மேலும்

கொழும்பு ஏற்கும் அளவுக்கு தீர்மான வரைவை பலவீனப்படுத்தும் இந்தியா? – இறுதிநேரத்தில் களமிறங்கும்

India-emblemசிறிலங்கா தொடர்பாக ஜெனிவாவில் பரந்தளவிலான சம்மதத்துடன் கூடிய தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று நம்பகரமான புதுடெல்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பரந்தளவிலான சம்மதத்துடன் கூடிய, பிளவுபடுத்தாத தீர்மானம் எதையும், இந்தியா ஆதரிக்கும் என்றும், அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவ்வாறாயின், அது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துக்கு ஏற்புடையதான தீர்மானமானமாக இருந்தால் இந்தியா ஆதரிக்கும் என்று அர்த்தமா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அந்த வட்டாரங்கள், கொழும்பு வரைவை ஏற்றுக் கொண்டால், அது சம்மதிக்கும் தீர்மானம் என்றே அர்த்தமாகும். அதனை சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் கூட ஆதரிக்கும் என்று தெரிவித்தன.

கடந்த 15ஆம் நாள் புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்த போது, ஜெனிவா நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

அப்போது, கட்டுப்படுத்துகின்ற தீர்மானம் ஒன்று சிறிலங்காவுக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமரிடம் குறிப்பிட்டார் என்று, அந்தப் பேச்சுக்களுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த நேரத்தில், தீர்மானத்தின் ஆரம்ப வரைவு பரிமாறப்படவில்லை.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து, ஜெனிவாவில் சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவின் உரையில் எதிரொலித்தது. அவர் அமெரிக்கா முன்வைத்த தீர்மான வரைவை நிராகரித்திருந்தார்.

இந்தியா முன்மொழியப்பட்ட வரைவில் திருத்தங்களை முன்வைக்கும் செயற்பாடுகளை இன்னமும் ஆரம்பிக்கவில்லை.

வரும் செப்ரெம்பர் 30ஆம் நாள், இறுதி தீர்மான வரைவு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக, பல வரைவுகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயல்முறையில் இறுதி நாட்களில் தான் நாம் ஆழமாக ஈடுபடுவது வழக்கம் என்று புதுடெல்லி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *