கா போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு யார் கடன் வழங்குவார்கள்? எங்களால் இதனை செய்ய முடியாது’ என அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இரண்டு தடவைகள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கிய போது இந்தியா அதிருப்தியடைந்தது. இந்தச் சம்பவமே இந்தியாவிற்கும் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படக் காரணமானது.

சீனாவிற்கு ஆதரவாகச் செயற்பட்ட மகிந்த ராஜபக்ச புதுடில்லியுடனான உறவில் விரிசலை உண்டுபண்ணினார். ஜே.எப்- 17 விமானக் கொள்வனவு உடன்பாடும் முதலில் ராஜபக்ச அரசாங்கத்தாலேயே ஆரம்பிக்கப்பட்டது.

சிறிலங்காவின் ஜே.எப் – 17 போர் விமானக் கொள்வனவில் பல்வேறு விரிவான பூகோள அரசியல் காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாக இந்திய இராணுவப் புலனாய்வின் முன்னாள் அதிகாரி கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்தார்.

‘இந்திய மாக்கடல் பிராந்தியம் போன்ற தனது கேந்திர நலன் சார்ந்த விடயங்களில் சீனா செல்வாக்குச் செலுத்துவதை அமெரிக்கா தடுத்து வருகிறது என்பதற்கு சிறிலங்காவின் போர் விமானக் கொள்வனவில் ஏற்பட்டுள்ள இழுபறி நல்லதொரு எடுத்துக்காட்டாகும். இதேபோன்று கடந்த ஆண்டு சீன ஏவுகணைகளை துருக்கி கொள்வனவு செய்யக்கூடாது என்பதற்கு அமெரிக்கா அழுத்தம் இட்டது’ என சீனக் கற்கைக்கான சென்னை மையத்தில் தற்போது பணியாற்றும் ஹரிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இந்தியக் கடல் விமானக்கருவிகள் அமெரிக்க வான்கலத்துடன் தொடர்புபடுவது தற்போது அதிகரித்துள்ளது. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பானது தற்போது அதிகரித்து வருகிறது.

ஆகவே இந்திய மாக்கடல் பிராந்தியத்திலிருந்து சீன-பாகிஸ்தான் செல்வாக்குச் செலுத்துவதைத் தடுப்பதே அமெரிக்காவினதும் இந்தியாவினதும் பொதுவான நலனாகும்’ என ஹரிகரன் சுட்டிக்காட்டினார்.

வழிமூலம் – South China Morning Post
ஆங்கிலத்தில் – Debasish Roy Chowdhury
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *