மேலும்

ஒரு நாள் நிகழ்வுக்காக 11 மில்லியன் ரூபாவை கரைத்த சிறிலங்கா அதிபர்

தைப்பொங்கலுக்கு அடுத்த நாள், யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட ஒரு நிகழ்விற்காக, 11,079,075.50 (11 மில்லியன்) ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைக்கான விண்ணப்பத்தின் மூலம்  ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு யாழ்.மாவட்ட செயலகம் அளித்துள்ள பதிலிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய போதைப்பொருள் எதிர்ப்புத் திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பு ஆதரவுடன், இந்த நிகழ்ச்சிக்கான நிதிப் பொறுப்பை பொதுப் பாதுகாப்பு அமைச்சு ஏற்றுக்கொண்டது.

செலவு விவரங்களின்படி, மேடை மற்றும் இட ஏற்பாடுகளுக்காக 5.23 மில்லியன் ரூபாவும், சிற்றுண்டிக்காக சுமார் 3.11 மில்லியன் ரூபாவும்,  பொதுமக்களை நிகழ்வுக்கு அழைத்துச் சென்று வருவதற்காக சிறிலங்கா போக்குவரத்து சபைக்கு 2.34 மில்லியன் ரூபாவும்,  நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பதாகைகளுக்காக 51,700, ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

வரவேற்பு செலவுகள்  23,375 ரூபா,  குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளுக்கு 36,000 ரூபாஈ,  முதற்கட்ட பணிகள் மற்றும் புதுப்பித்தல் செலவுகள் சுமார் 118,000 ரூபாவும் இதர செலவுகளாக 154,000 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கடந்த மாதம் தைப்பொங்கல் கொண்டாட்டங்களுக்காக வடக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த போது, மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் வேலணையில் நடந்த பொங்கல் நிகழ்விலும், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்திலும் கலந்து கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *