மேலும்

இன்று பிரதமராக பதவியேற்கிறார் ரணில் – சிறிமாவோவின் சாதனையை சமப்படுத்துகிறார்

RANILசிறிலங்காவின் புதிய பிரதமராக தேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்கவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.

இதன் மூலம் ஏற்கனவே நான்கு தடவைகள் பிரதமர் பதவியை வகித்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சாதனையை அவர் சமப்படுத்துகிறார்.

கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 106 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அதற்கு அனுமதி அளித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கத்தை அமைக்க ஐதேகவுடன் இணங்கும் புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கையெழுத்திடவுள்ளது.

இந்தநிலையில், இன்று காலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடக்கவுள்ள நிகழ்வில், ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

எனினும், அவருடன் அமைச்சர்கள் எவரும் இன்று பதவியேற்க மாட்டார்கள் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளதால், அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக முடிவெடுக்க காலஅவகாசம் தேவைப்படுவதால், அடுத்தவாரமே அமைச்சர்கள் பதவியேற்பர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை பதவியேற்பு வரும் 24 ஆம் நாள் இடம்பெறும் என்று ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமராக பதவியேற்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மாவட்டத்தில், 500,566 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகபட்ச விருப்பு வாக்கு இதுவாகும்.

இதற்கு முன்னர், 1994 நாடாளுமன்றத் தேர்தலில், சந்திரிகா குமாரதுங்க, 464,588 விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.

அவரது சாதனையை முறியடித்து ரணில் விக்கிரமசிங்க இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்காவின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க 1993ஆம் ஆண்டு மே 7ஆம் நாள் முதல் முறையாக பதவியேற்றிருந்தார்.

சிறிலங்கா அதிபராக இருந்த பிரேமதாச குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பின்னர், பிரதமராக இருந்த டி.பி.விஜேதுங்க அதிபராகப் பதவியேற்றதையடுத்து பிரதமர் பதவி ரணிலுக்கு வழங்கப்பட்டது.

1994 ஓகஸ்ட் 19ஆம் நாள் வரை ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்தார்.

பின்னர், 2001 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, 2001 டிசெம்பர் 9ஆம் நாள் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.

ஆனால், அதிபராக இருந்த சந்திரிகா நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தியதால், 2004 ஏப்ரல் 6ஆம் நாள் அவர் பதவியிழந்தார்.

மூன்றாவது தடவையாக, கடந்த ஜனவரி 8 அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதையடுத்து, மறுநாள் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார் ரணில்.

இப்போது அவர் நான்காவது தடவையாக பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார்.

எனினும், அவர் இதுவரை பதவி வகித்த மூன்று முறையும், ஒரு நாடாளுமன்ற ஆயுள்காலம் முழுவதற்கும் பிரதமர் பதவியில் இருந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா வரலாற்றில் ஏற்கனவே நான்கு முறை பிரதமராக இருந்து சிறிமாவோ பண்டாரநாயக்க சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *