மேலும்

சர்ச்சையில் சிக்கியுள்ள வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம்

homeபோரினால் இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள 65,000 வீடுகள் அமைக்கும் திட்டம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டுள்ளன.

அதாவது வீட்டின் அளவுத் திட்டம், வடிவமைப்பு, பயனாளிகள் தெரிவு, ஒரு வீட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக சமூக அமைப்புக்கள் கேள்வியெழுப்பியுள்ளன.

ஒவ்வொரு வீட்டுக்கும் 2.1மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். இதற்கான வடிவமைப்பு ஒப்பந்தகாரர்களுடன் இணைந்து தயாரிக்கப்படும். ஒவ்வொரு வீடுகளும் 520 சதுர அடி பரப்பைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கான நிதியில் தொலைக்காட்சி, சில தளபாடங்கள் மற்றும் சூரிய ஒளிச் சேகரிப்பான் (சோலர்) போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘இவற்றுக்கப்பால் அரசாங்கத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்திற்கான செலவு தெளிவற்றதாக உள்ளது. இந்திய வீட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையின் நான்கு மடங்கு நிதி சிறிலங்கா அரசாங்கத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்காக ஓதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட அல்லது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டுத் திட்டங்களை விட தற்போது மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள இந்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி அதிகமாகும்’ என துறைசார் வல்லுனர்கள் மற்றும் ஆய்வாளர்களால் அனுசரணையுடன் சிவில் சமூக அமைப்புக்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான வேறுபாடுகள் சமூகங்கள் மத்தியில் குழப்பங்களையும் சமத்துவமின்மையையும் பல்வேறு நியமங்களையும் உருவாக்கும் என இந்த அறிக்கை எச்சரித்துள்ளது. அபிவிருத்தி ஒத்துழைப்பிற்கான சுவிஸ் அமைப்பின் அனுசரணையுடன் வறுமை ஆய்வு மையத்தால் 2013 தொடக்கம் 2015 இற்கு இடையிலான காலப்பகுதியில் வீட்டுத் திட்டப் பயனாளிகள் மத்தியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

‘இடம்பெயர்ந்த மக்களுக்கான ரூபா 550,000 வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை ஆராய்ந்த போது இதன் முதற்கட்டத்தில் இரண்டு பயனாளிகள் மட்டும் ஒரு மில்லியனுக்கும் மேல் செலவு செய்து தமது வீடுகளைப் புனரமைத்துள்ளனர். இதேபோன்று இரண்டாம் கட்டத்தில் மூன்று பயனாளிகள் மாத்திரம் ஒரு மில்லியனுக்கு மேல் செலவு செய்து தமது வீடுகளைப் புனரமைத்துள்ளனர்’ என வறுமை ஆய்வுக்கான மையத்தின் மூத்த ஆய்வாளர் வகிசா குணசேகர தெரிவித்துள்ளார்.

மில்லியன் ரூபாக்கள் செலவில் சிறந்த வீட்டைக் கட்டமுடியுமாயின் ஏனைய நிதியை மக்களின் வாழ்வாதரம் மற்றும் அவசியமான தேவைகளுக்காக முதலீடு செய்ய முடியும் என்பது சிவில் சமூக அமைப்புக்களின் கருத்தாகும். வீடுகளை நிர்மாணிப்பதற்கு உள்ளுர் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் போது வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். மாறாக தொலைக்காட்சிகள் மற்றும் சூரியஒளிச் சேகரிப்பான்கள் போன்றவற்றை இறக்குமதி செய்யும் போது இதற்கான செலவு அதிகரிக்கும்.

இவற்றுக்குப் பதிலாக பயனாளிகளுக்கு ஒரு மில்லியன் செலவில் நல்ல வீட்டை நிர்மாணிப்பதற்கும் ஏனைய நிதியை அவர்களது வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வழங்கும் போது உள்ளுர் பொருளாதாரம் விருத்தியடைவதுடன் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

‘போருக்குப் பின்னான கடந்த சில ஆண்டுகளில் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கின் முதன்மைப் பொருளாதாரமான விவசாயம் மற்றும் மீன்பிடி போன்றவற்றின் பாரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம் சரிவடைந்துள்ளது’ என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் பொருளியலாளரான அகிலன் கதிர்காமர் தெரிவித்தார்.

‘இந்தியா மற்றும் சுவிஸ் போன்ற பல உலக நாடுகளின் நிதியுதவியுடனான வீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போது மேசன் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கான கேள்வி அதிகரித்தது. வீடுகள் புனரமைப்பதன் மூலம் பெறப்பட்ட வருவாய் உள்ளுர் மக்களின் பொருளாதார உயர்வுக்கு வழிவகுத்தது’ என கதிர்காமர் குறிப்பிட்டார்.

‘அரச நிதியுடன் வெளிநாட்டு ஒப்பந்தகாரர் மூலம் 65,000 வீடுகள் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதானது உள்ளுர் மக்களின் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும்’ என கதிர்காமர் சுட்டிக்காட்டுகிறார்.

‘கடந்த காலங்களில் வீடுகளை நிர்மாணிப்பதன் மூலம் உள்ளுர் மேசன்மார் மற்றும் கூலியாட்கள் பெற்று வந்த சம்பளமானது உள்நாட்டு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தியது. ஆனால் தற்போது வெளிநாட்டு ஒப்பந்தகாரரிடம் நிர்மாணிப்புப் பணியை ஒப்படைப்பதானது பெருமளவு சிறிலங்கா அரச நிதி வெளிநாட்டைச் சென்றடைவதற்கான கெட்டவாய்ப்பாகும். இதனால் இந்த வெளிநாட்டு ஒப்பந்தகாரர் இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்’ என கதிர்காமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இதற்கப்பால், வீடுகளைக் கட்டுவதுடன் தொடர்புபட்ட சீற் மற்றும் ஒடு தயாரிப்புத் தொழிற்சாலைகள், தச்சுத் தொழிற்கூடங்கள் போன்றனவும் பாதிக்கப்படுகின்றன. ஆகவே சிறந்த முறையில் மக்களின் பங்களிப்புடன் உள்ளுர் தொழில் வளங்களைப் பயன்படுத்தி இந்த வீடுகளைப் புனரமைப்பதற்கான திட்டத்தை சிறிலங்கா அரசு முன்னெடுக்குமாயின் உள்ளுர் பொருளாதாரம் செழிப்படையும்’ என அரசியல் பொருளாதார ஆய்வாளர் கதிர்காமர் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறெனினும், இந்திய மற்றும் சுவிஸ் வீட்டுத் திட்டப் பயனாளிகள் தமது வீடுகளை ரூபா 650,000 இற்குள் முழுமைப்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதனால் இவர்கள் கடனாளிகளாக மாறியுள்ளதாகவும் வறுமை ஆய்வு மையம் தளது ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாகவே சிறிலங்கா அரசாங்கமானது ‘ஒப்பந்தகாரர்’ மூலமாக வீட்டுத் திட்டத்தை நிர்மாணிப்பதெனத் தீர்மானித்துள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

‘பயனாளிகள் பங்களிப்புடனான வீட்டுத் திட்டம் தோல்வியுற்றுள்ளது. ஏனெனில் இதனால் மக்கள் கடனாளிகளாக மாறியுள்ளனர்’ என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘வடக்கு கிழக்கில் நிலவும் வீட்டுத் திட்டத்துடன் தொடர்புபட்ட கடன் பிரச்சினைக்கு வேறு பல காரணங்களும் உள்ளன. அதாவது மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படாமை, நிதிச் சுரண்டல்கள் காணப்படுதல், பாதுகாப்பின்மை போன்றனவும் மக்களின் கடன்நிலைக்குக் காரணமாகும். ஆகவே பயனாளிகளின் பங்களிப்புடன் வீடுகள் புனரமைக்கப்படுதல் மாத்திரம் இதற்கான காரணமல்ல’ எனவும் சிவில் சமூக அமைப்புக்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது தனக்குச் சார்பான ஒப்பந்தகாரரை, அவசர அவசரமாகத் தெரிவு செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. வடக்கு கிழக்கில் 65,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு 12 நாட்களின் பின்னர் பத்திரிகைகளில் இதற்கான கோரல்கள் விடுக்கப்பட்டன.

வீடுகளை நிர்மாணித்து வழங்க விரும்பும் நிறுவனங்கள் நிதி ஏற்பாடுகள் தொடர்பில் உடன்பாடுகளை எட்ட வேண்டும் எனவும் இத்திட்டமானது ஐந்து ஆண்டுகளில் பூரணப்படுத்தப்பட வேண்டும் எனவும் பத்திரிகை விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டது.

இந்த வீடுகள் ஒவ்வொன்றும் விருந்தினர் அறை, சாப்பாட்டு அறை, இரண்டு படுக்கை அறைகள், சமையலறை மற்றும் தாழ்வாரம் போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் விளம்பரத்தில் கூறப்பட்டது. விளம்பரம் பிரசுரிக்கப்பட்டு 24 நாட்களின் பின்னர் 35 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. இதில் 15 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சானது இவ்வீட்டுத் திட்டத்திற்கான கோரல்களை வழங்குவதற்கு 25 நாட்களை அனுமதித்திருந்தது. ஆனால் இதற்கான கோரல்கள் பெறப்பட்ட பின்னர் இத்திட்டமானது நான்கு தொடக்கம் ஐந்து ஆண்டுகளுக்குள் பூரணப்படுத்தப்பட வேண்டும் என அறிவித்தது. இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஏலக்காரர்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட போது மூன்று வேலை நாட்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இறுதியில் எட்டு விண்ணப்பங்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். ஆனால் இதற்கான கோரலை லக்சம்பேர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ArcelorMittal என்கின்ற நிறுவனம் பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘வடக்கு கிழக்கிற்காக 65,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதமளவில் அமைச்சர் எம்மிடம் தெரிவித்திருந்தார்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘ஆகவே இதற்கான கோரல் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதற்கு முன்னரே புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சானது 65,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை யாருடன் மேற்கொள்வதெனத் தீர்மானித்து விட்டது. இந்நிலையில் இவ்வாறான ஒப்பந்தங்கள் கோரப்பட்டதானது அனைவரையும் முட்டாளாக்கும் செயல்’ என சுமந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் லக்சம்பேர்க் போன்ற நாடுகளில் செயற்பட்ட ArcelorMittal நிறுவனமானது இந்தியாவின் பல்தேசிய இரும்பு உற்பத்தி நிறுவனமான ‘Mittal Steel’ நிறுவனத்தால் 2006ல் பொறுப்பேற்கப்பட்டது. இதன்பின்னரே இந்த நிறுவனம் ArcelorMittal என்கின்ற பெயரைப் பெற்றது.

உலகின் முதன்மையான இரும்பு மற்றும் அகழ்வு நிறுவனம் என Arcelor Mittal நிறுவனம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. சிறிலங்காவில் முன்னர் கண்டிராத நூலிழையில் ஆக்கப்பட்ட இரும்புகளால் வடிவமைக்கப்பட்ட வீடுகளை இந்நிறுவனம் தனது இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளது.

‘இந்த வீடுகள் உயர் அனைத்துலக நியமங்களின் பிரகாரம் கட்டப்படும். இந்த வீடுகள் உலகின் மிகச் சிறந்த வீடுகளாக காணப்படும்’ என சுவாமிநாதன் முன்னர் தெரிவித்திருந்தார் எனக் கூறப்படுகிறது. எனினும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் இறுதி ஒப்பந்தகாரர் யார் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் சுவாமிநாதன் கூறுகிறார்.

மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வீட்டுத் திட்டப் பயனாளிகள் தெரிவு செய்யப்படுவர் எனவும் இடம்பெயர்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக ‘சிலர்’ கூறத் தாம் கேள்விப்பட்டுள்ளதாகவும் ஆனால் தமக்கு இத்திட்டம் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் இன்னமும் கிடைக்கப் பெறவில்லை எனவும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

வழிமூலம்       – sundaytimes
ஆங்கிலத்தில் – Namini Wijedasa
மொழியாக்கம்- நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *