மேலும்

அரசியலமைப்பு திருத்த யோசனைகளை சமர்ப்பிக்க வடக்கு மாகாணசபையும் குழு அமைப்பு

cvkஅரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக வடக்கு மாகாணசபையின் சார்பில் யோசனையை முன்வைப்பதற்கு மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இந்தக் குழு பற்றிய விபரங்களை அறிவித்துள்ளார்.

கைதடியில் நேற்று நடந்த வடக்கு மாகாண சபையின் 44 ஆவது அமர்வின் போது,  இந்தக் குழுவை நியமிப்பது தொடர்பான பிரேரணை ஒன்று வடக்கு மாகாணசபை அவைத்தலைவரால் கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்தப் பிரேரணையில், “புதிய அரசியலமைப்பு உருவவாக்கத்தில் வடக்கு மாகாண சபைக்கு முக்கிய பொறுப்பும், கடமையும், உரிமையும் உள்ளது.

தமிழ்த் தேசிய இனம் சார்பில் முன்வைக்க வேண்டிய முன்மொழிவுகளை வரைந்து வடக்கு மாகாணசபையின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கவென 19 மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்படுகிறது.

குழுவின் தலைவராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இணைத்தலைவராக வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

குறித்த குழுவின் உறுப்பினர்களாக வடக்கு மாகாணசபை அமைச்சர்களான த.குருகுலராஜா, பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம், பொ.ஐங்கரநேசன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், அ.சூ.பிறிமூஸ் சிராய்வா, ம.அன்ரனி ஜெயநாதன், ஜி.ரி.லிங்கநாதன், க.சிவாஜிலிங்கம், ப.அரியரட்ணம், எம்.தியாகராசா, அ.பரஞ்சோதி, அயுப் அஸ்மின், வை.தவநாதன், அனந்தி சசிதரன், இ.ஆனோல்ட், க.சர்வேஸ்வரன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவுக்கான ஆலோசனைகளை அக்கறையுள்ள தனிநபர்கள் மற்றும் சமூக நிறுவனங்கள், அமைப்புக்கள் என்பன எழுத்துமூலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் நாளுக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும்.

தேவைப்படுமிடத்து ஆலோசனைகளை முன்வைக்க விரும்புபவர்களை நேரடியாக அழைத்து கருத்தறிந்து இந்தக் குழு தமது அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் அல்லது அதற்கு முன்பாக வடக்கு மாகாண சபைக்கு சமர்ப்பிக்கமுடியும்.

இந்த யோசனை அறிக்கை சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் செயற்பாட்டுக் குழு மூலமாக அரசியலமைப்புச் சமைக்கு சமர்ப்பிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சிச் தலைவருமான இரா.சம்பந்தனிடம் சமர்ப்பிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவைத் தலைவரால் கொண்டு வரப்பட்ட பிரேரணை வடக்கு மாகாண சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *