மேலும்

பாரீசு-2 நகரசபையில் நடந்த “தமிழர் திருவிழா – பொங்கல் 2016 – தமிழர் திருநாள்” நிகழ்வரங்கம்

pongal-paris (1)பிரான்சில் சிலம்புச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த  பத்தாவது தமிழர் திருநாள் நிகழ்வு சென்ற 17.01.2016 அன்று பாரீசு -2 நகரசபையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக  மதிப்புக்குரிய ஜோயல் றோல் (பிரான்சுக்கான மொரிசியஸ் தூதுவர் – அம்பசாடர்) – திரு மானிஸ் பிரபாத் (பிரான்சுக்கான இந்திய தூதரக துணை உயர் அதிகாரி) – திருமதி போலின் பெறாறி  (பிரான்சுக்கான செசல் தூதரக துணைத் தூதுவர்) – திரு ஒலிவியே ஸ்ரேன் ( முன்னாள் அமைச்சர் – பிரான்சு) – திரு ஜாக் பூத்தோ (பரிஸ் 2 நகரசபை மேயர்) – திரு ஜெறோம் கிளைஸ்சு (பரிஸ் பெருநகரசபை பிரதிநிதி) – திரு ரவிசங்கர்  (இல் டு சென் டெனி நகரசபைப் பிரிதிநிதி) – திரு யூல் காப்றோ பிளாசிட் (பரிஸ் பெருநகரசபை தொழில்நுட்பத்துறைப் பிரதிநிதி) ஆகியோர் பங்கெடுத்து உலகக் கலைநகராம் பாரீசு மையத்தில் ‘தமிழர்களது பண்பாட்டை’ பெருமிதத்துடன் சிறப்பித்தனர்.

‘புலம்பெயர் தமிழர் திருநாள் – 2016’ (வள்ளுவராண்டு 2047) பிரான்சில் பத்தாவது நிகழ்வரங்காகியது. இது முதற் தடவையாக பாரீசு நகரின் மையத்தில் அமைந்த பாரீசு – 2 நகரசபையில் நடைபெற்று, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக தடமிட்டது.

தமிழர்களது புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் தமிழர் பண்பாட்டு நிகழ்வு பாரீசு மைய நகரசபையில் நடப்பதானது பாரீசு நகரின் பன்மைத்துவ அடையாள அங்கீகாரமாகவே கொள்ளல் பொருத்தமாகும். இதனைச் சாதகமாக்கிய தன்னார்வத் தகையாளராக நகரசபை உறுப்பினர் ரவிசங்கர் அவர்களது அளப்பெரிய செயலை தமிழ்ப் பேசும் உலகு பதிவு செய்கிறது.

தொன்மையான மரபுத் தமிழர் பண்பாட்டு அடையாள நிகழ்வை அரங்காற்றுகை செய்ய ஒத்தாசை புரிந்த பெருந்தன்மையுடைய பிரெஞ்சு நிர்வாகத்தினருக்கு நன்றியுடன் கைகுலுக்குகிறோம்.

pongal-paris (1)pongal-paris (2)pongal-paris (3)pongal-paris (4)

pongal-paris (5)pongal-paris (6)

தமிழால் ஒருத்துவமாகி சாதி மத பிரதேச தேசம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணையும் முயற்சிக்கும் தொன்மையும் நீட்சியுமான தமிழ் மொழிசார் பண்பாட்டிற்கும் உலக உயர் நாகரீகக் கலைநகராம் பாரீசு கொடுத்த அங்கீகாரமாகவே இதைக் கொள்ள முடிகிறது.

புலம்பெயர் வாழ்வின் நீட்சியில், இது முக்கிய ‘மைல் கல்’ நிகழ்வாகும். இதனைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் இருகரம் கூப்பி நன்றி தெரிவிக்கிறோம்.

0000

ஆய்வரங்கம், பொதுத்திடல், அரங்காற்று என மூன்று தளங்களில் 2016 சனவரி 16 – 17ம் திகதிகளில் தமிழ் விழா இடம்பெற்றது. பிரான்சு மற்றும் வெளிநாட்டு அரசியல் அதிகார பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கலாநிதி பார்வதி கந்தசாமி (தமிழ்ப் பேராசிரியை – மொழியியல் அறிஞர்- கனடா) மற்றும் உலகத் தமிழ் அறிவிப்பு மேதை பி. எச். அப்துல் ஹமீத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கெடுத்திருந்தனர்.

இவர்களுடன் 2007இல் நடைபெற்ற முதல் தமிழர் திருநாள் நிகழ்வில் அதிதியாகக் கலந்து சிறப்பித்த தமிழ்ச் சொற்பொழிவாளனும் சிறந்த பட்டிமன்ற நடுவருமாகிய கோடையிடி குமரன் ஆசானும் பிரான்சு தமிழர் சமூகப் பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்து சிறப்பித்திருந்தனர்.

0000

pongal-paris (7)pongal-paris (8)

pongal-paris (9)pongal-paris (10)pongal-paris (11)pongal-paris (12)

கடந்த பத்தாண்டு பொது நிகழ்வரங்கத் தொடரோட்டத்தை மீட்டுப் பார்க்கையில், தைப்பொங்கல் – தமிழர் திருநாளாக – புலம்பெயர் திருநாளாக எமக்கான பொது அடையாள பண்பாட்டு நிகழ்வாக ஐரோப்பாவில் அறிமுகமாகியிருக்கிறது.

பானை வைத்துப் பொங்கும் நிகழ்வரங்கை எமக்கான பொதுப் பண்பாட்டுக் குறியீடாக, சாதி, மத, பிரதேச, தேசம் கடந்த காட்சி நிகழ்வரங்கமாக ஐரோப்பாவில் அறிமுகமாகியிருக்கிறது.

எமக்கான தொன்மையும் நீட்சியுமான தனித்துவ ஆடல் அழகியல் கலைகளும் – வீரக் கலைகளும் – இன்னிய அணியும் அறிமுகமாகி பரவலாக வழிகண்டன. எமது பெரும் முதுச வாத்தியக் கருவியான ‘பறை இசையரங்கம்’ பாரீசில் அரங்கம் கண்டு தொடர்கிறது.

வேற்றுமையில் ஒருத்துவம் காணும் ஐக்கிய பண்பாட்டு நிகழ்வரங்கமாக பொங்கல் நிகழ்வரங்கம் உதாரணமாகியுள்ளது.

தமிழால் ஒருத்துவமாகும் இத்தகைய நிகழ்வில் நமது சந்ததிச் சிறார்களது சிறுகைகளைப் பற்றி தகைசார் சான்றோர்கள் எழுதத் தொடங்கி வைக்கும் ‘அகரம் எழுதல்’ எனும் புதிய நிகழ்வரங்கம் நடைமுறையாகியுள்ளது.

ஆண்டு தோறும் பங்கேற்கும் தகைசார் வல்லுனர்கள் பங்கேற்கும் சிறப்பு ஆய்வரங்கம் தனித்துவமான நிகழ்வரங்கமாகியுள்ளது.

சமூகப் பிரக்ஞையுடைய தன்னலமற்ற தன்னார்வத் தொண்டர்களாலும் மதிப்பான ஆர்வலர்களாலும் இந்நிகழ்வு உலகமெங்கும் வியாபிக்க ஊக்கமளிக்கிறது.

இம்முறை நிகழ்வில் தன்னார்வத்துடன் தமிழர் சங்கங்களான CDAN, ASCES, REDA, LIFT, VSV கலைக்கூடம், அவதாரம், தமிழ் அகம், நிருத்தியாலயம், சுருதி லயா என்பவற்றுடன் சிலம்புச் சங்கம் கைகோர்த்து பத்து சங்கங்களாக மற்றும் குடும்பங்கள், வியாபார நிறுவனங்கள் இணைந்ததாக முன்னெடுத்தது.

– சிலம்புச் சங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *