மேலும்

இரண்டாவது தீர்மான வரைவு இன்று வெளியாகும்- வெள்ளியன்று மீண்டும் கலந்துரையாடல்

eagle-flag-usaஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் தீர்மான வரைவு அடுத்த வாரமே சமர்ப்பிக்கப்படும் என்று ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனிதஉரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், தீர்மான வரைவு ஒன்றை, அமெரிக்கா  கடந்தவாரம் உறுப்பு நாடுகளிடம் முன்வைத்திருந்தது.

இந்த தீர்மான வரைவு குறித்து, நேற்றும், நேற்று முன்தினமும், ஜெனிவாவில் இரண்டு முறைசாரா கூட்டங்களை நடத்திய அமெரிக்கா, உறுப்பு நாடுகள், மனித உரிமை அமைப்புகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தது.

இந்தக் கூட்டங்களின் போது, சிறிலங்காவுக்கு ஆதரவான சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகள், தீர்மான வரைவு மென்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அனைத்துலக தலையீட்டுக்கு வழிவகுக்கும் பந்திகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

அதேவேளை, ஐரோப்பிய நாடுகளும், கனடாவும், தீர்மான வரைவுக்கு பலமான ஆதரவை வெளிப்படுத்தியதுடன், அதனை மேலும் வலுப்படுத்தவும் கோரின.

இந்தநிலையில், நேற்றைய இரண்டாவது கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

இந்தநிலையில், அமெரிக்கா திருத்தப்பட்ட இரண்டாவது தீர்மான வரைவை இன்று உறுப்பு நாடுகள் மத்தியில் விநியோகிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இன்று ஐ.நாவுக்கு விடுமுறை நாள் என்பதால், நாளேயே இதுகுறித்து உறுப்பு நாடுகள் ஆராயும்.

அனைத்து நாடுகளின் ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்ற விரும்பும் அமெரிக்கா, மீண்டும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மற்றொரு முறைசாராக் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்துள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தின் 22ஆவது அறையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியில் இருந்து 4 மணி வரை இந்த முறைசாரா கலந்துரையாடலை நடத்த அமெரிக்கா ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் பின்னரே, அமெரிக்கா இறுதி தீர்மான வரைவை தயாரித்து, அடுத்த வாரமே அதனைப் பேரவையில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நாளை அல்லது நாளை மறுநாள் அமெரிக்க தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *