ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது
சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை பேலியகொடவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பாகவே,மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியதற்காகவும், உதவி செய்ததற்காகவும் அவர் கைது செய்யப்பட்டார் என்று விசாரணை அதிகாரி ஒருவர் ஏஎவ்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே பின்னர், மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளராகவும் பணியாற்றினார்.
அதன் பின்னர், அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
