மேலும்

பொறுப்புக்கூறல் குறித்த பேச்சுக்களில் வடக்கு மாகாணசபையின் பங்கேற்பு அவசியம் – ஐ.நா பேச்சாளர்

Stephane-Dujarricபொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்கும் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாணசபையும் உள்ளடக்கப்படுவது அவசியம் என்று ஐ.நா நம்புவதாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் நேற்று செய்தியாளர்களிடம், கருத்து வெளியிட்ட அவர்,

“சிறிலங்கா அரதசாங்கம் மற்றும் மக்களுக்கான ஐ.நாவின் உதவி தொடர்பாக விளக்கங்கள் மற்றும் மேலதிக தகவல்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளேன்.

கடந்த வெள்ளிக்கிழமை, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சிறிலங்கா அரசாங்கம் மற்றும் மக்களின் நடவடிக்கைகளுக்கு, ஐ.நா ஆதரவளிப்பதாக கூறியிருந்தேன்.

சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி, எல்லாப் பங்காளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, பரந்தளவிலான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்க ஐ.நா முன்வந்தது.

சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஐ.நா உதவி தொடர்பான வேலைத்திட்டம் கடந்த ஜூன் மாதம் ஐ.நா வதிவிடப் பிரதிநிதியால் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த வரைவு ஐ.நாவின் சிறிலங்கா பணியக இணையத்தளமான un.lk இல் உள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுதல், தேசிய நல்லிணக்கம், மற்றும் அனைத்துலகத் தரம்வாய்ந்த நம்பகமான நீதிப்பொறிமுறைகளை அபிவிருத்தி செய்தலின் ஊடாக, அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான நிதியத்தின் ஆதரவுடன், சிறிலங்காவில்  நல்லிணக்கச் செயல்முறைகளை முன்னேற்றுவதற்கான ஆரம்ப முயற்சிகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்படுகிறது.

எல்லா முக்கிய பங்காளர்களினதும் பங்கேற்பு ஆலோசனை மற்றும் வெளிப்படைத்தன்மை அடிப்படையிலேயே எப்போதும் ஐ.நாவின் உதவி அமைந்திருக்கும்.

வடக்கு, கிழக்கில், அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டு மீளளிக்கப்பட்ட நிலங்களில் மீள்குடியமர்வுக்கும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை ஒருங்கிணைப்பதற்கும், ஏற்கனவே ஒரு மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக, சிறிலங்கா அரசாங்கம், மற்றும் எல்லா பங்களாளர்களுடனும், ஐ.நாவின் உதவி தொடர்பான விபரங்களை இறுதிப்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை ஐ.நா மேற்கொண்டு வருகிறது.

அனைத்துல தரம்வாய்ந்த நம்பகமான பொறுப்புக்கூறல், நல்லிணக்க  பொறிமுறைகளை உருவாக்குவதற்கான ஐ.நா உதவியும், அதுபோன்றே, உள்ளடக்கிய, பங்கேற்பு, ஆலோசனைச் செயல்முறைக் கொள்கையை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.

இறுதியாக, வடக்கு மாகாணத்தை உள்ளடக்கிய தேசிய அளவிலான  உண்மையான மற்றும் உள்ளடங்கலான கலந்துரையாடல்கள், சிறிலங்கா சூழலில், சரியான மாதிரி ஒன்றுக்கு வருவதற்கு உதவியாக இருக்கும் என்று ஐ.நா நிச்சயம் நம்புகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *