மேலும்

தெல்லிப்பழையில் 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்

rajitha-senarathnaதெல்லிப்பழைப் பகுதியில்,  இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு அமைச்சவையில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடந்த, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில்-  தெல்லிப்பழை பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் 5840 ஏக்கர் காணிகளில், 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இங்கு,2050 குடும்பங்கள் மீளக்குடியேற்றப்படவுள்ளன.

நல்லிணக்கம் மற்றும் நிரந்தர சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு,  இடம்பெயர்ந்துள்ள மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவது முக்கியம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளிலும் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் குறிப்பிடத்தக்களவு மக்கள் இன்னும் நலன்புரி நிலையங்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

மீள்குடியேற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில்- தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், அந்த மக்களை கட்டம் கட்டமாக மீள் குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இதற்கமைய, தெல்லிப்பழையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 984 ஏக்கர் காணி விடுவிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *