மேலும்

ஐ.நாவில் கொடுத்த வாக்குறுதியை சிறிலங்கா காப்பாற்ற வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

HRWபோர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள் முக்கிய பங்காற்றுவதை உறுதிப்படுத்துவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் பிபிசிக்கு அளித்திருந்த செவ்வியில், போர்க்கால குற்றங்கள் குறித்து விசாரிக்கும் உள்நாட்டுப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கமாட்டேன் என்றும், தமது உள்நாட்டு விவகாரங்களை தாமே தீர்த்துக் கொள்வதாகவும் அதில் வெளிநாட்டுத் தலையீடுகள் தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நியூயோர்க்கைத் தளமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையிலேயே, போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள் முக்கிய பங்காற்றுவதை உறுதிப்படுத்துவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ்,

“நீதி, பொறுப்புக்கூறலில் அனைத்துலக தலையீட்டைக் கோரிய சிறிலங்கா, இப்போது அதிலிருந்து பின்வாங்குகிறது.

போர்க்குற்ற தீர்ப்பாயத்தில் அனைத்துலக பங்களிப்புத் தொடர்பாக தெளிவற்ற வாக்குறுதியை ஐ.நாவுக்கு வழங்கவில்லை என்பதை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் உறுதியான நிலைப்பாடு அது.

இந்த முக்கியமான தீர்மானம் முறைப்படி நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டியது, கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுடன் நெருங்கிப் பணியாற்றிய நாடுகளின் பொறுப்பாகும்.

நீதிக்கான அவர்களின் நம்பிக்கை அரசியல் கணக்கீடுகளின் அடிப்படையில் கைவிடப்பட்டது என்று போரில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உணர்ந்தால், மைத்திரிபால சிறிசேன நிர்வாகத்தினால் நிறைவேற்றப்பட்ட உண்மையான உரிமைகளின் வெற்றிகள் வேகமாக மங்கி விடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *