மேலும்

சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட மேற்கு நாடுகள், சீனா விருப்பம்

eu-flagசிறிலங்காவில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் ஒருவர் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,

சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் நியாயமாகவும், அமைதியாகவும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வகையிலும் இடம்பெற்றுள்ளது.

இந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயங்களாக, நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள், நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்துவது மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையான நல்லிணக்கத்துக்கான முக்கிய நடவடிக்கையை மேற்கொள்வது ஆகியன உள்ளன.

இந்த நடவடிக்கைக்ககு எல்லா அரசியல் சக்திகளும் ஆக்கபூர்வமாக பங்களிக்க வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் இணைந்து செயற்படும். சிறிலங்காவின் சமூக பொருளாதார ஜனநாயக அபிவிருத்திக்கு தொடர்ந்து உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உறவை வலுப்படுத்த விரும்பும் சீனா

Chinese Foreign Ministry spokesperson, Hua Chunyingசிறிலங்காவுடனான நட்புறவை வலுப்படுத்தி, மூலோபாயப் பங்காளர் உறவை வலுப்படுத்த, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட சீனா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

பீஜிங்கில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவா சுன்யிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்காவில் நாடாளுமன்றத் தேர்தல் சுமுகமாக நடந்திருக்கிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐதேக வெற்றி பெற்று புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளது. அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய அரசாங்கத்தின் கீழ், சிறிலங்கா சமூக, பொருளாதார ரீதியில் மிகப் பெரிய முன்னேற்றங்களை எட்டும் என்று நம்புகிறோம்.

சோதனையான தருணங்களிலும், சிறிலங்கா – சீனா இடையில் நல்ல உறவு இருந்து வந்துள்ளது.

இருதரப்பு நலன்களின் அடிப்படையிலானதும், இருநாட்டு மக்களின் பொதுவான அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வகையிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு ஒத்துழைப்பு இருந்து வருகிறது.

மரபுவழி நட்புறவை உறுதிப்படுத்தி, பரஸ்பர நன்மை தரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், சீன – சிறிலங்கா மூலோபாய ஒத்துழைப்பு பங்காளர் நிலையை மேலும் புதிய மட்டத்துக்குக் கொண்டு செல்லவும்,  சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

பயணத்தில் இணைந்து பங்கெடுக்கத் தயார் – பிரித்தானியா

UK Foreign Secretary Phillip Hammondநிலையான அமைதி மற்றும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பயணத்தில், சிறிலங்காவுடன் பங்காளராக இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர் பிலிப் ஹமொன்ட்,

“வெற்றி பெற்ற சிறிலங்கா பிரதமருக்கு பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளேன்.

நிலையான அமைதி மற்றும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பயணத்தில், சிறிலங்காவுடன் பங்காளராக இணைந்து செயற்பட பிரித்தானியா தயாராக உள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவுடனும் புதிய அரசாங்கத்துடனும் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இணைந்து செயற்பட எதிர்பார்க்கும் அமெரிக்கா

john kirbiசிறிலங்காவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.

வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய,அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜோன் கிர்பி,

சிறிலங்காவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தையும் மக்களையும் பாராட்டுகின்றோம்.

இதன்மூலம் நாட்டின் ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சிப்படுத்தல் என்பன வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர், சிவில் சமூக அமைப்பினர், சுயாதீன தேர்தலுக்காக தம்மை அர்ப்பணித்த வேட்பாளர்கள் அனைவரையும் பாராட்டுகின்றோம்.

சிறிலங்கா வரலாற்றில் அமைதியான தேர்தல் நடைபெற்றுள்ளது.

அந்தவகையில் சிறிலங்கா அதிபர் பிரதமர் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *