மேலும்

தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய அதிபர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மூவர் கைதாகின்றனர்

wasim thajudeenரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ள, சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் மூவர் கைது செய்யப்படவுள்ளனர்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை, தாஜுதீன் கொலைச் சதித்திட்டம் தொடர்பாக அறிந்திருந்த ஒருவர், தற்போது லண்டனில் வசிப்பதாகவும் சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சந்தேக நபர்கள் இத்தாலிக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. பெரும்பாலும், அந்தச் செய்தி லண்டனில் உள்ளவர் பற்றியதாகவே இருக்கலாம். இந்தக் கொலை பற்றி அறிந்திருந்த அவர் ஒரு சிவிலியன்.

ஆனால், இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் பெரும்பாலும் சிறிலங்காவில் தான் இருக்கின்றனர்.அவர்களை நாம் பின்தொடர்கிறோம். அவர்களால் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியாது.” என்று விசாரணைகளில் தொடர்புடைய சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூன்று சந்தேகநபர்களை காவல்துறையினால்  கைது செய்ய முடியும்.

லண்டனில் உள்ள சந்தேக நபர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு, மோசமான வரலாற்றைக் கொண்ட முன்னாள் இராஜதந்திரி ஒருவரே உதவியுள்ளார். அவரும் கூட ஏனைய பல குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் பாதுகாப்புப் பிரிவுகளில் உறுப்பினராக இருந்தவர் அல்ல.” என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தாஜுதீன் தொடர்பாக அதிபர் பாதுகாப்புப் பிரிவின் உணவகத்தில், கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அதில் முன்னைய ஆடசியாளர்களுக்கு நெரக்கமான உயர்மட்ட காவல்துறை அதிகாரி பங்கேற்றிருந்ததாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குத் தெரிய வந்திருந்தது.

அதேவேளை, தாஜுதீன் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் வாகன விபத்து இடம்பெற்றிருக்கவில்லை என்றும் கண்டறியப்பட்டது.

தாஜுதீன் சடலம், சாரதியின் ஆசனத்தில் கிடக்கவில்லை என்றும், வாகனத்தின் முன்பக்க ஆசனத்தில் தான் கிடந்ததாகவும் உயர்மட்ட காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து நடந்தவுடன் வாகனம் தீப்பற்றியதாக கூறப்பட்ட போதிலும், அப்போது வாகனத்தின் எரிபொருள் கொள்கலனில் பாதி எரிபொருளே இருந்துள்ளது.

கொள்கலனில் பாதி எரிபொருள் இருக்கும் போது அது வெடித்து தீப்பற்ற வாய்ப்பில்லை என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *