மேலும்

விசுவாசிகளாலேயே தோற்கடிக்கப்பட்ட மகிந்த – நடந்தது என்ன? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Mahinda-Rajapaksaமகிந்தவின் விசுவாசிகளே மகிந்தவின் தேர்தல் தோல்விக்குக் காரணம். தேர்தல் பரப்புரைக்கு தலைமை தாங்குவதற்கு மைத்திரியை மகிந்த அனுமதித்திருந்தால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும். மகிந்தவின் விசுவாசிகள் மகிந்தவை மட்டுமல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தோற்கடித்துள்ளனர்.

இவ்வாறு சிலோன் ரூடே நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் உபுல் ஜோசப் பெர்னான்டோ. இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

தேர்தலுக்கு முன்னர் நுகேகொடவில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால்  நடத்தப்பட்டபொதுக் கூட்டம் ஒன்றில் மகிந்த 5.8 மில்லியன் வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் என பெருமையுடன் அறிவித்தனர். இந்நிலையில் மகிந்த நான்கு மில்லியன் வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொள்வார் என ரணில் விக்கிரமசிங்க சவால் விடுத்தார்.

இதனை எதிர்த்து மகிந்த எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்காத போதிலும் அவரது ஆதரவாளர்கள் ரணிலுக்கு எதிராக சவால் விடுத்தனர். மகிந்த தேர்தலில் போட்டியிட்டால் அது தனக்கு ஆபத்தாக இருக்கும் என ரணில் அச்சமுறுவதாக மகிந்தவின் ஆதரவாளர்கள் விமர்சித்தனர்.

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது, ‘தேர்தலில் போட்டியிடுங்கள். பயந்து ஓடவேண்டாம்’ என ரணில், மகிந்தவிடம் தெரிவித்தார். இந்த சவாலை அடுத்து, மகிந்த வாய் திறந்தார்.

‘ரணில் இரு தடவைகள் எனக்குப் பயந்து தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தடவை அவர் என்னிடமிருந்து தப்பிவிட முடியாது. இவர் இத்தேர்தலில் என்னிடம் நிச்சயம் தோல்வியுறுவார்’ என மகிந்த அறிவித்தார். இக்கருத்தை மகிந்த வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருந்தார்.

இருபது தேர்தல்களில் தோல்வியுற்ற ஒருவர் தன்னிடம் சவால் விடுவதாகவும் மகிந்த சுட்டிக்காட்டியிருந்தார். இந்த விதத்திலேயே மகிந்த தேர்தலில் களமிறங்கினார்.

ரணில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதாலேயே மகிந்தவும் இதில் போட்டியிடத் தீர்மானித்தார். சிறிலங்கா அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற மகிந்த ராஜபக்ச, உதய கமன்பில மற்றும் காமினி லொக்குகே ஆகிய இருவரும் அவரைக் குழப்பும் வரையில் அமைதியாகவே இருந்தார். இதன்பின்னர் விமல் வீரவன்சவும் வாசுதேவவும் இந்த அணியில் இணைந்து கொண்டனர்.

‘ஐயா, நீங்கள் தெற்கு சிங்கள வாக்குகளின் ஊடாக வெற்றி பெற்றீர்கள். அடுத்த பொதுத் தேர்தலில் ரணில் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள மாட்டார். அந்த வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே கிடைக்கும். இத்தேர்தல் சிங்கள பௌத்த வாக்குகளை அடிப்படையாகக் கொண்டதாகும். சிங்கள பௌத்த வாக்காளர்கள் ரணிலை வெறுக்கின்றனர். அதிபர் தேர்தலில் நீங்கள் பெற்றுக்கொண்ட 5.8 மில்லியன் வாக்குகளைப் பெற்றுக் கொண்டால் தேர்தலை இலகுவாக வெல்வீர்கள்’ என மகிந்தவின் கூட்டாளிகள் மகிந்தவிற்கு உந்துதல் வழங்கினர்.

மகிந்தவின் சகபாடிகளின் கணிப்பீட்டிற்கு அமைவாகவே மகிந்த தேர்தலில் தான் வெற்றி பெறுவேன் என்கின்ற அதீத நம்பிக்கையுடன் களமிறங்கினார். இதனைத் தொடர்ந்து தனக்கு ஆதரவான கூட்டங்களை ஒழுங்குபடுத்துமாறு மகிந்த தனது ஆலோசகர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரைக்கு மைத்திரி தலைமை தாங்கினால் தாம் மகிந்த தலைமையிலான பிறிதொரு கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிடுவதென்கின்ற தீர்மானத்தை மகிந்தவின் ஆலோசகர்கள் முன்வைத்தனர்.

மகிந்தவிற்கு மைத்திரி தேர்தலில் போட்டியிட நியமனத்தை வழங்கா விட்டால் பிறிதொரு கட்சியின் கீழ் போட்டியிட்டு மகிந்தவுக்குச் சொந்தமான வாக்குகளுடன் நாடாளுமன்றில் நுழைவதென இவர்கள் தீர்மானித்தனர். இந்தவகையில் நாடு பூராவும் மகிந்தவுக்கு ஆதரவான கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன.

‘மகிந்தவுடன் அணிசேர்வோம்’ என்ற எண்ணக்கருவின் கீழ் தேர்தல் கூட்டங்கள் நடத்தப்பட்டன. உள்ளுர் அரசாங்க உறுப்பினர்களின் ஊடாக மகிந்தவுக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டுவதற்காக நிதி வழங்கப்பட்டது. நாடு முழுவதிலும் மகிந்தவுக்கு ஆதரவான வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மக்கள் கருதுமளவுக்கு மகிந்தவின் விசுவாசிகளால் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

மகிந்த தற்போது 5.8 மில்லியன் வாக்காளர்களைத் தன் வசம் வைத்திருப்பதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டப்பட்டது. இதனுடன் மேலும் ஒரு மில்லியன் வாக்குகளைத் தான் வழங்குவதாக விமல் வீரவன்ச வாக்குறுதி அளித்தார். இதனை நுகேகொடவில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் விமல் தெரிவித்திருந்தார்.

விமல் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக தனது கட்சி உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்குவதிலேயே குறியாக இருந்தார். இதன்மூலம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் தோற்கடிக்கப்பட்டு இவர்களுக்குப் பதிலாக விமலின் கட்சி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனாலேயே மகிந்தவின் 5.8 மில்லியன் வாக்குகள் குறைவடைந்து 4.7 மில்லியன் வாக்குகளாக மாறின. ஆகவே விமல் மகிந்தவுக்கு ஒரு மில்லியன் வாக்குகளை அதிகரிப்பதற்கு துணைபோகவில்லை. மாறாக ஒரு மில்லியன் வாக்குகளைக் குறைப்பதற்கான ஏற்பாடுகளையே விமல் முன்னெடுத்திருந்தார்.

மகிந்தவின் விசுவாசிகளே மகிந்தவின் தேர்தல் தோல்விக்குக் காரணமாகும்.

மைத்திரி தேர்தல் பரப்புரையைத் தலைமை தாங்குவதற்கு மகிந்த அனுமதித்திருந்தால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும். ஆகவே மகிந்தவின் விசுவாசிகள் மகிந்தவை மட்டுமல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தேர்தலில் தோல்வியுறச் செய்துள்ளனர்.

இதனை அறிந்திராத சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் ‘மகிந்தவுடன் அணி சேர்வோம்’ என்ற எண்ணக்கருவிற்கு ஆதரவளித்தனர். இதனால் மகிந்த தமக்காக அரசாங்கத்தை அமைப்பார் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்த மைத்திரியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் தோல்வியுற்றனர்.

இறுதியில் மகிந்தவும் அவரது அணியினரும் புலிகள், தேசத் துரோகி மற்றும் அமெரிக்காவின் கைக்கூலி எனத் தம்மால் பெயர்சூட்டப்பட்ட ரணிலால் தோல்வியுற்றனர். மகிந்தவின் தந்திரோபாயத்தை ரணில் வெற்றி கொண்டார்.

மகிந்த தன்னுடன் இருப்பதாகக் கூறப்பட்ட அலாவுதீனின் விளக்கை அணைப்பதில் ரணில் வெற்றி கொண்டார்.  மகிந்தவின் கையில் குவிந்திருந்த ‘சூனியப் பந்தின்’ அதிகாரத்தை ரணில் நிர்மூலமாக்கியுள்ளார்.

மகிந்த 2010ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 60 சதவீத வெற்றிகளைப் பெற்றது. ஐ.தே.க 30 சதவீத வெற்றியைப் பெற்றது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் மகிந்த போட்டியிட்டார். ஆனால் ஐ.ம.சு.மு 4.7 மில்லியன் வாக்குகளை மட்டுமே பெற்றது.

ரணில் இத்தேர்தல் மூலம் தனது வாக்கு வங்கியை 5.1 மில்லியனாக உயர்த்தியுள்ளார். இராணுவக் குடும்பங்கள் அதிகம் வாழும் குருநாகலவில் தான் வெற்றி பெறுவேன் என மகிந்த கருதினார். இந்த மாவட்டத்தில் தான் சிறந்த வெற்றியைப் பெற்றுக் கொள்வேன் என மகிந்த நம்பினார்.

மகிந்தவின் குருநாகல மாவட்டத்திற்கான தேர்தல் பரப்புரை கோத்தாவால் மேற்கொள்ளப்பட்டது. குருநாகல மாவட்டத்தில் வாழும் இராணுவக் குடும்பத்தினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே கோத்தா தேர்தல் பரப்புரையில் களமிறக்கப்பட்டார்.

குருநாகல மாவட்டத்தில் ஐ.தே.க சார்பில் அகில விராஜ் போட்டியிட்டார். இந்நிலையில் குருநாகலவில் ஐ.தே.க தோல்வியுறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். மகிந்தவுடன் ஒப்பிடுகையில் அகில மிகவும் அற்பமானவர் எனக் கருதப்பட்டார்.

2010ல், மகிந்த போட்டியிடாது குருநாகல மாவட்டத்தில் ஐ.ம.சு.மு 63.84 சதவீத வாக்குகளைப் பெற்றது. இதில் ஐ.தே.க 31.78 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டது. இத்தேர்தலில் குருநாகல மாவட்டத்தின் 10 தேர்தல் தொகுதிகளில் ஐ.ம.சு.மு வெற்றி பெற்றது. ஐ.தே.க ஐந்து தேர்தல் தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

ஆனால் இந்தத்தடவை மகிந்த, குருநாகல மாவட்டத்தில் போட்டியிட்டு 49.26 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார். 2010 தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவாகும். இம்முறை குருநாகல மாவட்டத்தில் போட்டியிட்ட அகில ஐ.தே.க வின் வாக்கு வீதத்தை 45.85 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.

ஐ.ம.சு.மு பெற்றுக் கொண்ட பத்து ஆசனங்கள் எட்டு ஆசனங்களாகக் குறைவடைந்தன. இதேவேளையில் ஐ.தே.கவின் ஆசனங்கள் ஐந்திலிருந்து ஏழாக அதிகரித்துள்ளன.

இவ்வாறான தேர்தல் பெறுபேறுகள் மகிந்தவின் ஆதரவு குறைவடைந்துள்ளதையே சுட்டிக்காட்டுகின்றன. இறுதி அதிபர் தேர்தலில், குருநாகல மாவட்டத்தில் மகிந்த 556,868 வாக்குகளைப் பெற்றிருந்தார். இது பொதுத் தேர்தலில் 474,124 ஆகக் குறைவடைந்துள்ளது. குருநாகலவில் மகிந்த படுதோல்வியடைந்துள்ளார்.

போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் மக்கள் மத்தியில் மகிந்தவிற்கான ஆதரவு அதிகரித்திருந்தது என்பது உண்மையே. ஆனால் இது கடந்த அதிபர் தேர்தலின் பின்னர் குறைவடைந்துள்ளது. மகிந்தவிற்கான ஆதரவு ஆகஸ்ட் 17 பொதுத் தேர்தலின் பின்னர் முற்றிலும் குறைவடைந்துள்ளது.

ஆரம்ப நாட்களில், சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கும் மக்கள் தமது அதிக ஆதரவை வழங்கியிருந்தனர். சிறிமாவோக்கு கிடைத்துள்ள மக்களின் ஆதரவைப் பார்த்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன அச்சங்கொண்டிருந்தார். இதனால் 1982 அதிபர் தேர்தலில் சிறிமாவோவைப் போட்டியிடாது தடுப்பதற்காக இவரது சிவில் உரிமையை ஜே.ஆர் பறித்தார்.

மைத்திரியும் ரணிலும் மகிந்தவின் விடயத்தில் ஜே.ஆரின் முறையைப் பின்பற்றுவார்கள் என எல்லோரும் நினைத்தனர். ஆனால் மைத்திரி ஒருபோதும் இதனை நடைமுறைப்படுத்தவில்லை. பதிலாக, மைத்திரி, மகிந்தவிற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் நியமனத்தை வழங்கினார்.

ஜே.ஆர், சிறிமாவைத் தோற்கடிக்க முடியாது என அச்சங் கொண்டிருந்தார். ஆனால் ரணில் எவ்வித அச்சமுமின்றி மகிந்தவை எதிர்கொண்டார். ரணில் இதனை சிங்கள பௌத்த வாக்குகளின் ஊடாக நிறைவேற்றினார்.

இது மிகவும் போட்டிமிக்க தேர்தல் எனவும் இதனாலேயே ரணில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் மகிந்த விசுவாசிகள் கூறினார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியுற்றுவிட்டது என்பதற்கான பொறுப்பை எடுத்துக் கொள்ளாது அதனைத் தட்டிக்கழிப்பதற்கான மூலோபாயமாகவே இது நோக்கப்படுகிறது.

1994ல், ஐ.தே.கவும் இதே நடைமுறையைப் பின்பற்றியது. அந்த ஆண்டு சந்திரிகா தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் இவர் 105 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டார். 17 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த ஐ.தே.க 94 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது.

சந்திரிகாவின் மக்கள் கூட்டணி 3,887,823 வாக்குகளையும் ஐ.தே.க 3,498,453 வாக்குகளையும் பெற்றுக் கொண்டன. நாடாளுமன்றில் சந்திரிகா ஒரு ஆசனத்தை மட்டுமே அதிகம் பெற்றிருந்தார். எந்தவேளையிலும் சந்திரிகாவின் நாடாளுமன்றைத் தாம் கலைப்போம் என ஐ.தே.க சூளுரைத்தது.

1997 உள்ளுராட்சித் தேர்தலில் ஐ.தே.க தோல்வியுற்றது. இரண்டு பத்தாண்டுகளாக ஐ.தே.க எதிர்க்கட்சியாக இருந்துள்ளது. இன்று நாடாளுமன்றில் ஐ.தே.க 106 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐ.ம.சு.மு 95 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதில் வெற்றியாளருக்கும் தோல்வியாளருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 366,258 ஆகும்.

ஆகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சி இனிவருங் காலங்களில் முற்றிலும் தோல்வியுறுமா? ஆனாலும் இதனை இப்போது எதிர்வு கூறமுடியாது. இதற்கான காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

1994ல் சிறிலங்காவின் அதிபர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவராவார். இன்று சிறிலங்காவின் அதிபராக இருப்பவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உள்ளார். மாறாக ஐ.தே.க தலைவர் இன்று அதிபராக பதவி வகிக்கவில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கான சீட்டிழுப்பு வெற்றியாக இது அமைந்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மகிந்தவினதும் அவரின் விசுவாசிகளின் பிடியிலிருந்தும் தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *